ஏப்.29, 30ல் ஆசிரியர் தகுதித் தேர்வு: மார்ச் 6 முதல் விண்ணப்பம் விநியோகம்
ஆசிரியர் தகுதித் தேர்வைப் பொருத்தவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஏப்ரல் 29 -ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஏப்ரல் 30 -ஆம் தேதியும் நடைபெறுகின்றன. ஆசிரியர் நியமனம் தொடர்பான கூடுதல் மதிப்பெண் (“வெயிட்டேஜ்’) அளிக்க வகை செய்யும் அரசு உத்தரவு தொடர்ந்து நீடிக்கிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஆசிரியர் பணியிடங்கள் தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே, பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு ஏப்ரல் 29 ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு ஏப்ரல் 30 ஆம் தேதியும் நடைபெறும் என கூறினார்.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்: தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கும்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50
விண்ணப்பம் விநியோகம் தொடங்கும் தேதி: 06.03.2017 முதல் 22.03.2017
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.03.2017
ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவுள்ள ஏப்.,29, 30 தேதிகளில் டிஎன்பி.ஸ்சி ‘குரூப் 7பி’ மற்றும் ‘குரூப் 8’ பிரிவு தேர்வுகளும் நடத்தப்படும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று ஏப்ரல் கடைசி வாரத்தில் பி.எட்., செய்முறை தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.