கந்தன் குடிகொண்ட கந்தன்குடி!
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய்த் திகழும் கந்தக்கடவுள் கோயில் கொண்டருளும் திருத்தலங்கள் ஏராளம் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்கது கந்தன்குடி. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே அமைந்திருக்கிறது இந்தத் திருத்தலம்.
பசுமை தவழும் நெல்வயல்கள், பண்பாடும் வண்டினங்கள் நிறைந்து இயற்கை எழில் மிகுந்து திகழும் கந்தன்குடி திருத்தலத்தில் உறையும் முருகப்பெருமானைத் தமது திருப்புகழால் பாடிப் பரவியிருக்கிறார் அருணகிரிநாதர். அதுசரி, இங்கே முருகன் கோயில்கொள்ள காரணமான திருக்கதைதான் என்ன? தெரிந்துகொள்வோமா?
சோழ தேசத்தின் அரிசிலாற்று தீரத்தில் வான் வழியே சென்றுகொண்டிருந்தார் துர்வாச முனிவர். சிவபெருமானைத் தரிசித்து வணங்க வேண்டும் என்பதே அவரது பயணத்தின் நோக்கம். வழியில், மதலோலை என்ற அசுரகுலப் பெண்ணொருத்தி அவரை வழிமறித்தாள். அவர் மூலம் தனக்குப் பிள்ளைப்பேறு வேண்டும் என்று கேட்டாள். இறைவனை வணங்கச் செல்லும்போது வழிமறித்து இவ்விதம் பேதமைச் சொற்களைச் சொல்கிறாளே என்று கோபம் கொண்டார் துர்வாசர். ‘‘அழிக்கும் தொழிலையே செய்யும் அசுரர்கள் இருவர் உனக்குப் பிள்ளைகளாகப் பிறப்பார்கள்’’ என்று அந்த அசுரப் பெண்ணைச் சபித்தார். அதன்படி மதலோலைக்கு அம்பரன், அம்பன் என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். மதலோலை மகிழ்ந்தாள். உரிய பருவத்தில் அவர் களை அசுரகுரு சுக்ராச்சார்யரிடம் ஒப்படைத்தாள். அம்பரன், அம்பன் இருவரையும் சிவ வழிபாடு செய்து அருளாசி பெறுமாறு சுக்ராச்சார்யர் உபதேசம் செய்ய, அதனை ஏற்று இருவரும் பலகாலம் ஈசனைத் தொழுதனர். அதனால் மகிழ்ந்து அவர்கள் முன் தோன்றிய சிவனார் “வேண்டும் வரம் என்ன?’’ எனக் கேட்டார்.
“சகல உலகங்களையும் வென்று இன்புற்று வாழவேண்டும்’’ என்று வரம் கேட்டார்கள் அசுரர்கள். அப்படியே வரம் தந்தார் சிவனார். வரம்பெற்ற அசுர சகோதரர்கள் விண்ணுலகையும் மண்ணுலகையும் வென்று நாசப்படுத்தினர். தேவர்களை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தினர். துன்பம் தாளமுடியாமல் தேவர்கள் கயிலைக்குச் சென்று சிவபெருமானைச் சரணடைந்தார்கள். அவர், பார்வதிதேவியைப் பார்க்க, அந்தப் பார்வையின் அர்த்தத்தை அறிந்துகொண்ட பார்வதிதேவி, மாகாளியை வரவழைத்து அசுரர்களை அழிக்க ஆணையிட்டாள். அப்போது அருகிலிருந்த முருகப்பெருமான், தேவர்களும் உலக உயிர்களும் படும் துன்பத்தைப் பொறுக்கமுடியாமல், ‘‘நானே அசுரர்களை அழிப்பேன்’’ என்று கூறி, காளிக்கு முன்னதாகவே வந்து இந்தத் தலத்தில் பாசறை அமைத்தார். அதைக் கண்ட அன்னை காளி, “முருகா! நீ இந்தத் தலத்திலேயே இருப்பாயாக’’ என்று பணித்து, தானே சென்று அசுரர்களை அழித்துவந்தாள்.
