ஐஎஸ் தீவிரவாதிகளுடனான போர் முடிந்தது: ஈராக் பிரதமர் அறிவிப்பு
ஈராக் மற்றும் சிரியா நாடுகளை கடந்த சில ஆண்டுகளாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐஎஸ் தீவிரவாத இயக்கம் தற்போது ஈராக் நாட்டில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டதாகவும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த போர் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதிதெரிவித்துள்ளார். மேலும் சிரியா – ஈராக் எல்லையின் முழுக் கட்டுப்பாடும் தற்போது தங்கள் நாட்டின் ராணுவம் வசம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈராக் மற்றும் சிரியா எல்லையில் ஐஎஸ் தீவிரவாதிகள் வசம் இருந்த பகுதிகளை ராணுவம் முழுமையாக கைப்பற்றி விட்டதாகவும், இதன் மூலம் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் முடிவடைந்ததில் தானும் தனது நாட்டு மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் அதிபர் அல் அபாதி நேற்று அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.
ஈராக் நாட்டின் அண்டை நாடான சிரியாவிலும் ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணி முழுமையாக முடித்துவிட்டதாக இரு தினங்களுக்கு முன் ரஷ்யா அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது ஈராக்கும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் முகாமை முற்றிலுமாக இரு நாடுகளிலும் காலி செய்துவிட்டதாகவும், இருப்பினும் வெளிநாட்டில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகள் சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் விரைவில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.