ஓல்டு இஸ் கோல்டு! – மீண்டும் பழைமைக்குத் திரும்புவோம்
பரபரப்பான நவீன வாழ்க்கை, நமக்குத் தந்த நோய்கள் பல. மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்னைகள் முதல் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், தொப்பை, சர்க்கரைநோய், இதய நோய்கள், புற்றுநோய்… என நோய்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. கம்பஞ்சோறும், ராகிக்கூழும் உண்டுவிட்டு காட்டுக்குப் போய் மாங்குமாங்கெனப் பாடுபட்டு வந்த காலத்தில் நம் தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும் இல்லாத நோய்கள் எல்லாம் இன்று நம்மை ரவுண்டுகட்டி அடிக்கின்றன. இதற்கு எல்லாம் என்ன காரணம்? மாடர்ன், ட்ரெண்ட், ஸ்டைல் என நம்பி, பழைய வாழ்க்கைமுறையில் இருந்த ஆரோக்கியமான விஷயங்களை எல்லாம் மறந்துவிட்டு புதியதன் பின்னால் ஓடியதுதான் காரணம். இப்போது, ‘ஆர்கானிக்குக்குத் திரும்புவோம்… பழைமைக்குத் திரும்புவோம்’ என்ற குரல்கள் மெள்ள வலுப்பெற்று வருவதைப் பார்க்கிறோம். இதை, `ரிவர்ஸ் லைஃப்ஸ்டைல்’ (Reverse lifestyle) என்கிறார்கள்.
உணவு, உடற்பயிற்சி, உறக்கம் மூன்றுமே ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படையானவை. இவற்றை நல்வழியில் மாற்றி அமைப்பதன் மூலம் நலம் காணலாம். முதலில் உணவைப் பற்றிப் பார்ப்போம்.
* நாம் தினசரி உண்ணும் உணவு, நம் உடலுக்கு ஆற்றல் தருவதோடு, நம் உடலின் பெளதீகக் கட்டுமானத்துக்கு அடிப்படையானதாக இருக்கிறது. அதனால், ஏதோ சாப்பிட்டோம் என்று விட்டுவிட முடியாது. இயற்கையாக விளைந்த, ரசாயனக் கலப்பில்லாத காய்கறி, பழங்களையே இயன்றவரை பயன்படுத்த வேண்டும். தற்போது பல இடங்களில் இயற்கை வேளாண் பொருள்களுக்கான கடைகள் உள்ளன. இப்படித் தேர்ந்தெடுத்து உண்ணும்போது, உடலுக்குத் தீங்கான வேதிப்பொருள்கள் தடுக்கப்படுகின்றன. இதனால், உடல் உறுப்புகள் ஆரோக்கியம் பெறுகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. நீண்ட ஆயுளுக்கும், துடிப்பான உடல் செயல்பாட்டுக்கும் ஆர்கானிக் உணவுகள் அச்சாரம் இடுகின்றன.
* சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னரோ, அரை மணி நேரத்துக்குப் பின்னரோ மட்டுமே தண்ணீர் பருக வேண்டும். இடையில் மிகவும் அவசியமானால், தண்ணீர் குடிக்கலாம். சாப்பாட்டுக்கு இடையில் அதிகமாகத் தண்ணீர் பருகுவது அஜீரணக்கோளாறுக்குக் காரணமாகும்.
* நம் பாரம்பர்ய முறைப்படி, நமது உடலுக்கு அரிசி உணவுகளைத் தவிர, பிற தானியங்களால் செய்யப்படும் உணவுகளும் மிக முக்கியம். குறிப்பாக கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, தினை, வரகு, பனிவரகு, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை தினசரி உணவில் ஒரு வேளையாவது சேர்த்துக்கொள்வது நல்லது. இதில் முக்கியமான பிரச்னை என்னவென்றால், இந்தச் சிறுதானியங்களைக் கஞ்சியாகவோ, கூழாகவோ செய்தால் பெரியவர்கள் உண்பார்கள். ஆனால், குழந்தைகளை உண்ணவைப்பது மிகவும் கடினம். எனவே, அவர்களுக்குச் சிறுதானியங்களில் செய்யக்கூடிய பலகாரங்கள், சிற்றுண்டிகள் போன்றவற்றைச் செய்துகொடுக்கலாம்.
* உணவில் எந்த அளவு சிறுதானியம், அரிசி, கோதுமை இருக்கிறதோ, அதைவிட ஒரு பங்கு அதிகமாகக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் இருக்க வேண்டும். பல வண்ணக் காய்கறிகள், பழங்களில் தினசரி ஒரு வண்ணம் என உண்ணலாம். இதனால், அனைத்துப் பழங்கள், காய்கறிகளில் உள்ள பலன்களும் உடலுக்குக் கிடைக்கும்.
* பழங்களை நன்கு நீரில் கழுவியபின், அப்படியே கடித்துச் சாப்பிடுவதே நல்லது. இயன்றவரை பழச்சாறாக அருந்துவதைத் தவிர்க்கலாம். அப்படியே அருந்தினாலும், பால், சர்க்கரை, ஐஸ்கட்டி சேர்க்காமல் ஜூஸாக்கிச் சாப்பிடுவதே சிறந்தது. செயற்கையான பழச் சாறுகளில் பதப்படுத்திகள், சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது.
* பாக்கெட்களில் அடைக்கப்பட்ட எந்த ஓர் உணவையும் எடுத்துக்கொள்ளவே கூடாது. இன்ஸ்டன்ட் மிக்ஸ், மசாலா பொடிகள், டப்பாக்களில் அடைத்த உணவுப்பொருள்கள் என அனைத்தையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
* உணவில் வெள்ளைச் சர்க்கரையைக் குறைத்துக்கொண்டு நாட்டுச்சர்க்கரை, பனை வெல்லம், தேன் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும்.
