கட்டிடக் கலைஞரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
கனவு இல்லத்தை வடிவமைப்பதற்கான சரியான கட்டிடக் கலைஞரை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது நம்மில் பலருக்கு விடை தெரியாத கேள்விதான். அப்படியே சரியான கட்டிடக் கலைஞரைத் தேர்ந்தெடுத்துவிட்டாலும் அவரிடம் என்னென்ன விஷயங்களைக் கேட்பது என்று நமக்கு முழுமையாகத் தெரியாது. ஆனால், அவரிடம் தெளிவான கேள்விகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வதன் மூலம் மட்டுமே நம்முடைய கனவு இல்லத்தின் அடிப்படையான விஷயங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
பாதுகாப்பான வாழ்வுக்கான தரமான கட்டுமானம், சுகாதாரம் போன்ற அம்சங்களுடன் நம்முடைய முதலீட்டை இல்லமாக மாற்றுவது ஒரு கட்டிடக் கலைஞரின் பொறுப்பு. அதேமாதிரி, கட்டப்படும் கட்டிடம் சட்ட வரையறைக்குள் கட்டப்படுகிறதா என்பதை உறுதிசெய்வதும் அவருடைய கடமைதான். இந்த இரண்டு பொறுப்புகளையும் ஒரு கட்டிடக் கலைஞர் நேர்மையாகவும், திறமையாகவும் செய்கிறாரா என்பதை உறுதிசெய்ய ‘கவுன்சில் ஆஃப் ஆர்கிடெக்சர்’ (Council of Architecture) என்ற அமைப்புச் செயல்படுகிறது. இந்த அமைப்பு இந்திய அரசால் கட்டடிக்கலைஞர்கள் சட்டத்தின்படி 1972-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கட்டிடக் கலைஞர்களின் நன்னடத்தைக் கோட்பாடுகளைக் கண்காணிக்கவும், சட்ட உரிமம் வழங்கும் பணிகளையும் இந்த அமைப்பு செய்துவருகிறது.
ஒரு கட்டிடக்கலைஞர் கட்டுமான அறிவு, அழகியல் போன்ற விஷயங்களைப் பிரதானமாக வைத்தே பெரும்பாலும் செயல்படுவார். அவரிடம் உங்கள் வீடு எப்படிப்பட்ட அம்சங்களுடன் வடிவமைக்கப்பட வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்க வேண்டும். உங்கள் வீட்டைப் பற்றிய கற்பனை வடிவமைப்பை அவரிடம் முதலில் எடுத்துரைத்துவிடுங்கள். உங்களுடைய கற்பனை வடிவமைப்பை அந்த அளவுக்கு அவர் உள்வாங்கிக்கொள்கிறாரோ, அந்த அளவுக்கு உங்கள் வீடு உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கும்.
விருப்பங்களை எழுதுங்கள்
கட்டிடக் கலைஞரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், வீட்டைப் பற்றிய உங்களுடைய விருப்பங்களை விரிவாக எழுதுங்கள். ஒவ்வொரு அறையும் எப்படியிருக்க வேண்டும், ஒவ்வொரு பகுதியும் எப்படியிருக்க வேண்டும் என்பதை விளக்கமாக எழுதுங்கள். அறைகளின் பயன்பாடுகளைத் தாண்டி எல்லா விஷயங்களையும் எழுதுங்கள். எந்த மாதிரியான கட்டுமானப் பொருட்களும், வடிவமைப்புப் பொருட்களும் பயன்படுத்த வேண்டும் என்ற விருப்பத் தேர்வையும் எழுதுங்கள்.
