ஏ.சி. எப்படி வேலை செய்கிறது?

ஏ.சி. எப்படி வேலை செய்கிறது?

கோடை வெயில் தகிக்கிறது. பல குடும்பங்களில் குளிர் சாதனப் பெட்டி (Air Conditioner-AC) வாங்கத் தீர்மானித்திருப்பார்கள். எனினும் என்ன வகை ஏ.சி.யை வாங்குவது என்பதில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டிருக்கலாம். அதில் இரு வகையுண்டு; விண்டோ ஏ.சி. (Window AC). மற்றொன்று ஸ்ப்ளிட் ஏ.சி. (Split AC). இந்த இரண்டில் எதை வாங்குவது என்ற குழப்பம் வரும்.

இதற்கு விடை கிடைக்க வேண்டுமானால் ஏ.சி. எப்படி வேலை செய்கிறது என்பதை அறிவது அவசியம். ஒரு திரவம் வாயுவாக மாறும்போது அது வெப்பத்தை உறிஞ்சிக் கொள்ளும் என்கிறது அறிவியல். இந்த நடைமுறையை நிலை மாற்றம் (Phase conversion) என்பார்கள். ஏ.சி. கருவிகள் இந்தச் செயல்முறையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. நெருக்கமாக அமைக்கப்பட்ட கம்பிச் சுருள்களில் உள்ள வேதியல் பொருள்களைத் தொடர்ந்து ஆவியாக்குவதன் மூலம் குளிர்ச்சியை உண்டாக்குகின்றன. இந்த வேதியல் பொருள்களைக் குளிர்விப்பான்கள் (Refrigerants) என்கிறார்கள்.

அது சரி, இந்தக் குளிர்விக்கும் பொருள்கள் தொடர்ந்து இருப்பு இருக்க வேண்டுமே. ‘நமக்குத் தெரிந்து குளிர்சாதனப் பெட்டியில் நாம் ஒன்றும் வேதியல் பொருள்களை அவ்வப்போது நிரப்புவதில்லையே’ என்று கேட்டால் அதற்கான விடை இதுதான். உருவான வாயுவை மீண்டும் திரவமாக்குவதற்கும் இதே கருவியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதைச் செய்வது குளிர்சாதனப் பெட்டியிலுள்ள காற்றழுத்தி (Compressor). இது வாயுவை மிகவும் உயர் அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறது. அப்போது நிறைய வெப்பம் வெளியேறுகிறது. இந்த வெப்பம் செறிகலங்கள் (Condenser) மூலமாகவும், மற்றொரு மின்விசிறி மூலமாகவும் வெளியேற்றப்படுகிறது. அதனால்தான் ஏ.சி. கருவியின் வெளிப்புறத்தில் (அறைக்கு வெளியே) வெப்பக் காற்றை உணர முடிகிறது. வாயு இப்படிக் குளிர்விக்கப்பட்டு மீண்டும் திரவமாகிறது. மீண்டும் இந்தச் சுற்றுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இதிலிருந்து இன்னொன்றும் புரிகிறதல்லவா? வெளியில் உள்ள காற்றை ஏ.சி. கருவி குளிரூட்டி அறைக்குள் அனுப்புவதில்லை. அறைக்குள் இருக்கும் வெப்பக் காற்றுதான் குளிர்விக்கப்பட்டு மீண்டும் நம்மை வந்தடைகிறது. இதை HVAC என்பார்கள். அதாவது வெப்பமாக்கப்படுதல் (Heating), காற்றோட்டம் (Ventilation) மற்றும் காற்றுச் சீரமைப்பு (Air conditioning).

இப்போது வின்டோ ஏ.சி. (window A.C.) மற்றும் ஸ்ப்ளிட் (split A.C.) ஆகியவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைப் பார்க்கலாம்.

விண்டோ ஏசி என்பது அதன் பெயரே தெரிவிப்பது போல ஜன்னல்களில் பொருத்தப்படுவது. ஒரே பகுதிதான். அதற்குள்ளேயே அனைத்துப் பாகங்களும் இருக்கும். விண்டோ ஏசியைப் பொருத்துவது எளிது. ஒப்பிடுகையில் விலையும் கொஞ்சம் குறைவு.

