கட்டிடத்துக்கும் போடலாம் கண்ணாடி
சென்னையின் சூடான, வெப்ப மண்டல காலநிலைக்கு ஏற்ற கண்ணாடி வகைகள் இப்போது கட்டுமானச் சந்தையில் கிடைக்கின்றன.
நாட்டின் கட்டுமானத் துறை வளர்ச்சியடைந்திருப்பதால், உயரமான, திறமையான வீடுகள் இப்போது நகர்ப்புறங்களைப் பெரிய அளவில் அலங்கரிக்கத் தொடங்கியிருக்கின்றன.
கடந்த காலங்களில், கட்டுமானத்துக்கு ‘கான்கிரீட்’ அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இந்தப் பத்து ஆண்டுகாலத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய கட்டுமான பொருட்கள் பயன்பாடு அதிகரித்திருக்கிறது.
இந்தப் பொருட்களில் கண்ணாடி மிகப் பிரபலமாக இருந்தாலும், இந்தியாவின் காலநிலைக்கு அது பொருத்தமாக இருக்காது என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
கண்ணாடி, அதன் வெளிப்படைத் தன்மைக்காகவும், திடமான இயல்புக்காகவும் அறியப்படுகிறது. ஆனால், இதன் கதிரியக்க வெப்பத்தைக் கடத்தும் திறனால் வெளிப்புறப் பொருட்களால் ஏற்படும் வெப்ப அதிகரிப்பால் பாதிக்கப்படுகிறது.
அத்துடன், சுற்றுப்புறங்களில் இருந்து பெறப்படும் மறைமுக வெப்ப அதிகரிப்பைச் சந்திக்க நேர்கிறது. அதேமாதிரி, நிலையான உட்புற வெப்பநிலையைப் பராமரிப்பதற்கு நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கிறது.
இவையெல்லாம் கண்ணாடியைப் பயன்படுத்துவதில் இருக்கும் குறைபாடுகள். எனினும், நவீன கண்ணாடி வகைகள், சாதாரண கண்ணாடி வகைகள் சந்திக்கும் இந்தப் பிரச்சினைகளையெல்லாம் கடந்துவிட்டன.
கண்ணாடி வகைகள்
தொழில்நுட்ப வளர்ச்சியால் பல கண்ணாடி வகைகள் இப்போது உருவாக்கப்பட்டிருக்கின்றன.
நிறமூட்டப்பட்ட கண்ணாடி (tinted glass, சூரிய கட்டுப்பாடு கண்ணாடி (solar control glass), வெப்பக்காப்பு கண்ணாடி (thermal insulation glass), உருவங்காட்டும் கண்ணாடி (mirror glass), லாக்குவர்ட் கண்ணாடி (lacquered glass – SGG Planilaque), பன்முகச் செயல்பாட்டுக் கண்ணாடி (dynamically operable glass), தீப்பாதுகாப்புக் கண்ணாடி (fire safe glass) போன்ற வகைகளைக் குறிப்பிடலாம்.
“இன்று, இந்தக் கண்ணாடி வகைகள் எல்லாம் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. அதுவும் இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற மாதிரி தயாரிக்கப்படுகின்றன” என்று சொல்கிறார் ‘செயின்ட்-கோபெய்ன் இந்தியா’ கிளாஸ் அண்ட் சல்யூஷசன்ஸ் நிர்வாக இயக்குநர் ஆர். சுப்பிரமணியன்.
ஒரு சாதாரணமான கண்ணாடியை சூரியக் கட்டுப்பாடு, வெப்பக்காப்புக் கண்ணாடியாக மாற்ற முடியும். இது பகல் வெளிச்சத்தைக் கட்டுப்படுத்தவும், வெப்பச் சுமையைக் குறைக்கவும் உதவும். லாக்குவர்ட் கண்ணாடியையும் ஒரு சாதாரண கண்ணாடியிலிருந்து உருவாக்கமுடியும்.
