ஒரு சாட்சி கூட வரலை! ‘மனிதன்’ பட பாணியில் வேதனையை தெரிவித்த நீதிபதி ஓ.பி.ஷைனி
7 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த 2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு வழங்கினார்.
2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீர்ப்பு நகலில் ஓ.பி.சைனி குறிப்பிட்டிருந்த சில சுவாரஸ்யமான தகவல் பின்வருமாறு… “2ஜி வழக்கு தொடர்ந்தவர்கள் ஆரம்பக்கட்டத்தில் உற்சாகமாகவும் தீவிராமாகவும் செயல்பட்டனர். ஆனால், நாள்கள் செல்லச் செல்ல இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் கையெழுத்துப் போடக்கூட சி.பி.ஐ தரப்பிலிருந்து யாரும் தயாராக இல்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களைக் குறித்து சமூகத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களும் குற்றம்சாட்டி பேசினர். ஆனால், ஒருவரும் குற்றத்தை நிரூபிக்க நீதிமன்றத்தில் சாட்சியளிக்க வரவில்லை.
கடந்த ஏழு ஆண்டுகளாக 2ஜி வழக்கில் சட்டப்படி செல்லும் ஆதாரங்களுடன் யாராவது வருவார்கள் என்று காத்துக்கொண்டிருந்தேன். வேலை நாள்கள், கோடை விடுமுறை நாள்கள் என ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை ஒருவராவது உரிய ஆவணங்களுடன் குற்றத்தை நிரூபிக்க வருவார்கள் என்று காத்திருந்தேன். ஒருவர்கூட வரவில்லை. ஏழு ஆண்டுகளில் சட்டப்படி செல்லும் ஒரு சாட்சிகூட வரவில்லை. அனுமானத்தின் அடிப்படையிலோ வதந்திகளின் அடிப்படையிலோ வழக்கை எடுத்துச்செல்ல முடியாது. 2ஜி ஒதுக்கீட்டை தொடர்ந்து பணமோசடி நடைபெற்றதாகக் கூறப்பட்ட புகாரையும் நிரூபிக்கவில்லை. இதனால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் லஞ்சமாகக் கைமாறியது என்று புகார் கூறப்பட்டிருந்தது. அதற்கும் எந்த ஆதாரமும் இல்லை” என்று நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘மனிதன்’ படத்தில் நீதிபதியாக நடித்த ராதாரவி கேரக்டரும் இதே பாணியில் எத்தனை நாள் காத்திருந்தேன், ஒரு சாட்சி கூட வரலை’ என்று ஒரு வசனம் பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.