எஸ்ஐபி முறையில் ஃபண்ட் முதலீடு… வருமான வரி கணக்கீடு எப்படி?
அண்மைக் காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கணிசமாக அதிகரித்து வருகிறது. அதுவும் ஒவ்வொரு மாதம் முதலீடு செய்யும் எஸ்ஐபி (SIP – Systematic Investment Plan) முறையிலான முதலீடு உயர்ந்துள்ளது.
இந்த எஸ்ஐபி முறை முதலீட்டின் மீதான வருமான வரி விதிப்பானது, ஃபண்ட் வகைகளைப் பொறுத்தும், ஃபண்டுகளில் செய்துள்ள முதலீட்டை எவ்வளவு காலம் கழித்து விற்பனை செய்கிறோம் என்பதைப் பொறுத்தும் மாறுபடுகிறது.
பொதுவாக, மியூச்சுவல் ஃபண்டுகளை பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள் (ஈக்விட்டி ஃபண்டுகள்), கடன் சார்ந்த ஃபண்டுகள் (டெட் ஃபண்டுகள்) என இரு வகைகளாகப் பிரிக்கலாம். அதாவது, ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் 65 சதவிகிதத்துக்கு மேல் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருப்பின், அது பங்குச் சார்ந்த ஃபண்டுகள் என்று சொல்லப்படும். மற்றவை எல்லாம் கடன் சார்ந்த ஃபண்டுகள் என்று கொள்ளலாம்.
இவை இரண்டுக்கும் வருமான வரிக் கணக்கிடும் முறையிலும் மற்றும் வரி விதிப்பு சதவிகிதத்திலும் வேறுபாடு இருக்கிறது என ஏற்கெனவே பார்த்தோம். எனவே, அது குறித்து தெளிவு பெறுவது மிகவும் அவசியம்.
முதலீட்டாளர் ஒருவர் இரு வேறு தேதிகளில் பங்குச் சார்ந்த மற்றும் கடன் சார்ந்த ஃபண்டுகளில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்துள்ளார். அவர் வாங்கிய யூனிட்களை விற்கும்போது ஒவ்வொரு முதலீட்டுக்கும் 12 மாதங்கள் (பங்குச் சந்தை) அல்லது 36 மாதங்கள் (கடன் ஃபண்டுகள்) என வைத்திருக்கும் கால இடைவெளியைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
உதாரணத்துக்கு, ஒருவர் 2016 ஜனவரி 1-ம் தேதி பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் ஒன்றில் ரூ.10,000 முதலீடு செய்கிறார். அவருக்கு 100 யூனிட்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இவர் அதே ஃபண்டில் மீண்டும் 10,000 ரூபாயை 2016 ஜூன் 1-ம் தேதி முதலீடு செய்கிறார். சந்தை ஏறிக் காணப்பட்டதால், அவருக்கு 80 யூனிட்கள் ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் அவர் கணக்கில் மொத்தம் 180 யூனிட்கள் சேர்கிறது.
இவர் சுமார் ஓராண்டு கழித்து ஜனவரி 5, 2017-ல் 150 யூனிட்களை விற்கிறார் என வைத்துக்கொள்வோம். இதில் அவர் ஓராண்டுக்கு முதலீடு செய்த 100 யூனிட்கள், முதல் 100 யூனிட்களாகக் கணக்கிடப்படும். அது நீண்ட கால முதலீடாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு லாபத்துக்கு வரி எதுவும் விதிக்கப்படாது.
மீதமுள்ள 50 யூனிட்கள் ஜூன் 1, 2016-ல் செய்த முதலீட்டின் மூலமான 80 யூனிட்களின் ஒரு பகுதி எனக் கருதப்படும். அது குறுகிய கால முதலீடாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு வரி (15%) விதிக்கப்படும்.
இதேபோல்தான் கடன் ஃபண்டுகளில் செய்யப்படும் எஸ்ஐபி முதலீட்டுக்கும் வரி விதிக்கப்படும். இங்கு நீண்ட கால முதலீடு என்பது மூன்று ஆண்டுகள் ஆகும்.
இப்படி வகைப்படுத்தப்பட்டபின் அதற்கான வரியைக் கணக்கிட்டு செலுத்தவேண்டும்.
சற்று புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால், முதலீட்டில் கூடுதல் லாபம் பார்க்க முடியும். உதாரணமாக, நீங்கள் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் ஒன்றில் முதலீடு செய்திருக்கிறீர்கள். பிற்பாடு பங்கை விற்கப் போகிறீர்கள். அப்போது முதலீடு செய்து 362 நாட்கள் முடிந்துள்ளன. நீங்கள் இன்னும் மூன்று நாட்கள் கழித்து விற்றால் வருமானத்தில் 15% வரி கட்டுவதைத் தவிர்க்க முடியும்.
வருமானத்தை எந்த அளவுக்கு முக்கியமாக நினைக்கிறீர்களோ, அந்த அளவுக்கு வருமான வரியை மிச்சப்படுத்துவது என்பதும் முக்கியம்.
நீங்கள் வரி கட்டுவதை புத்திசாலித்தனமாக மிச்சப்படுத்தும் பட்சத்தில், உங்கள் முதலீட்டுக்கான வருமானம் கூடுதலாக கைக்கு கிடைக்கும் என்பதை சொல்லத் தேவையில்லையே!