கணவனே தோழன்: இணையை உயர்த்திப் பார்த்து மகிழ்ந்தவர்!
பத்தாம் வகுப்பு முடித்தவுடன் எனக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டனர். எனக்கு நிறையப் படிக்க வேண்டும், உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. திருமணமாகிவிட்டதால் என் விருப்பம் ஈடேறாது என்று நினைத்தேன். பொறியியல் பட்டம் பெற்று, கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த என் கணவர், தனக்குச் சமமாக என்னையும் முதுகலைப் பட்டதாரியாக்க முடிவு செய்தார். திருமணம் நடந்த ஆண்டே பி.யூ.சி. படிக்க வைத்தார். பின்னர் மகள், மகன் பிறந்ததால் மூன்று ஆண்டுகள் கல்லூரிக்குச் செல்ல முடியவில்லை.
மகள் மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது இளங்கலை படிப்பில் சேர்ந்தேன். தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து, பட்டம் பெற்றேன். மூன்றாவது மகனையும் பெற்றெடுத்தேன். நான் முனைவர் பட்டம் பெற வேண்டும் என்பதில் என்னைவிட என் கணவர்தான் அதிக ஆர்வம் காட்டினார். ஆனால் நான் மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு இனி படிக்கப்போவதில்லை என்று கூறிவிட்டேன்.
என் முன்னேற்றத்தில் எங்கள் குடும்பத்தின் அக்கறையைச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. நான் கல்லூரியில் வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக என் மாமியாரும் தங்கையும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தனர். நாமக்கல் ஆண்கள் கல்லூரியிலும் சென்னை மகளிர் கல்லூரியிலும் தற்காலிக உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தேன். பிறகு பணி உறுதியும் கிடைத்து, திருச்சி கல்லூரியில் உதவிப் பேராசிரியராக வேலை செய்தேன்.
பள்ளி செல்லும் மூன்று குழந்தைகளையும் விட்டுவிட்டு வெளியூரில் புணிபுரிய என் மனம் ஒப்பவில்லை. பணியைத் துறந்தேன். இன்று என் பிள்ளைகள் அனைவரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். எந்தவித மனத்தடையும் இல்லாமல் தன் இணையை உயர்த்திப் பார்த்து மகிழ்ந்த கணவரே என் சிறந்த தோழர்!