ஏலக்காயின் 5 நன்மைகள்

ஏலக்காயின் 5 நன்மைகள்

12நம் சமயலறையில் இருக்கக்கூடிய ஏலக்காய் சமையலில் வாசனையையும் சுவையையும் கூட்டக்கூடியது. கேசரி, பாயசம், ஸ்பெஷல் டீ என அனைத்திலும் வாசனைக்காக இதைச் சேர்க்கிறோம். ஆனால், இதன் மருத்துவப் பயன்கள் நமக்குத் தெரிவது இல்லை. ஏலக்காயில் பொட்டாசியம், கால்சியம், கந்தகம், மக்னீசியம், மாங்கனீஸ், இரும்பு போன்ற தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன. மேலும், முக்கிய வைட்டமின்களான ரிபோஃபிளேவின், வைட்டமின் சி உள்ளன. கிருமிநாசினியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், இரைப்பை குடல் வலி நீக்கியாகவும் செயல்படும் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். ஆரோக்கியத்தைக் கூட்டும், காயங்களை எளிதில் ஆற்றும்.

செரிமானத்தை மேம்படுத்தும்

ஏலக்காய் செரிமானத்தைத் தூண்டும். வயிறு மற்றும் குடலில் உள்ள புண் மற்றும் வலியைப் போக்கும். வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம், வீக்கம், ஆகியவற்றைச் சரிசெய்கிறது. பித்த நீரைச் சுரக்கச்செய்து, உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் இதர சத்துக்களைக் கரைக்க உதவுகிறது. செரிமானத்தில் ஏற்படும் பிரச்னைகள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அசிடிட்டி போன்றவற்றைச் சரிசெய்ய ஏலக்காய்க்கு நிகர் ஏலக்காய்தான்.

துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்

ஏலக்காயில் பாக்டீரியா எதிர்ப்பு அதிகம் உள்ளதால், வாயில் துர்நாற்றம் ஏற்படுத்தும் கிருமிகளை அழித்துவிடும். இதன் இனிமையான சுவை மற்றும் மனம் துர்நாற்றத்தைப் போக்கிவிடும். ஏலக்காயில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்தலாம் அல்லது தினமும் சாப்பிட்டவுடன் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மெல்லலாம். இதனால் சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும்.

உடலில் உள்ள நச்சை அகற்றும்

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை உடலில் உள்ள நச்சை வெளியேற்றுகிறது. அதிக ஆற்றல், நோய் எதிர்ப்பு சக்தி, வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. நம் உடலை ஆரோக்கியமானதாகவும், உள்ளுறுப்புகளை சுத்தமாகவும் வைத்துக்கொள் ஏலக்காய் பெரும் அளவில் உதவுகிறது.

சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

ஏலக்காய் சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது. சிறுநீர் கழிக்க ஊக்குவிக்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. சிறுநீரகத்தில் தேங்கும் கால்சியம் மற்றும் யூரியாவை வெளியேற்றுவதன் மூலம், சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. சிறுநீரகச் செயல்பாட்டைத் தூண்டுகிறது.

இதயத் துடிப்பைச் சீர்படுத்தும்

ஏலக்காயில் முக்கியக் கனிமமான பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் இதயத்துக்கு மிகவும் நல்லது. பொட்டாசியம், ரத்தம், உடல் திரவங்கள், மற்றும் செல்களில் முக்கியக் கூறாக உள்ளது. இதயத் துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் சீராக வைத்திருக்க உதவும். ஏலக்காய் ரத்தக் கட்டிகள், பக்கவாதம், ரத்தம் உறைதல் போன்றவற்றைத் தடுகிறது.

Leave a Reply