ஒரே ஒரு மொபைல் ஆப்… எத்தனை மரங்களை காக்கும் தெரியுமா? அரசின் கவனத்துக்கு

ஒரே ஒரு மொபைல் ஆப்… எத்தனை மரங்களை காக்கும் தெரியுமா? அரசின் கவனத்துக்கு

ஆப் ஸ்டோரை எட்டிப் பார்த்தால் லட்சக்கணக்கான ஆப்ஸ் கொட்டிக் கிடக்கின்றன. அனைத்து மொபைல்களிலும் குறைந்தது 30-40 ஆப்ஸ் இருக்கின்றன. இவ்வளவு இருந்தாலும், இன்னும் சில விஷயங்களுக்கு ஆப்ஸ் இல்லையே என நமக்குத் தோன்றும். “இதுக்கு ஒரு ஆப் இன்னுமா யாரும் பண்ணல” என ஆதங்கம் கூட எழும். அப்படி ஒரு விஷயம் தான் இதுவும்.

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளால் பொட்டிக்கடை வரை பேடிஎம் வந்துவிட்டது. கையில் காசு இல்லாமல் வெறும் மொபைல்(சார்ஜரும்) மட்டும் எடுத்துக் கொண்டு அமெரிக்காவில் இருந்து அமைந்தகரை வரை போய் திரும்பலாம். அந்த அளவுக்கு ‘பேப்பர்லெஸ்’ வாழ்க்கைக்கு வாய்ப்புகள் உருவாகிவிட்டன. ஆனால், இந்த சுழற்சியில் ஒர் இடத்தில் உங்களால் பேப்பரை வேண்டாம் என சொல்ல முடியாது. எங்கே?

எங்கெல்லாம் நமக்கு ரசீது தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் அவர்கள் தரும் துண்டு மரத்தை (நிஜம்தானே) நாம் வாங்க வேண்டியிருக்கிறது. அலுவலகத்தில் கிளெய்ம் செய்ய, வீட்டில் கணக்கு ஒப்படைக்க, விலையை சரிப்பார்க்க, நம் செலவுகளை கண்காணிக்க என பல காரணங்களுக்காக நமக்கு ரசீது தேவைப்படுகிறது. ஆன்லைன் ஷாப்பிங்கே செய்தாலும், பேக்கிங் மீது இன்வாய்ஸ் காப்பியை வைத்துதான் அனுப்புகிறார்கள்.சூப்பர் மார்க்கெட்டில் 5 ரூபாய்க்கு சாக்லெட் வாங்கினாலும் சாக்லெட்டை விட நீளமாக ஒரு ரசீதை கொடுக்கிறார்கள். பிளாஸ்டிக் கேரி பேக்குகளை குறைக்க அதற்கு விலை வைத்து விற்பவர்களுக்கு இந்த ரசீது மரமாய் தெரிவதில்லை. உண்மையில் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் ரசீதுகளை மரமாய் மாற்றி நட்டால், ஒரு மாநகரின் அளவுக்கு காடுகளாய் விரிந்திருக்கும்.

இதற்கு ஒரு ஆப் இல்லையா?

இதுதான் கான்செப்ட். பீம்(BHIM) விட்டதே அரசு. அது போல இன்னொரு அதிகாரப்பூர்வ ஆப். நம் கையில் கொடுக்கப்படும் ரசீதின் சாஃப்ட் காப்பி. அதில் அந்தக் கடையின் கோடு நம்பர். அது QR கோடு ஆகவோ, அல்லது சர்வீஸ் டாக்ஸ் நம்பர் போன்றோ… இந்த ரசீது இந்தக் கடையினுடையது என்பதை சொல்லும் கோட். அடுத்து, நாம் வாங்கிய பொருட்கள், அதன் விலை மற்ற விஷயங்கள், தேதி அனைத்தும். இவை அனைத்தும் பி.டி.எஃப்(PDF) வடிவில் அந்த ஆப் மூலமாக நம் மொபைலுக்கு வந்துவிட வேண்டும். மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும்.

எந்தக் கடைக்குச் சென்றாலும் நம் மொபைல் எண்ணைதானே முதலில் கேட்கிறார்கள்? அந்த எண்ணை வைத்தே இந்த இ-ரசீதை நமக்கு அனுப்பிவிடலாம். கடைகளுக்கு மட்டும் இல்லாமல், ஏ.டி.எம்.ல் பணம் எடுத்தாலோ, வாடகை கொடுத்தாலோ என எல்லாவிதமான பண பரிமாற்றங்களுக்கும் இந்த இ-ரசீதை கொண்டு வரலாம். அரசும் ஒருவரின் , ஒரு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை எளிதில் கண்டறியலாம். மொபைல் நெட்வொர்க்குகளோடு சேர்ந்து இந்த ஆப்-க்கு மட்டும் இணையம் இலவசம் எனவும் அறிவிக்கலாம். இணையம் இல்லாவிட்டாலும், ப்ளூ டூத் மூலமாக கடைக்காரரின் மொபைல்/சிஸ்டமில் இருந்து வாடிக்கையாளரின் மொபைலுக்கு இ-ரசீது வரும் வாய்ப்பினையும் கொடுக்கலாம்.

இந்த இ-ரசீதை வைத்தே அலுவலகத்தில் கிளெய்ம் செய்யலாம். அந்த ஆப்பே நமது மாதாந்திர செலவுகளை இந்த ரசீதுகளை கூட்டி சொல்லிவிடலாம். இன்னும் ஏராளமான விஷயங்களை செய்யலாம்.

யோசித்துப் பாருங்கள். எவ்வளவு காகிதம் மிச்சம் ஆகும்? எவ்வளவு கேட்ரிட்ஜ் மிச்சமாகும்? எவ்வளவு மின்சாரம், எவ்வளவு குப்பைகள்? இவை அனைத்தையும் ஓர் ஆப் செய்ய முடியுமென்றால், அதைத்தானே முதலில் செய்ய வேண்டும்? Thanks to vikatan.com

Leave a Reply