இந்த வகைச் சிறப்புக் கண்ணாடியால் ‘தீ’யை 120 நிமிடங்களுக்கு எதிர்க்க முடியும். “கண்ணாடி வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதால், அதை வைத்து வெளிச்சத்தையும், இடத்தையும் இணைத்து விதவிதமான வடிவமைப்புகளை உருவாக்க முடிகிறது. இந்தத் தன்மையால் உட்புற இடத்தையும் வெளிப்புற இடத்தையும் எளிமையாக இணைக்க முடிகிறது” என்கிறார் அவர்.
சமகால கட்டிடங்களில் முக்கியமான செயல்பாட்டுத் தேவையாக ஆற்றல்-திறன் செயல்படுகிறது. ஒரு கட்டிடத்தின் ஆற்றல் பயன்பாட்டின் பெரும்பாலான சதவீதம் குளிர்சாதனத்துக்காகவும் செயற்கை வெளிச்சத்துக்காவும் பயன்படுகிறது.
சரியான கண்ணாடியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், இந்த ஆற்றல் சுமையைப் பெரியளவில் குறைக்க முடியும். இன்னும் சொல்லப்போனால், சூரியக் கட்டுப்பாடு கண்ணாடி ஒரு கட்டிடத்தில் சூரிய வெளிச்சத்தால் ஏற்படும் எழுபது சதவீத நேரடி வெப்ப அதிகரிப்பைக் குறைத்துவிடும். இதனால், கட்டிடத்தைக் குளிர்விக்கச் செய்யப்படும் செலவு பெரியளவில் குறைந்துவிடும்.
வணிகத் தேவையும் வீட்டுத் தேவையும்
ஒரு கட்டிடத்தின் வடிவமைப்பையும் கட்டுமானத்தையும் ஒரு நகரத்தின் காலநிலையைப் பொருத்தே தீர்மானிக்க முடியும். “சென்னையைப் போன்ற நகரத்தில், தீவிரமான சூரியக் கதிர் வீச்சையும் அதிகமான ஈரப்பதத்தையும் சேர்த்து சமாளிக்க வேண்டியிருக்கும்.
அதனால், ஒரு கட்டிடத்தின் வடிவமைப்பு சூரியக் கதிர் வீச்சிடமிருந்து பாதுகாக்கும்படி இருக்க வேண்டும்” என்று சொல்கிறார் விஜய் சாந்தி பில்டர்ஸ் திட்ட இயக்குநர் தர்ஷன் ஜெயின்.
“ஒரு வணிக கட்டிடத்தில், இரட்டை மெருகூட்டல் முகப்பு அமைப்பது வெப்பக் கடத்தலைத் தடுக்கும். அத்துடன் நாற்பதிலிருந்து அறுபது சதவீதம் வரை பகல் வெளிச்ச ஆற்றலைச் சேமிக்க முடியும். பல்வேறு கண்ணாடி வகைகளான வலுவூட்டப்பட்ட கண்ணாடி, நிறமூட்டப்பட்ட கண்ணாடி, சுய-சுத்தம் செய்யும் கண்ணாடி போன்றவற்றையும் பயன்படுத்தலாம் “ என்று சொல்கிறார் நவீன்’ஸ் தொழில்நுட்பப் பொது மேலாளர் என். கல்யாணராமன்.
வெளிச்சம், வெப்பத்தைத் தக்கவைத்தல் போன்ற செயல்பாட்டுத் தேவைகளைக் ‘கண்ணாடி வேய்தல்’ (Glass cladding) நிறைவு செய்கிறது. கடினமான கண்ணாடியை வெளிப்படைத்தன்மையான படிக் கட்டுகள், நிறமூட்டப்பட்ட அலமாரிகள், உட்கூரை போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்.
