எளிமை ஓர் அழகு

எளிமை ஓர் அழகு
china house
வெயில், மழை போன்ற இயற்கையான விஷயங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வீடு என்பது அவசியமாகிறது. அதற்காகத் தான் வீட்டைக் கட்டுகிறோம். ஆனால் அதை முடிந்த அளவு பாதுகாப்பானதாகக் கட்ட விரும்புகிறோம். அதே நேரத்தில் அது பாதுகாப்பு கொண்டதாக மட்டும் இருந்தால் போதும் என்றோ, அது வெறும் கட்டிடம் என்றோ நினைப்பதில்லை. அதில் கலை ரசனைக்கும் இடம் தர விரும்புகிறோம். அந்தக் கட்டிடம் கண்ணுக்கும் விருந்தாக வேண்டும் என நினைத்துத்தான் செயல்படுகிறோம். ஆகவே வீட்டின் உள்புறங்களில் சுவர்களிலும் கதவுகளிலும் பல அலங்காரங்களைச் செய்வதில் பிரியப்படுகிறோம். அதற்காகவே பிரத்யேகமாகப் பல கட்டிடங்களின் மாதிரியைப் பார்க்கிறோம்.

வீட்டின் கட்டிட வரைபடம் உருவாக்குவதற்கு முன்பாகவே பல ஆலோசனைகளுக்குப் பிறகு கட்டுநரை அணுகுகிறோம். அவரிடம் நமக்கு எப்படி வீடு வேண்டும் என்பதைச் சொல்கிறோம். அவரும் நமது மனைக்கு ஏற்ற மாதிரி வரைபடங்களை அனுப்புகிறார். அவற்றில் ஒன்றைப் பலத்த விவாதங்களுக்குப் பிறகு தீர்மானிக்கிறோம். அதன் பின்னர் அதன் முகப்பைக் கட்டுநர் முப்பரிமாணத் தோற்றத்தில் தருகிறார். கிட்டத்தட்ட வீடு பூர்த்தியான பிறகு என்ன தோற்றத்தில் இருக்குமோ அதைப் பார்க்கிறோம். அதுவும் இப்போதெல்லாம் தொழில்நுட்பம் வளர்ந்திருப்பதால் எல்லாமே மொபைலில் கிடைத்துவிடுகிறது. வாட்ஸ் அப் வழியே அனுப்பப்பட்ட வீட்டின் தோற்றத்தைப் பார்த்து மெய்மறக்கிறோம். அதையும் மெருகேற்ற ஆசைப்படுகிறோம். நமது விருப்பத்தைப் பூர்த்திசெய்வதற்காக இயன்ற அளவு கலை ரசனையுடன் அதை அமைத்துத் தருகிறார் கட்டுநர்.

அலங்காரம் அவசியமா?

கலை ரசனையுடன் வீட்டைக் கட்டுவதில் ஒரு பிழையுமில்லை. அதே நேரத்தில் அப்படியான கலை ரசனையுடனான அம்சங்கள் நமது அன்றாடப் பயன்பாட்டில் அவசியம் தானா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வீட்டின் புறச்சுவரில் குறிப்பாக வீட்டின் முகப்பில் அதிக அலங்காரம் என்பது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதை முறையாகப் பராமரிக்க வேண்டும், இல்லையென்றால் நாளடைவில் அந்த அலங்கார வடிவங்களில் அழுக்கேறி பார்க்க முடியாத தோற்றத்தில் அமைந்துவிடும். ஏனெனில் வெறும் சுவர் என்றால் அதை எளிதில் பராமரிக்க முடியும்.

அதில் படிந்திருக்கும் தூசுகளை எளிதில் அகற்றிவிட முடியும். வாய்ப்புக் கிடைக்கும்போது நீர் ஊற்றிக் கழுவினால் போதும் பளிச்சென்று சுத்தமாகிவிடும். ஆனால் அலங்கார வடிவங்களில் தூசுகள் வந்து தஞ்சம் புக ஏதுவாகிவிடும். அந்தத் தூசுகளை அகற்றுவது எளிதல்ல. ஆகவே கலை ரசனையுடன் முகப்பு அமையவேண்டும் என்பதைச் சிந்திக்கும்போது இந்த விஷயத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். முறையாகப் பராமரிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே அலங்காரங்களை அனுமதியுங்கள் இல்லையெனில் மிகவும் சாதாரணமாக முகப்பு இருந்தாலே போதும். எளிமையும் ஓர் அழகு என்பதை மறந்துவிடாதீர்கள்.