அன்னை காளியின் அறிவுரையை ஏற்று கந்தன் இங்கேயே குடிகொண்டதால், இத்தலம் `கந்தன்குடி’ என்று பெயர்பெற்றதாம். அம்பரன், அம்பன் இருவரையும் அழித்த காளி, `பத்ரகாளியம்மன்’ எனும் திருப்பெயரோடு கந்தன்குடி அருகிலேயே அம்பகரத்தூரில் கோயில் கொண்டுள்ளாள் என்பது குறிப்பிடத்தக்கது. மூலஸ்தானத்தில் வள்ளி, தெய்வானை தேவியரோடு வீற்றிருக்கிறார் முருகப்பெருமான். தெய்வானை தேவியாருக்கு தெற்குநோக்கிய தனிச் சந்நிதியும் உண்டு. வரசித்தி விநாயகர், ஐராவதேசுரர், விஸ்வநாதர், விசாலாட்சி, சண்டேஸ்வரர், பைரவர் என அனைவரும் முருகனைச் சுற்றிக் காட்சி தருகின்றனர். இக்கோயிலில் வைகாசி விசாகம், ஆனி உத்திராடம், ஆடி, தை கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. கந்தன்குடி கோயிலின் கௌரீச குருக்களிடம் இத்தலத்து மகிமைகள் குறித்துக் கேட்டோம்.
‘‘அசுரர்களை அழிக்க வந்த கந்தன் என்பதால் இத்தலத்து முருகனை வேண்ட, தீமைகள் அனைத்தும் அழியும். இங்கு வருவோர் கந்தனை வணங்கிச் செல்ல அவர்களுக்குத் திருமணம் கைகூடுவதையும், குழந்தைப் பேறு வாய்ப்பதையும், சகல நோய்களும் நீங்குவதையும்… 80 வயதிலும் நோய்நொடியின்றி முருகனுக்குச் சேவை செய்யும் நான் கண்கூடாகக் கண்டு வருகிறேன்’’ என்றவர் தொடர்ந்து கூறினார்.
‘‘இத்தலத்து கந்தனின் கருணைக்கு நிஜ சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன். இந்த ஊரில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு, கால்கள் இரண்டும் மார்போடு மடங்கிய நிலையில் பெண் குழந்தை பிறந்தது. சென்னையில் புகழ்பெற்ற மருத்துவமனைக்கெல்லாம் கொண்டு சென்று பெரும் பொருட்செலவில் அறுவை சிகிச்சையெல்லாம் செய்து பார்த்தார்கள், பலனில்லை. இறுதியில் கந்தன்குடி முருகனே கதியென்று வேண்டி, பஞ்சகீர்த்திக சத்ருசம்ஹாரா திரிசிதை அர்ச்சனை செய்தனர்.
என்ன ஆச்சர்யம்? மடங்கிய நிலையிலிருந்த பிள்ளையின் கால்கள் மெள்ள மெள்ள இயல்பு நிலைக்குத் திரும்பின. நாளடைவில் அந்தக் குழந்தை நன்றாக நடக்கத் தொடங்கிவிட்டாள். தற்போது அந்தக் குழந்தை புதுவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்துவருகிறாள். இது ஒன்றே கந்தனின் கருணைக்குச் சான்று” என்றார் கௌரீச குருக்கள்.
கந்தனின் கருணை கடாட்சம் குறித்து அவர் சொல்வது உண்மைதான் என்பதை, கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கூட்டத்தையும், தரிசனம் முடித்துத் திரும்பும் போது ‘தங்கள் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும்’ என்றளவில் அவர்கள் முகத்தில் ஜொலிக்கும் நம்பிக்கையையும் காணும்போது நம்மால் அறியமுடிகிறது.
நீங்களும் ஒருமுறை கந்தன்குடிக்குச் சென்றுவாருங்கள்; வந்த வினைகளை மட்டுமல்ல, வருகின்ற வல்வினை களையும் நீக்கி அருள்புரிவான் கந்தன்.