கட்டுமானக் கலைஞர்கள், கட்டுநர்கள் இப்போது தங்களுடைய குடியிருப்புத் திட்டங்களிலும் கண்ணாடியை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். குளியலறை, ‘கிளப் ஹவுஸ்’ போன்ற இடங்களில் கண்ணாடியைப் பயன்படுத்தலாம்.
வீட்டுக்குள் இயற்கை வெளிச்சத்தை அதிகமாக வரவழைப்பதற்கும் கண்ணாடியைப் பயன்படுத்தலாம்” என்று சொல்கிறார் அக்ஷயா தலைவரும், சிஇஓவுமான டி. சிட்டிபாபு.
வெளிப்புறத்துக்கு மட்டுமல்ல
உட்புறத்தில் அமைப்பு, நிறம், அடையாளம் போன்றவற்றை ஏற்படுத்துவதற்கும் கண்ணாடியை பயன்படுத்தலாம். அத்துடன், சுவர்களுக்கும், பிரிப்பான்களுக்கும், கதவுகளுக்கும், அலமாரிகளுக்கும் கண்ணாடியை உபயோகிப்பது இடவசதியைக் கொடுக்கும். “இடத்தைச் சேமிக்க கண்ணாடியைப் பயன்படுத்துவது சிறந்தது.
சில ஆண்டுகளில் கண்ணாடி அமைப்புகளின் தேவையும் அதிகரித்திருக்கிறது. கண்ணாடியை மறுசுழற்சி செய்ய முடியும். அத்துடன் சூழலுக்கும் உகந்ததாகவும் கண்ணாடி இருக்கிறது” என்று சொல்கிறார் காஸா கிராண்டே நிர்வாக இயக்குநர் அருண்குமார்.
வணிகத் திட்டங்களில், ஒளிபுகாக் கண்ணாடி (opaque glass) வரவேற்பறை, காத்திருக்கும் அறை, ‘லிஃப்ட்’ பகுதி போன்றவற்றுக்கு அழகான பின்னணியாகச் செயல்படும்.
‘லேமினேட்டட் கிளாஸ் பேனலை’ கதவுகளுக்கும், பிரிப்பான்களுக்கும் பயன்படுத்தலாம். வீடுகளில், சாப்பாட்டு மேசை, அலமாரிகள், சமையலறை, குளியலறைக்குக் கண்ணாடியைப் பயன்படுத்துவது ஏற்றதாக இருக்கும்.
காலநிலையும் கண்ணாடியும்
“இந்தக் கண்ணாடி வகைகள் வீட்டின் உட்புறத்தில் வெப்பத்தைக் கடத்துவதைக் குறைக்க உதவினாலும் அவை பட்ஜெட்டுக்குள் இருப்பதில்லை. அதனால் குடியிருப்புகளில் பயன்படுத்துவது குறைந்திருக்கிறது” என்கிறார் நைட் ஃபிராங்க் பிராப்பர்டி சர்வீசஸ் துணை தலைமை செயல் இயக்குநர் டிபென் மோஸா.
தொழில்நுட்ப வளர்ச்சியால், காலநிலைக்கு உகந்த கட்டுமான பொருட்களான ‘ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் (fly ash bricks), ஆட்டோகிளேவ்ட் கால்சியம் சிலிகேட் பிரிக்ஸ் (autoclaved calcium silicate bricks) போன்றவற்றின் பயன்பாடும் அதிகரித்திருக்கிறது.
“சென்னையின் கட்டிடங்கள் அதிகமான வெப்பத்தையும் மழையையும் தாங்கும்படி கட்டப்பட வேண்டும். கட்டிங்களைப் பெரும்பாலும் கிழக்கு – மேற்கு திசையில் சிறிய சுவர்களுடன் அமைக்க வேண்டும். ஆனால், கட்டுநர்கள் விலையை மிச்சப்படுத்துவதற்காக இதைச் செய்வதேயில்லை” என்று சொல்கிறார் கட்டிடக் கலைஞர் சேவியர் பினிடிக்ட்.