கடவுள் தான் உங்களை காப்பாற்ற முடியும்: கார்த்தி சிதம்பரத்திற்கு நீதிமன்றம் எச்சரிக்கை
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வருகின்ற மார்ச் 5, 6, 7, 12 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை முன்பு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் இல்லையேல் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெறுவதற்கு வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் வழங்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டி கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில் அமலாக்கத்துறை குறிப்பிட்ட மார்ச் 5, 6, 7, 12 ஆகிய தேதிகளில் கார்த்தி சிதம்பரம் தவறாமல் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்த நீதிபதிகள், சட்டத்துடன் விளையாடாதீர்கள். அப்படி செய்தால் கடவுள் தான் உங்களை காப்பாற்ற முடியும் என்று கூறிய நீதிபதிகள், ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்