ஓய்வுக்கால வருமானத்துக்கு இன்னொரு சாய்ஸ்!

ஓய்வுக்கால வருமானத்துக்கு இன்னொரு சாய்ஸ்!

வங்கி மற்றும் பிற நிறுவனங்களில் நிரந்தர வைப்பு நிதியை வைத்திருந்து, அதன்மூலம் கிடைக்கும் வட்டியை மட்டுமே நம்பியிருந்தவர்களுக்கு இது கடினமான காலம். கடந்த இருபது வருடங்களில் வைப்பு நிதியின் (ஃபிக்ஸட் டெபாசிட்) வட்டி பாதியாகக் குறைந்துள்ளது.

1997-ம் ஆண்டில் ஓய்வுபெற்ற ஒரு தம்பதியர், மாதம் ஐயாயிரம் முதல் ஏழாயிரம் ரூபாய்க்குள் வாழ முடிந்தது. இருபது ஆண்டுகள் கழித்து 2017-ல் அதே லைஃப் ஸ்டைலில் வாழ்வதற்கு ரூ.25,000 தேவைப்படுகிறது. அதாவது, இருபது ஆண்டுகளில் விலைவாசி நான்கு முதல் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது.

ஆனால், 1997-ல் வங்கிகள் 12-13 சதவிகிதமும் நிறுவனங்கள் 16 சதவிகிதமும் வட்டி வழங்கி வந்தன. இன்றோ, வங்கிகள் 6.5% வழங்குவதே பெரிய விஷயமாக இருக்கிறது. தனியார் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் 7.25% வட்டி வழங்குகின்றன. ஆனால், அதிகபட்சமாக மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் மட்டுமே டெபாசிட் பெறுகின்றன.

இந்தியாவும் சந்தைப் பொருளாதார நாடாக மாறிவரும் நிலையில், வாங்கும், வழங்கும் வட்டி இரண்டுமே இனி இறங்குமுகவேதான் இருக்க முடியும். கடன் வாங்கி வீடோ, வண்டியோ வாங்க முயற்சி செய்யும் இளம் வயதினருக்கு இது சாதகமாக இருந்தாலும், ஓய்வு பெற்றவர்களுக்கு இது பாதகமான விஷயமாகவே இருக்கும்.

அமெரிக்காவில் இன்று 10 வருட டெபாசிட்டுக்கு அதிகபட்சமாக 2.75% வட்டி; ஐந்து வருடங்களுக்கு 2% வட்டி மட்டுமே தரப்படுகிறது. நம் நாட்டில் வட்டி விகிதமானது இந்த அளவுக்குக் குறையாவிட்டாலும், வைப்பு நிதி வட்டி 5% அளவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

வட்டியானது இப்படிக் குறைந்துகொண்டே வரும் நிலையில், வட்டியை மட்டுமே நம்பியிருப்போர் என்ன செய்வது? இவர்களில் பலர் பங்குச் சந்தையிலும், பாண்டிலும் பணத்தைப் போட விரும்புவதில்லை. அப்படியானால், அதிக வருமானம் எதில்தான் கிடைக்கும் என்பதே இன்றைய மூத்த குடிமக்கள் எழுப்பும் முதல் கேள்வி ஆகும்.

இவர்களுக்கான ஒரு தீர்வு தான் ஆண்டுத் தொகை திட்டங்கள் என்று சொல்லப் படும் ஆனுயுட்டி (Annuity) திட்டங்கள். முதலீட்டாளருக்கு வாழ்நாள் முழுவதும் ஆண்டுத் தொகை வழங்கும் திட்டமே ஆனுயுட்டி திட்டங்களாகும். இவற்றைக் காப்பீடு நிறுவனங்கள் மட்டுமே வழங்க முடியும்.

ஆனுயுட்டியில் பல வகையான திட்டங்கள் உண்டு. ஃபிக்ஸட் ஆனுயுட்டி, மாறக்கூடிய ஆனுயுட்டி (variable annuity), உடனடி ஆனுயுட்டி, தள்ளிவைக்கப்பட்ட ஆனுயுட்டி (deferred annuity), குறிப்பிட்ட சதவிகிதத்தில் அதிகரிக்கும் ஆனுயுட்டி என்று பல வகை உண்டு.

