எஸ்ஐபி காப்பீடு – ஒரு பார்வை
மியூச்சுவல் பண்ட்களில் எஸ்.ஐ.பி (systematic investment plan) முறையில் முதலீடு செய்யும் போது சில மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இலவச காப்பீட்டை வழங்குகின்றன. மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்பவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில், நாமினிக்கு அவர் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப இழப்பீடு கிடைக்கும். இதன் சாதக, பாதகங்களை பார்போம்.
நிபந்தனைகள்
ஆதித்யா பிர்லா, ஐசிஐசிஐ புரூடென்ஷியல், ரிலையன்ஸ் ஆகிய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்பவர்களுக்கு இலவச காப்பீட்டை வழங்குகின்றன. ரிலையன்ஸ் நிறுவனத்தில், குரோத், விஷன், டேக்ஸ் சேவர், ரிடையர்மென்ட் ஆகிய திட்டங்களுக்கு இலவச காப்பீடு வழங்கப்படுகிறது. ஆதித்யா பிர்லா குழுமத்தில் அனைத்து பங்குச்சந்தை சார்ந்த திட்டங்கள் மற்றும் பேலண்ஸ்டு பண்ட்களிலும், ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்டில் அனைத்து பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களுக்கும் இந்த காப்பீடு வசதி வழங்கப்படுகின்றன. இதற்கு முதலீட்டாளர்கள் எந்த விதமான தொகையும் செலுத்த தேவையில்லை. இந்த காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் செலுத்தும்.
இந்த வசதியை பெறுவதற்கு முதலீட்டாளர்கள் அதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பெரும்பாலும் அனைத்து மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களும் ஒரே விதமான விதிமுறைகளையே வைத்துள்ளன. இலவச காப்பீடை பெறுவதற்கு குறைந்த பட்சம் 3 ஆண்டுகளுக்கு எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய வேண்டும். ஒரு வேளை மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக எஸ்ஐபி நிறுத்தப்பட்டால் காப்பீடு ரத்தாகிவிடும்.18 வயதுக்கு மேற்பட்ட 51 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே இலவச காப்பீடு கிடைக்கும்.
முதலீடு செய்து ஓர் ஆண்டில் இறக்கும் பட்சத்தில் மாதந்திர முதலீட்டு தொகையில் 10 மடங்கு கிடைக்கும். இரண்டாம் ஆண்டு இறக்கும் பட்சத்தில் 50 மடங்கு வரை இழப்பீடு கிடைக்கும். மூன்றாம் ஆண்டு அல்லது அதற்கு மேலான காலத்தில் பாலிசிதாரருக்கு அசம்பாவிதம் நடக்கும் பட்சத்தில் மாதத் தவணையில் 100 மடங்கு முதல் 120 மடங்கு வரை இழப்பீடாக கிடைக்கும்.இருந்தாலும் அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரைக்குமே இழப்பீடு பெறமுடியும்.
ஒருவர் மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறார். ஆனால் அதற்கு பிறகு முதலீட்டை தொடரவில்லை. அதே சமயம் செய்திருந்த முதலீட்டையும் அவர் எடுக்கவில்லை. இந்த சமயத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், தற்போது அந்த பண்டில் உள்ள முதலீட்டை சந்தை மதிப்பு ஏற்ப காப்பீடு கிடைக்கும். இருந்தாலும் அதிகபட்ச காப்பீடு தொகை அதே ரூ.25 லட்சம்தான்.
55 வயதை அடைந்தபின்னர் காப்பீடு கிடைக்காது. அதேபோல முதலீடு செய்த தொகையில் இருந்து பகுதியாகவோ அல்லது முழுமையாக எடுத்தாலும் இழப்பீடு கிடைக்காது.
க்ளைம் வழிமுறைகள்
காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் குரூப் டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படுகிறது. ஒரு வேளை இழப்பீடு கோரவேண்டிய சூழல் ஏற்பட்டால் நேரடியாக சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனங்களை அணுகி தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இழப்பீடு தொகையை நேரடியாக நாமினியின் வங்கி கணக்கில் காப்பீட்டு நிறுவனங்கள் வரவு வைக்கும். இந்த நடைமுறைகளில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இந்த திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டதில் இருந்து 100 சதவீத க்ளைம் வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஐசிஐசிஐ 11 க்ளைம்களை வழங்கி இருக்கிறது. ரிலையன்ஸ் 340 க்ளைம்களை (மொத்த இழப்பீடு தொகை ரூ.14.3 கோடி) வழங்கி இருக்கிறது.
இலவச காப்பீடு எடுக்கலாமா?
இலவசமாக காப்பீடு கிடைக்கிறது என்பதற்காக எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை தொடங்க கூடாது. இது போல கூடுதல் சலுகைகள் கிடைக்கும் பண்ட்கள் சிறப்பாக செயல்படும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. காப்பீட்டில் கவனம் செலுத்தினால், தவறான பண்டினை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகலாம். இதனால் நீண்ட கால அடிப்படையில் முதலீட்டின் மீதான லாபம் குறையும்.
தவிர இது போன்ற காப்பீடை பெறுவதற்கு நேரடியாக விண்ணப்பம் கொடுக்க வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இணையதளம் அல்லது மற்ற மியூச்சுவல் பண்ட் தளங்களில் இலவச காப்பீடை பெற முடியாது. தவிர மூன்று ஆண்டுகளில் வெளியேறினால் காப்பீடு கிடைக்காது. சம்பந்தப்பட்ட பண்ட் சரியாக செயல்படவில்லை என்றாலும், வேறு வழியில்லாமல் தொடர வேண்டி இருக்கும்.
ஒரு வேளை மூன்று ஆண்டுகள் பணத்தை செலுத்திவிட்டீர்கள். அந்த பணம் அங்கு இருக்கும் வரையில்தான் காப்பீடு கிடைக்கும். காப்பீட்டுக்காக நீங்கள் பணத்தை எடுக்கவில்லை என்று வைத்துக்கொண்டால் அந்த பண்ட் சிறப்பாக செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஒருவேளை ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால், அந்த பண்டில் இருக்கும் குறைவான தொகையே இழப்பீடாக உங்களின் நாமினிக்கு கிடைக்கும்.
அதனால் காப்பீடுக்காக முதலீட்டை தொடங்குவது நல்லதல்ல. சரியான ஆலோசனையும் அல்ல. உங்களின் ஆயுள் காப்பீட்டு தேவைக்கு இது போதுமானதாகவும் இருக்காது. அதனால் உங்களின் ஆண்டு வருமானத்தில் 10 மடங்கு அளவுக்கு தனியாக டேர்ம் இன்ஷூரன்ஸை எடுப்பதே சிறந்தது.