கண்களுக்கு கீழே உருவாகும் பையை நீக்குவது எப்படி?
பெண்களின் முக அழகை குறைக்கும் சில அம்சங்களில், கண்களுக்கு கீழே உருவாகும் வீங்கிய பை போன்ற அமைப்பும் ஒன்றாகும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெண்களின் முக அழகை குறைக்கும் சில அம்சங்களில், கண்களுக்கு கீழே உருவாகும் வீங்கிய பை போன்ற அமைப்பும் ஒன்றாகும். இது ஏன் உருவாகிறது? கண்களுக்கு கீழே இருக்கும் சருமம் மிக மிருதுவானது. அதனாலே இந்த வீக்கம் ஏற்படுவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். முகத்தில் ஏகப்பட்ட ரத்தக்குழாய்கள் பரவலாக இருக்கின்றன.
இந்த ரத்தக்குழாய்களில் ஏற்படும் சின்ன மாற்றம் கூட முகத்தில் ஏதாவது ஒரு பகுதியை வீங்கச் செய்துவிடும். இந்த மாற்றம் கண்ணுக்கு கீழே பை போன்று வீங்குவதற்கும், கருவளையங்கள் ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கிறது. முதுமையின் காரணமாக கண்களுக்கு அடியில் வீங்கி பை போல் ஆகலாம். முதுமையில் உடலில் உள்ள கொழுப்பு குறையத் தொடங்கும். கண்ணுக்கு கீழேயும் இது நிகழும். அப்போது அங்கு அதிக ரத்த ஓட்டம் பாயும். இதனால் வீக்கம் ஏற்படுகிறது. மேலும் சைனஸ் போன்ற பிரச்சினைகளாலும் கண்களுக்கு அடியில் வீங்கும். வைரஸ் காய்ச்சல் மற்றும் ஜலதோஷத்தில் மூக்கடைப்பு ஏற்படும்போது கண்களுக்கு அடியில் வீக்கம் வரும். கருவளையமும் ஏற்படும்.
இரவில் சரியாக தூங்கவில்லை என்றாலும் கண்களைச் சுற்றிய ரத்தக்குழாய்கள் புடைத்துக்கொண்டு தெரியும். அதனால் வீக்கம் ஏற்படும். மிகவும் களைப்பாக இருந்தாலோ, ஏதோ காரணத்துக்காக உணர்ச்சிவசப்பட்டு அழ நேரிட்டாலோ கண்களைச் சுற்றி வீங்கிவிடும். இதை சரி செய்ய தூக்கமே சிறந்த வழி. 7 முதல் 8 மணி நேர தூக்கமே இதற்கு மருந்து.
நாம் சாப்பிடும் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் இருந்தே நமது சருமத்தை பராமரிக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. ஆரோக்கியமான அந்த இயற்கை உணவுகளை தவிர்த்தாலும் கண்களுக்கடியில் பைகள் உருவாகும். இதுபோக உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக்கொண்டாலும் ரத்த நாளங்கள் அதிகமான திரவத்தை உறிஞ்சி வைத்துக்கொள்ளும். இந்த அதிகப்படியான திரவமே கண்களைச் சுற்றி நீராக கோர்த்துக்கொண்டு வீக்கமாக தெரிகிறது.
சிலசமயங்களில் தவறான அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதும் கூட இந்தப் பிரச்சினைக்கு காரணமாகிவிடுகிறது. நீண்ட நேரம் மேக்கப்போடு இருப்பதும் கருவளையங்களையும், கண்களுக்கு அடியில் பைகளையும் உருவாக்கிவிடும். இரவில் தூங்கப்போகும்போது மேக்கப்பை சுத்தமாக கழுவிவிட வேண்டும். கண்களுக்கு கீழே வீங்கிய பையை செலவில்லாமல் சரி செய்யலாம்.
எவர்சில்வர் ஸ்பூன் ஒன்றை எடுத்து பிரிட்ஜில் உள்ள ப்ரீஸரில் வைக்கவும். ஜில்லென்று ஆனதும் ஸ்பூனை எடுத்து, கண்ணுக்கு கீழே எங்கெல்லாம் வீங்கியிருக்கிறதோ அங்கெல்லாம் ஜில் ஸ்பூனால் மென்மையாக அழுத்தி ஒத்தடம் கொடுத்தால் வீங்கிய பை காணாமல் போய்விடும். வெள்ளரிக்காய்க்கு வீக்கத்தைக் குறைக்கும் திறன் உண்டு. அதனால், வெள்ளரியிலிருந்து இரண்டு பெரிய துண்டுகளை வெட்டி கண்களை மூடிக்கொண்டு கண்களிலும் கண்களுக்கு அடியில் படுமாறும் ஒருசில நிமிடங்கள் வைத்துக்கொண்டால் போதும், இது கண்களைச் சுற்றிய பகுதிகளுக்கு நல்ல ரத்த ஓட்டத்தை தந்து சீராக்கி, புத்துணர்வு பெற வைக்கும்.
ஒரு தம்ளரில் ஐஸ் வாட்டரும், ஐஸ் கட்டியும் எடுத்துக்கொண்டு அந்த தண்ணீரில் பஞ்சை உருண்டையாக்கிப் போட்டு ஜில்லென்று ஆனதும் எடுத்து கண்களை சுற்றி ஒற்றி எடுக்கவும். பஞ்சில் உள்ள குளிர்ச்சி போனதும் மீண்டும் குளிர்ந்த நீரில் போட்டு ஊறவைத்து, பிழிந்து மீண்டும் ஒற்றி எடுக்க வேண்டும் இப்படி 15 நிமிடங்கள் தொடர்ந்து செய்தால் வீக்கம் வற்றி கண்கள் அழகு பெறும்.
இப்படி செலவில்லாமல் கண்களுக்கு அடியில் தோன்றும் வீக்கத்தை சரி செய்யலாம்