ஸ்பிளிட் ஏசியில் இரண்டு யூனிட்கள் உண்டு. ஒன்றை அறைக்குள்ளும் மற்றொன்றை வெளியிலும் பொருத்த வேண்டும். உள்பகுதி அறையிலுள்ள வெப்பக் காற்றை இழுத்து குளிர்காற்றை உள்ளனுப்புகிறது. வெளியில் இருக்கும் பகுதி வெப்பமான காற்றை வெளியே அனுப்புகிறது.

ஸ்பிளிட் ஏசி குறைவான இடத்தை அடைத்துக் கொள்ளும். சத்தம் எழுப்பாது. ஜன்னல்களே இல்லாத அறையிலும் இதைப் பொருத்த முடியும் என்பது கூடுதல் பயன். ஏ.சி. வாங்கும்போது நாம் சிலவற்றில் கவனம் செலுத்த வேண்டும். வீட்டின் வெளிப்புற வெப்ப நிலை தாறுமாறாக இருந்தால் (கடும்பனி அல்லது கடும் வெப்பம் என்று மாறி மாறி இருந்தால்) கூட (ஸ்பிளிட் ஏசியைப் பொறுத்தவரை) வெளிப்புறப் பகுதியை நாம் மூடி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

ஒரே ஸ்பிளிட் ஏ.சி.யைப் பல அறைகளுக்கும் பொருத்த முடியும். ஆனால், அப்படிச் செய்யும்போது ஒரு கட்டத்துக்கு மேல் குளிர்விக்கும் தன்மை குறைந்துவிடும். ஸ்பிளிட் ஏசியைப் பொருத்தும்போது சுவரில் துளை போட வேண்டியிருக்கும் (வெளிப் பகுதியையும், உள்பகுதியையும் இணைக்க வேண்டுமே). சில வீட்டின் சொந்தக்காரர்கள் இதற்கான அனுமதியை வாடகைதாரர்களுக்குத் தர மறுக்கலாம்.

அறைக்குத் தகுந்தாற்போல் குளிர்சாதனப் பெட்டியைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் வீட்டில் எவ்வளவு பேர் வசிக்கிறார்கள் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.

அறையில் நிறையப் பொருட்களை அடைத்து வைத்திருக்கிறீர்களா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஏ.சி.யினால் அறையிலுள்ள ஒவ்வொரு பொருளும் குளிர்விக்கப்படுகிறது. எனவே, அடைசல் குறைவாக இருந்தால் ஏ.சி.க்குச் செலவாகும் மின்சாரமும் குறைவாக இருக்கும்.

அறையில் ஒரே சமயத்தில் பல விளக்குகளை ஆன் செய்யும் பழக்கம் உண்டு என்றால், அத்தனை வெப்பத்தையும் இழுத்துக் கொள்ள வேண்டும் என்பதால் சற்று அதிக சக்தி வாய்ந்த குளிர்சாதனப் பெட்டி தேவைப்படும். அதிக நேரம் சூரிய வெப்பம் படும் அறை என்றாலும் இதே நியதி பொருந்தும்.

ஏ.சி. வாங்கும்போது EER என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு வாட் மின்சாரத்துக்கு எவ்வளவு குளிர்ச்சியை அந்தக் கருவி கொடுக்கும் என்பது EER. ஒரு குளிர்சாதனக் கருவியின் EER அதிகமாக இருக்க இருக்க, அதற்கான ரேட்டிங்கும் அதிகமாக இருக்கும்.

ஒவ்வொரு குளிர்சாதனப் பெட்டியின் அட்டையிலும் ஒரு லேபிள் ஒட்டப்பட்டிருக்கும் (இது சட்டப்படி அவசியம்). இதில் ஒன்றிலிருந்து ஐந்து வரை நட்சத்திரங்கள் போடப்பட்டிருக்கும். ஐந்து நட்சத்திரங்கள் என்றால் மிக அதிக EER. எனவே மிக அதிக குளிர்விக்கும் தன்மை. விண்டோ ஏ.சி., ஸ்பிளிட் ஏசி ஆகிய இரண்டுகளுக்குமே இந்த ஸ்டார் ரேட்டிங் உண்டு.

Leave a Reply