வீட்டின் உள்புறங்களின் சுவர்களில் தேவையற்ற அலங்காரத்தைத் தவிர்ப்பது நல்லது. புறச்சுவர்களில் அழுக்கேறினால் அது வெறும் அழகு சார்ந்த விஷயம்தான். ஆனால் வீட்டின் உள்ளே அலங்காரங்களால் தூசு படிந்தால் அது ஆரோக்கியக் கேடாகவே முடியும். ஆகவே இதில் அழகுணர்வைவிட ஆரோக்கிய சூழலே முக்கியம் என்பதை மறந்துவிடக் கூடாது. அதே போல் வீட்டின் அறைகளுக்கு அமைக்கும் மரக் கதவுகளை மிகவும் எளிமையானதாக அமைப்பதே நல்லது. அதில் நீங்கள் அழகிய வேலைப்பாடுகளை அமைக்கலாம். பார்ப்பதற்கு ரசனையாக இருக்கும். ஆனால் அதை நீங்கள் சரியாகப் பராமரிக்க வேண்டும். அதற்கு உங்களால் முடியாது என்றால் மிகவுள் எளிமையான அலங்காரங்களுடன் அதை அமைத்துவிடுங்கள். அது தான் நல்லது. இல்லையெனில் அதில் படியும் தூசியும் அழுக்கும் அகற்ற முடியாமல் படிந்து ஆரோக்கியத்துக்கே கேடாக அமைந்துவிடும்.

மர அலமாரிகள்

வீட்டின் கட்டுமானப் பணிகளுக்குப் பின்னர் வீட்டை அழகுபடுத்தவும் நவீனமான தோற்றத்துக்குக் கொண்டுவரவும் மரத்திலான அலமாரிகளையும், கப்போர்டுகளையும் அமைப்பது இப்போது வழக்கமாகிவிட்டது. சமையலறை, படுக்கையறை, வாசிப்பறை, வரவேற்பறை போன்ற அறைகளில் இத்தகைய மர வேலைப்பாடுகளுடனான அலமாரிகளை அமைக்கிறோம். இந்த அலமாரிகளை அமைக்கும்போது அவசியமானவற்றை மட்டுமே அமையுங்கள். முதலில் ஆசையில் அதிக அலமாரிகளை அமைத்துவிட்டுப் பின்னர் அது பயன்பாடே இல்லாமல் வீணாக இருக்கும்படி ஆகிவிடக் கூடாது.

ஆக, வீட்டின் மர அலமாரிகள், கப்போர்டுகள் போன்றவற்றை அமைக்கும் முன்னர் வீட்டின் உறுப்பினர்கள் அனைவரும் விவாதித்து எங்கேயெங்கே அலமாரிகள் அவசியம் என்பதை முடிவெடுத்துக்கொள்ளுங்கள். அதன் பின்னர் தீர்மானமாக முடிவுக்கு வந்த பின்னரே அலமாரிகளை அமையுங்கள். ஏனெனில் மர வேலைகளுடனான அலமாரிகளை அநாவசியமாக அமைப்பதால் கட்டுமானச் செலவும் அதிகரிக்கும். ஆகவே அது விஷயத்தில் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.

வீடு விஷயத்தில் செலவு என்பது கட்டுக்குள் நிற்பது மிகவும் கடினம். சிறு சிறு செலவுகளாகச் சேர்ந்தே பெரும் தொகை ஆகிவிடும். நாம் பட்ஜெட் போட்டுச் செலவு செய்தால்கூட அந்த பட்ஜெட்டைவிட எப்படியும் பத்து சதவீதம் வரை அதிகமாகிவிடும். ஆகவே முடிந்தவரை பட்ஜெட்டுக்குள் அடங்கிவிடும்ப வீட்டின் கட்டுமானச் செலவைப் பார்த்துக்கொள்ளுங்கள். வீட்டின் தோற்றம் எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு அவ்வளவு அதன் நீடித்த பராமரிப்பும், நமது ஆரோக்கியமும், கட்டுக்குள் அடங்கிய கட்டுமானச் செலவும் முக்கியம். இந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு நமது வீட்டை உருவாக்கும்போது அதனால் உருவாகும் சில சிக்கல்களைத் தவிர்த்துவிடலாம். புதிய வீட்டில் சந்தோஷத்துடன் குடிபுகுவதற்காக சில அலங்காரங்களை விட்டுக்கொடுப்பதில் ஒன்றும் பிழையில்லையே.

Leave a Reply