இணையத்தில் இருந்து உங்களுக்குப் பிடித்த வடிவமைப்புப் படங்களையும் சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏன் அவை பிடித்திருக்கின்றன என்பதற்கான குறிப்புகளையும் எழுதிவைத்துக் கொள்ளுங்கள். வீட்டின் வெளிச்சம், இடம், அமைப்பு என எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதிவைத்துக்கொள்ளுங்கள். இது உங்களுடைய வீட்டின் அடிப்படையான ‘அவுட்லைன்’ திட்டமாக இருக்கும். குடும்பத்தினருடன் பேசி, உங்களுடைய எண்ணங்களுக்கு இறுதிவடிவம் கொடுங்கள். இதை வைத்து கட்டிடக் கலைஞர் உங்களுடைய விருப்பத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
பட்ஜெட்டும் நேரமும்
இந்த வீட்டைக் கட்டுவதற்காக எவ்வளவு காலத்தை நிர்ணயம் செய்கிறீர்களோ அதைவைத்து பட்ஜெட்டையும், நேரத்தையும் திட்டமிடுங்கள். இந்த பட்ஜெட்டை எல்லா வகையிலும் ஏற்பாடு செய்தபின்னர்தான் வீட்டின் கட்டுமான பணிகளைத் தொடங்க வேண்டும். வீட்டின் வடிவமைப்புத் திட்டத்துக்கான காலம், கட்டுமான திட்டத்துக்கான காலம் இரண்டையும் சரியாகத் திட்டமிட வேண்டும்.
வீடு கட்டப்படும்போது ஏற்படும் எதிர்பாராத பணவீக்கத்தைச் சமாளிக்கும்படி உங்களுடைய பட்ஜெட் அமைந்திருக்க வேண்டும். வீட்டின் வடிவமைப்பு, பொறியாளர் ஆலோசனைகள் போன்றவை கட்டுமான செலவில் பத்து சதவீதம் வரை இருக்கும். அதனால், அவற்றைத் தவிர்த்துவிட்டு பட்ஜெட் போடுவது கடைசி நேரத்தில் நிதிச் சிக்கலை உருவாக்கும்.
தேடல் முக்கியம்
கட்டிடக் கலைஞரைத் தேடுவதற்குப் போதுமான நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். கட்டிடக் கலைஞரைத் தேர்ந்தெடுக்கச் சிறந்த வழி உங்களுடைய நட்பு வட்டத்திடம் விசாரிப்பதுதான். அவர்களுடைய வீட்டுக்கு வடிவமைத்த நேரடியான கட்டிடக் கலைஞராக இருந்தால் கூடுதல் நல்லது. அப்படியில்லாவிட்டால், கட்டிடக்கலை பத்திரிகைகளிலும். இணையதளங்களிலும் தேடலாம். ஒரேயொரு கட்டிடக் கலைஞரிடம் பேசிவிட்டு முடிவெடுக்காமல், குறைந்தபட்சம் நான்கைந்து பேரிடமாவது பேசிப்பாருங்கள். அவர்களுடைய பழைய பணிகளைப் பார்த்து மட்டும் தீர்மானிக்காமல் அவர்களுடைய திட்டத்துக்கான பட்ஜெட், நேரம், வேலை முறைகள் போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு தீர்மானியுங்கள்.
மாற்றங்களுக்குத் தயாராக இருங்கள்
கட்டிடக் கலைஞர்களை முதல்முறை பார்த்துப் பேசும்போது உங்களுடைய வீட்டின் திட்டத்தைப் பற்றி சுருக்கமாக விவரியுங்கள். அவர்களிடம் உரையாடும்போது திட்டத்தில் ஏதாவது நியாயமான மாற்றங்களைச் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள். ஒப்பந்தம் போடுவதற்கு முன், தேர்ந்தெடுத்த கட்டிடக் கலைஞரின் பழைய பணிகளை நேரடியாகச் சென்று பார்த்துவிட்டு வாருங்கள்.
சுதந்திரமாகச் செயல்படவிடுங்கள்
வீட்டின் கட்டுமானப் பணிகளை கட்டிடக் கலைஞரிடம் ஒப்படைத்த பிறகு, அவரைச் சுதந்திரமாகச் செயல்படவிடுங்கள். உங்களுடைய வடிவமைப்பு ஆலோசனைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை மட்டும் தொடர்ந்து மேற்பார்வை செய்துகொள்ளுங்கள். மற்றபடி, பெரிய கட்டுமான மாற்றங்களைத் திட்டம் ஆரம்பித்த பிறகு செய்யச் சொல்லாதீர்கள். உங்கள் கட்டிடக் கலைஞரிடம் சுமுகமான நட்புறவை, உங்கள் கனவு இல்லத்தை முழுமையாக உருவாக்கும்வரை கடைப்பிடியுங்கள். கூடுமானவரை, சட்டபூர்வமான ஒப்பந்த முறையில் கட்டுமான கலைஞருக்கும் உங்களுக்குமான தொடர்பு இருக்கட்டும். அது பல பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும்.