ஐ.எஸ்.எல். கால்பந்து: முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி டைனமோஸ்
கிரிக்கெட்டில் ஐபிஎல் போன்று கால்பந்து விளையாட்டில் ஐ.எஸ்.எல் போட்டிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான போட்டி சமீபத்தில் தொடங்கியது
10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புனேவில் நேற்றிரவு 8 மணிக்கு நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.புனே சிட்டி – டெல்லி டைனமோஸ் எப்.சி. அணிகள் மோதின.
புனே-டெல்லி அணிகள் இதுவரை 6 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் புனே அணி ஒரு முறையும், டெல்லி அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
சொந்த மண்ணில் முதல் ஆட்டத்தில் விளையாடும் புனே அணி வெற்றியுடன் தொடங்குவதில் தீவிரம் காட்டியது. இதே போல் டெல்லி அணியும் வெற்றிகரமாக போட்டியை தொடங்கும் ஆர்வத்துடன் விளையாடியது.
போட்டியின் முதல் 45 நிமிடத்தில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 46-வது நிமிடத்தில் டெல்லி அணியின் பாலிங்கோ தியாஸ் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து 54-வது நிமிடத்தில் டெல்லி அணியின் லாலியன்சுவாலா சாங்தே இரண்டாவது கோல் அடித்தார். அதன்பின் 65-வது நிமிடத்தில் டெல்லியின் மேட்டியஸ் மிராபாஜே மூன்றாவது கோல் அடித்தார். இதன்மூலம் டெல்லி அணி 3-0 என முன்னிலை பெற்றது.
அதன்பின் புனே அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டினர். 67-வது நிமிடத்தில் புனே அணியின் எமிலியானோ அல்ஃபேரோ ஒரு கோல் அடித்தார். அதன்பின் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் 5-வது நிமிடத்தில் புனே அணியின் மார்கொஸ் தெபார் இரண்டாவது கோல் அடித்தார். இதன்மூலம் கோல் வித்தியாசம் 3-2 என ஆனது.
அதன்பின் இரு அணியினரும் மேற்கொண்டு எந்த கோலும் அடிக்கவில்லை. இறுதியில் டெல்லி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. டெல்லி அணியின் லாலியன்சுவாலா சாங்தே ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 3 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறியது.