கட்சி ஆரம்பிக்கும் எந்த நடிகரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது: நாஞ்சில் சம்பத்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால் உள்பட பலர் அரசியல் களத்தில் இறங்கியுள்ள நிலையில் அரசியலில் குதித்துள்ள நடிகர்கள் யாரும் ஒருபோதும் எம்ஜிஆர் ஆகி விட முடியாது என்று நாஞ்சில் சம்பத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், தமிழக அரசியலில், நடிகர்களால் நிச்சயம் கால் ஊன்ற முடியாது என்றும், நடிகர்கள் கட்சி துவங்குவதால், திராவிட கட்சிகளுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது என்றும், காடு, நிலம், காற்று , நீர் இருக்கும் வரை திராவிடம் இருக்கும் என்றும், வேறு எந்த இயக்கத்திற்கும் இங்கு இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் தான் அரசியலை விட்டு வெகு தொலைவுக்கு வந்து விட்டதாகவும், இனி எந்த கட்சியிலும் இணையப்போவதில்லை என்றும் நாஞ்சில் சம்பத் உறுதிபட கூறினார். மேலும் திமுகவில் அழகிரியை இணைத்து கொண்டால் அந்த கட்சி மேலும் வலுவடையும் என்றும், ஆனால் முடிவெடுக்கக்கூடிய இடத்தில் மு.க.ஸ்டாலின் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.