ஒரு வாரமாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ. கனடாவில் பெரும் பரபரப்பு

fireகனடா நாட்டில் கடந்த ஒருவாரமாக எரிந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் மீட்புப்படையினர் போராடி வருகின்றனர். பயங்கரமாக பரவி வரும் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மத்திய கனடாவில் உள்ள சாஸ்கட் சேவன் என்ற மாகாணத்தில் 118 இடங்களில் காட்டுத் தீ காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 20 இடங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இங்கு தீயணைப்பு படையினர் உள்ளிட்ட 1,400 வீரர்களை அனுப்பியுள்ளதாக கனடா அரசு தெரிவிக்கிறது.

மேலும் இங்கு வாஅழ்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. இதுவரை சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், நூற்றுக்கணக்கான கி.மீட்டருக்கும் அப்பால் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உணவு, உடை, தண்ணீர் போன்றவற்றை அரசு வழங்கிவருவதாகவும் அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல்பெர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களிலும் காட்டுத் தீ மிக வேகமாக பரவி வருகிறது. அல்பெட்டாவில் கிட்டத்தட்ட 100 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கத்துக்கு மாறான வறட்சி மற்றும் அதிக வெப்பநிலையே காட்டுத் தீ ஏற்படுவதற்கு காரணமாக கூறப்படுகிறது. பருவநிலை மாறும் வரை இந்நிலை தொடரும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply