கட்டுமானக் கழிவு குப்பையல்ல: சாலை போடலாம்
மக்கள்தொகை, விவசாயம் மற்றும் இதர கைத்தொழில்களைச் செய்வதற்குக் கிராமங்களில் வழி இல்லாத நிலையில் நகரத்தை நோக்கி இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிவருகிறது. ஆகவே அரசே முன்வந்து அறிவிக்கும் நகர விரிவாக்கத் திட்டங்கள் போன்ற காரணங்களால் பிரதான நகரப் பகுதிகள் மட்டுமில்லாமல், புறநகர்ப் பகுதிகளிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கட்டுமானங்கள் பரவலாக நடக்கின்றன.
பெருகிவரும் கட்டுமானங்களுக்கு ஏற்ப, கட்டுமானக் கழிவுகள் மேலாண்மையின் தரம் அதிகரிக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலுமே கட்டுமானக் கழிவு மேலாண்மையின் நிலை பரிதாபத்துக்கு உரியதாகவே இருக்கிறது.
கடந்த 2013-ம் ஆண்டில் மட்டும் 530 மில்லியன் டன் கட்டுமானக் கழிவு இந்தியாவில் உருவானது என்கிறது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம்.
சென்னையில் மட்டும் தினமும் ஏறக்குறைய 4,500 மெட்ரிக் டன் கழிவுகள் கையாளப்படுகின்றன. அதில் 700 மெட்ரிக் டன் அளவுக்குக் கட்டுமானக் கழிவுகளின் அளவு இருக்கும் என்கிறார் சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர். இந்தப் புள்ளிவிவரங்கள் கட்டுமானக் கழிவு மேலாண்மையில் நமது நாட்டின் போதாமைக்குப் போதுமான சான்றுகளாகும்.
கட்டுமானக் கழிவு மேலாண்மையின் தேவை என்ன?
இந்தியாவில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் சராசரியாக 10 முதல் 12 மில்லியன் டன் கட்டுமானக் கழிவுகளை உண்டாக்குகின்றன. ஆனால் அந்தக் கழிவுகளிலிருந்து 50 சதவீதம்கூட மறுசுழற்சி செய்யப்படுவதில்லை.
கட்டுமான கழிவு மேலாண்மை தொடர்பான விதிகளை மத்திய அரசு வகுக்க இருப்பதாகச் சமீபத்தில் டெல்லியில் நடந்த மாநில அமைச்சர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானக் கழிவு உருவாகும் நிலைகள்
பொதுவாக மூன்று நிலைகளில் கட்டுமானக் கழிவுகள் உண்டாகின்றன. சாக்குப் பைகள், பெயின்ட் டப்பாக்கள், கம்பிகள், தரைக்குப் பயன்படுத்தும் டைல்ஸ் மற்றும் கூரை அமைப்பதற்காகப் பயன்படுத்தும் சென்டரிங் உபகரணங்கள் போன்றவற்றின் பயன்பாட்டுக்குப் பின் உண்டாகும் உதிரிப் பொருள்கள் ஸ்கிராப்கள் எனப்படும். இதில் கான்கிரீட், இரும்பு, பிளாஸ்டிக் போன்ற அனைத்தும் இருக்கும். இதில் சில பொருட்களை மறு பயன்பாட்டுக்கும் உட்படுத்தலாம்.
கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களில் சில நேரங்களில் மறுகட்டுமானங்கள் நடக்கும். இதன் காரணமாகவும் கட்டுமானக் கழிவுகள் உண்டாகின்றன. பழங்காலக் கட்டிடங்களை இடிப்பதன் மூலமும் கட்டுமானக் கழிவுகள் உண்டாகும். கட்டிடங்களை இடிக்கும்போதும் கட்டிடங்களிலிருந்து பெயர்த்து எடுக்கப்படும் மர உத்திரங்கள், மரத் தூண்கள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவை மறுபயன்பாட்டுக்கு உதவும்.
மூன்று R-கள் முக்கியம்
கட்டுமான கழிவு மேலாண்மையில் (reduce, reuse, recycle) என்னும் மூன்று விஷயங்களை முக்கியமாகச் சொல்கிறார்கள் கட்டுமான வல்லுநர்கள். அவை, கட்டுமானத் தொழிலில் தேவைக்கு அதிகமான பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பது, மறுபயன் பாட்டுக்கு உட்படுத்துவது மறுசுழற்சி செய்வது, ஆகியவையே.
கட்டுமானக் கழிவுகளை உண்டாக்குபவர்களுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் இடையே இணைப்புப் பாலம் இருந்தால், கட்டுமானக் கழிவுகளைப் பயன்படுத்தும் திறன் அதிகரிக்கும் என்கிறார் மாநகராட்சியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.
மறுபயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும் இத்தகைய கட்டுமானக் கழிவுகளால் புதிய கட்டுமானத்துக்கான உற்பத்திச் செலவு பெருமளவு மீதமாகும். குறைந்த முதலீட்டில் கட்டப்படும் வீடுகளுக்கு இத்தகைய பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் 30 முதல் 35 சதவீதம்வரை கட்டுமானச் செலவுகளைக் குறைக்க முடியும் என்கின்றனர் கட்டுமான வல்லுநர்கள்.
மேற்கைப் பாருங்கள்
எல்லாவற்றுக்கும் மேற்கு நாடுகளின் புள்ளிவிவரங் களைத் தருபவர்கள், கட்டுமானக் கழிவு மேலாண்மை விஷயத்தில் அங்கு நடக்கும் முன்னேற்றங்களைக் கவனமாக மறந்துவிடுகிறார்கள்.
லண்டன் ஒலிம்பிக் ஸ்டேடியத்தின் கட்டுமானத்தில் 30 சதவீதம் கட்டுமானக் கழிவிலிருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட கான்கிரீட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மறுபயன்பாட்டுக்குத் தேவைப்படுவதை 98 சதவீதம் கட்டுமானக் கழிவிலிருந்தே பெறுகிறது சிங்கப்பூர். தென் கொரியா 45 சதவீதம், ஹாங்காங் 70 சதவீதம், ஜப்பானில் கட்டுமான கழிவுகளை மறுசுழற்சி செய்து சாலைகள் தயாரிப்பதற்குக்கூடப் பயன்படுத்துகிறார்கள்.