ஐ.பி.எல் 7 கிரிக்கெட் போட்டிகளில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் கொல்கத்தா அணி,டெல்லி அணியிடம் போராடி தோல்வி அடைந்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார் கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பீர். இந்த போட்டியின் முதல் பந்திலேயே நட்சத்திர பேட்ஸ்மேன் கல்லீஸ் ஆட்டமிழந்தது கொல்கத்தா அணியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதையடுத்து மூன்றாவது ஓவரில் கேப்டன் கவுதம் காம்பீரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனால் ரன் எடுக்க முடியாமல் தத்தளித்து கொண்டிருந்த அணியின் ஸ்கோரை உயர்த்த பாண்டே, உத்தப்பா ஜோடி உதவியது. பாண்டே 48 ரன்களும், உத்தப்பா 55 ரன்களும் எடுத்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.
பின்னர் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, முதல் ஓவரிலேயே முரளி விஜய்யின் விக்கெட்டை இழந்தாலும், அதன் பின்னர் விளையாடிய தினேஷ் கார்த்திக், மற்றும் டுமினியின் பொறுப்பான ஆட்டத்தினால் 19.3 ஓவர்களில் வெற்றிக்கு தேவையான 167 ரன்களை எடுத்தது. டுமினி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் மும்பை அணி 7விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியிடம் தோல்வி அடைந்தது.
மும்பை அணி : 115/9 20 ஓவர்கள்
பெங்களூர் அணி: 116/3 16.3 ஓவர்கள்