ஃபிக்ஸட் ஆனுயுட்டியில் போடும் பணத்துக்கு முதலீட்டாளர் உயிருடனிருக்கும் வரையில் ஆண்டுத்தொகை வழங்கப்படும். முதலீடு செய்த அன்று நிர்ணயிக்கப்பட்ட வட்டி வாழ்நாள் முழுவதும் மாறாது. அவருக்குப்பிறகு ஆண்டுத் தொகையானது கணவனுக்கோ, மனைவிக்கோ கிடைக்கும்படியும் செய்யலாம். முதலீட்டாளர் இறந்தபின் அவருடைய வாரிசுக்கு முதலீடு செய்த தொகை திரும்பக் கிடைக்கும் இந்தத் திட்டத்துக்குக் கொஞ்சம் குறைந்த வட்டியும், முதலீட்டைத் திருப்பித் தரத் தேவையில்லாத திட்டத்துக்கு அதிக வட்டியும் கிடைக்கும்.

இன்றைக்குச் சிலரின் வாரிசுகள் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டனர். அவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப்பின் 10, 20 லட்ச ரூபாய் என்பது ஒரு பொருட்டாகவே இருக்காது. ஆனால், உயிருடன் இருக்கும் வரையில் முதலீட்டாளருக்கு அதிகப் பணம் கிடைக்கும். இதனால் தங்களின் செலவுக்குப் பிள்ளைகளை எதிர்பார்க்காமல் இருக்க இது உதவும். இந்த மாதிரி கேட்டகரி முதலீட்டாளர்கள் திரும்பப் பணம் வராத ஆனுயுட்டியைத் தேர்ந்தெடுக்கலாம்.

உடனடி ஆனுயுட்டியில், பணம் போட்ட அடுத்த ஆண்டு முதல் ஆண்டுத் தொகை கிடைக்கும். தள்ளிவைக்கப்பட்ட ஆனுயுட்டியில் மாதாமாதம் அல்லது ஆண்டுக்கொருமுறை பணம் போட்டு வந்தால், ஓய்வுக்குப்பின் ஆண்டுத் தொகை கிடைக்கும். உயரும் ஆனுயுட்டியில் ஆண்டுத் தொகை குறிப்பிட்ட சதவிகிதம் உயர்ந்து கொண்டே வரும்.

ஆனுயுட்டியின் சாதகம், வங்கிகள் தரும் வட்டி குறைந்துவிடுமோ என்ற கவலையில்லை. ஆண்டுக்கு 3% அதிகமாகிக் கொண்டேபோகும் திட்டத்தில் பணம் போட்டால், விலைவாசி ஏற்றத்தையும் ஓரளவுக்குச் சமாளிக்கலாம்.பாதகம், ஆனுயுட்டியில் போட்ட பணம் முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை திரும்பக் கிடைக்காது. வைப்பு நிதியைப் போல, லிக்விடிட்டி கிடையாது.

இந்திய அரசு நிறுவனமான எல்.ஐ.சி வழங்கும் ஜீவன் அக்‌ஷய் ஓய்வூதியத் திட்டம் இப்போது பிரபலமாக உள்ளது. கடந்த ஓரிரு ஆண்டுகளாக வங்கிகள் தரும் வட்டி விகிதம் குறைந்ததால், நிறைய பேர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள். மகாராஷ்ட்டிர மாநிலம் தானேவில் ஒருவர் 100 கோடி ரூபாய் திட்டத்தில் முதலீடு செய்திருக்கிறார்.

ஜீவன் அக்‌ஷய் ஒரு உடனடி பென்ஷன் திட்டம். இந்த ஆண்டு பணம் போட்டால் அடுத்த ஆண்டிலிருந்து பணம் கிடைக்கும். இதில் 30 வயது முதல் 85 வயது வரை உள்ளோர் முதலீடு செய்யலாம். முதலீட்டாளரின் வயதுக்கும் அவர் தேர்வு செய்யும் திட்டத்துக்கும் ஏற்றபடி ஆண்டுத் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.

ஜீவன் அக்‌ஷய், ஏழு ஆப்ஷன்களை வழங்குகிறது.