* முடிந்த அளவு வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, எண்ணெயில் பொரித்த பண்டங்களை வெளியில் உண்ண வேண்டாம். வீட்டில் ஆரோக்கியமான உணவுகளான சுண்டல், பயறு, உளுந்து வடை, எள் உருண்டை ஆகியவற்றைச் செய்து உண்ணலாம்.
* நம்முடைய உணவின் அளவு எப்போதுமே காலையில் அதிகமாகவும், மதியம் சற்றுக் குறைவாகவும், இரவில் அதைவிடக் குறைவாகவும் இருக்க வேண்டும். இரவில் இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகள் சிறந்தவை. மேலும், இரவு படுக்கச் செல்வதற்குக் குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும்.
* தண்ணீரை பிளாஸ்டிக் கோப்பைகளிலும் பாட்டில்களிலும் அடைத்துவைக்காமல், செம்புப் பாத்திரம், மண் கலயம் போன்றவற்றில் வைத்துக் குடிக்கவும். இது உடலுக்கு மிகவும் நல்லது.
* குறிப்பிட்ட சீஸனில் விளையும் காய்கறிகள், பழங்களைத் தவறாமல் சாப்பிட வேண்டும். சீஸன் அற்ற காலங்களில் கிடைக்கும் பழங்கள் இயற்கையான முறையில் இருப்பதற்கான வாய்ப்புக் குறைவு. எனவே, அவற்றை அளவாகச் சாப்பிடலாம்.
* வாரம் ஒரு முறை நோன்பு இருக்க வேண்டும். ஒன்றுமே சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பழங்களை மட்டுமோ காய்கறிகளை மட்டுமோ சாப்பிடலாம். மருத்துவரின் ஆலோசனை பெற்று நம் உடல்நிலைக்குத் தகுந்தவாறு நோன்பு இருக்க வேண்டும்.
ஓய்வும் உறக்கமும்
* நாம் உறக்கத்தைக் கண்டுகொள்வதே இல்லை. பலர் கடனே என்று உறங்குகிறோம். ஆனால், உறக்கம் நம் உடலுக்கு மிகவும் முக்கியம். நாம் உறங்கும் நேரத்தில்தான், நம் உடல் பல வேலைகளைச் செய்கிறது. உறக்கம் என்றால் எப்போது வேண்டுமானாலும் உறங்கக் கூடாது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை உறங்குவதுதான் சரியானமுறை. அந்த நேரத்தில்தான் உடலுக்குத் தேவையான அனைத்து வேலைகளும் நடைபெறுகின்றன.
* காலை 4 மணி, அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்னதாக எழுவது மிகச் சரியான பழக்கம். ஆனால், இன்றைய வாழ்க்கைமுறையில் இது மிகவும் கடினமான ஒரு விஷயம். முடிந்த அளவு இரவு சீக்கிரம் உறங்க வேண்டும் என்ற உறுதியுடன் இருக்க வேண்டும். தேவை இல்லாமல் டி.வி., மொபைல் ஆகியவற்றில் செலவிடும் நேரத்தை உறக்கத்தில் செலவிடலாம்.
* முந்தைய காலத்தில் இரவில் மிகவும் வெளிச்சமாக எதுவுமே இருக்காது. ஆனால், இன்று நாமோ இரவில் டி.வி., மொபைல்போனைப் பார்க்கிறோம். நாம் உறங்கும் இடம் அமைதியாகவும் இருட்டாகவும் இருக்க வேண்டும். கண்களை உறுத்தாத, உறக்கத்தைப் பாதிக்காத சிறு விளக்கு இருந்தால் மட்டும் போதுமானது.
உடற்பயிற்சி
* தினமும் காலை 4:00 – 6:00 மணி வரை நன்றாக வியர்க்கும் அளவுக்குக் கடினமான வேலையோ, உடற்பயிற்சியோ செய்ய வேண்டும். இன்றைய சூழலில் பலர் நண்பகல் 11:00 மணி அளவில் ஜிம்முக்குச் செல்கிறார்கள். இது முழுமையான பலனைத் தராது. அதிகாலையில் செய்வதுதான் சிறந்த உடற்பயிற்சி.
* மாலையில் செய்வதானால், மூச்சுப்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யலாம். கடினமாகச் செய்வதைத் தவிர்க்கவும்.
* நடைப்பயிற்சி செய்பவர்கள் பேசிக்கொண்டோ, பாடல்களைக் கேட்டுக்கொண்டோ செய்வதைத் தவிர்க்கவும். இது நடைப்பயிற்சியின் முழுமையான பலனைத் தராது.
* தினமும் சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும். முன்பு தினமும் காலையில் மாலையில் என பூஜைகளை இதற்காகத்தான் செய்தார்கள். கடவுள் நம்பிக்கை இருப்பின் பூஜைகளோ, இல்லாவிடில் தியானமோ செய்யலாம்.
இவை அனைத்தையும் தாண்டி, நாம் மறந்து போன மிக முக்கியமான வாழ்க்கைமுறைகளில் ஒன்று, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது. வெள்ளி செவ்வாய் பெண்களும், புதன், சனி ஆண்களும் வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இப்படிக் குளிப்பதன் மூலம் உடலில் ஏற்பட்டிருக்கும் சூடு குறைவதோடு, வாதம், கபம், பித்தம் ஆகியவை சமநிலையில் இருக்கும்.