கட்டிட விரிசல் கட்டுநர் பொறுப்பா?
கடந்த சில பத்தாண்டுகளாக அடுக்குமாடிக் குடியிருப்பு ஒரு கலாச்சாரமாக மாறியுள்ளது. இன்னும் பல அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. சென்னை போன்ற பெரு நகரத்தில் எல்லோருக்கும் வீடு என்பது இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டால்தான் சாத்தியம். இந்த அடுக்குமாடிக் குடியிருப்புக் கலாச்சாரம் வளர்ந்த அளவு அது தொடர்பான பிரச்சினைகளும் பெருகியுள்ளன. உதாரணமாக வீட்டைச் சொன்ன காலத்துக்குள் கட்டிக் கொடுக்காமல் கட்டுநர்கள் இழுத்தபடிப்பதுண்டு.
மேலும் அவசரம் அவசரமாகத் தரமற்ற கட்டுமானப் பொருள்களைக் கொண்டு வீடுகளைக் கட்டித் தருவதும் நடக்கிறது.
புது வீட்டுக்குப் போன பிறகுதான் இந்தக் கட்டுமானக் குறைபாடு தெரிய வரும். வீட்டின் வெளிப்புறச் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டால், அதற்கு மழை, வெயில் என இயற்கையைக் காரணமாக இருக்கும் என்று கட்டுமான நிறுவனங்கள் சொல்ல வாய்ப்பிருக்கிறது. வீட்டு உட்புறச் சுவர்களில் கீறல்கள் விழுந்தால் அதற்கு என்ன காரணம் என்பதைப் பார்க்க வேண்டும். அது தரமற்றக் கட்டுமானப் பொருள்களால் வந்ததாக இருக்கலாம். இதைச் சேவை குறைபாடு என்று வகைப்படுத்தலாம். தரமான வீட்டைக் கட்டிக் கொடுப்பதாகச் சொல்லிவிட்டு அதன்படி நடக்கவில்லை என்று நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.
ஆனால் நீதி மன்றத்தில் தரமற்ற கட்டுமானப் பொருளால்தான் வீட்டில் விரிசல் விட்டிருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டியது அவசியம். அப்படி நிரூபிக்கும்பட்சத்தில் உரிய இழப்பீடு நமக்குக் கிடைக்கும்.