1. ஆயுள்காலம் முழுவதும் ஒரே தொகை திரும்பக் கிடைக்கும். முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்காது

2. 5/ 10/ 15/ 20 ஆண்டு காலம் ஒரே தொகை திரும்பக் கிடைக்கும். அதன்பிறகு முதலீட்டாளர் உயிருடன் இருந்தால், அப்போது நிர்ணயிக்கப்படும் தொகை மிச்சமுள்ள காலத்துக்கு வழங்கப்படும். முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்காது.

3. உயிருடன் உள்ள வரை ஒரே தொகை திரும்பக் கிடைக்கும். இறப்புக்குப்பின் வாரிசுக்குப் பணம் திரும்பக் கிடைக்கும்

4. ஆயுள் காலம் முழுதும் பென்ஷன் கிடைக்கும். அது ஆண்டுக்கு 3% உயர்ந்துகொண்டே போகும். முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்காது.

5. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்ஷன் கிடைக்கும். அவருக்குப் பிறகு அவருடைய கணவன் அல்லது மனைவிக்கு 50% பென்ஷன் கிடைக்கும். முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்காது.

6. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்ஷன் கிடைக்கும். அவருக்குப் பிறகு அவருடைய கணவன் அல்லது மனைவிக்கும் அதே 100% பென்ஷன் கிடைக்கும். முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்காது.

7. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்ஷன் கிடைக்கும். அவருக்குப் பிறகு அவருடைய கணவன் அல்லது மனைவிக்கு அதே 100% பென்ஷன் கிடைக்கும். இருவரின் காலத்துக்குப்பிறகு, முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்கும்.

முதலீடு செய்பவரின் தேவைக்கேற்ப இந்த ஏழு ஆப்ஷன்களில் ஏதேனும் ஒன்றை ஒருவர் தேர்வு செய்யலாம். ஒருமுறை தேர்ந்தெடுத்த பிறகு மாற்றம் செய்ய இயலாது என்பது முக்கியமான விஷயம். உதாரணத்துக்கு, இன்று ஓய்வு பெறும் ஒருவர், தன் கையில் இருக்கும் 20 லட்சம் ரூபாயில் பாதியை இந்தத் திட்டத்தில் போடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். ‌

அறுபது வயதுள்ள ஒருவருக்கு ஆப்ஷன் ஆறில் 8 சதவிகிதமும், ஆப்ஷன் ஏழில் 7 சதவிகிதமும் கிடைக்கும். இப்போதைக்கு இது வங்கி வட்டியை விட அதிகமாக இருந்தாலும், பத்தாண்டுகள் கழித்து வங்கி வட்டி
இன்னும் குறைந்தபின் அது மிக அதிகமாகவே தெரியும்.

‘இப்படி நிரந்தரமாக பணத்தை முடக்க முடியாது, அதே சமயத்தில், பத்தாண்டு களுக்காவது நல்ல வட்டி வேண்டும்’ என்கிறீர்களா? உங்களுக்கானது பிரதமரின் வய வந்தன யோஜனா திட்டம். இதில் 60 வயதுக்கு மேற்பட்டோர் முதலீடு செய்யலாம். முதலீட்டுக் காலம் 10 ஆண்டுகள். இதில் 8% முதல் 8.3% வரை வட்டி கிடைக்கும். இதில் அதிகபட்சம் ரூ.7.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

மருத்துவம் போன்ற அதிமுக்கிய காரணங்களுக் காக மட்டும் இந்தத் திட்டத்திலிருந்து விலகலாம். பிற காரணங்களுக்காக வேண்டுமெனில், 75% வரை கடனாகப் பெறலாம். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டாளருக்குப் பணம் திரும்பக் கிடைக்கும். நடுவில் அவர் இறக்க நேரிட்டால் வாரிசுக்குப் பணம் திரும்பக் கிடைக்கும்.

பங்குச் சந்தை, பாண்டுகளில் முதலீடு செய்ய விரும்பாதவர்கள் அதிக வருமானம் தரும் ஆனுயுட்டி திட்டங்களை நாடலாமே!

Thanks to Vikatan.com

Leave a Reply