கரிசல் திரை விழா தொடங்கியது

IMG_5814 copy

கரிசல் திரை விழா தொடங்கியது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறையும் மனோ மீடியா கிளப்பும் இணைந்து நடத்தும் மூன்று நாள் நிகழ்வான கரிசல் திரைவிழா பல்கலைக்கழக கலையரங்கத்தில் தொடங்கியது.

இதழியல், தொடர்பியல், காட்சித் தொடர்பியல் முதலிய துறை சார்ந்த மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக அவர்களிடையே போட்டிகளை நடத்தி பரிசில்களை வழங்கும் கரிசல் திரைவிழா ஆண்டுதோறும் நடைபெற்றுவருகிறது.

முதல் நாள் நிகழ்வினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்த தேசிய விருது பெற்ற இயக்குனர் திரு.சீனு ராமசாமி அவர்கள் மாணவர்களோடு கலந்துரையாடினார்.

அவர் பேசுகையில், “கரிசல் திரை விழா துவக்க நிகழ்விற்கு என்னை அழைத்து வரும் போது நமது பாரம்பரியமான பறை இசை இசைத்தது நமது பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையினில் அமைந்திருந்தது.

மூன்று தகுதிகள்:

சினிமாவிற்கு வரும் இளைஞர்களுக்கு மூன்று தகுதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். ஒன்று அதீத ஆர்வம், அதுவே சினிமா இயக்க அடிப்படைத் தேவை, இரண்டு சினிமாவின் மீதான காதல், மூன்று தரமான இலக்கிய வாசிப்பு.

உலகத்திரைப்படம்:

உலகத்திரைப்படம் என்று தனியாக எதனையும் கூற முடியாது. ஒரு வாழ்வியல் முறை எவ்வளவு எதார்த்தமாக, ஆழமாகப் பதிவு செய்யப்படுகிறதோ அதனை வைத்தே அது உலகத்தரம் பெறுகிறது.

தணிக்கைத்துறை:

திரைப்படத்தினை தணிக்கை செய்கையில் ஆபாசமான காட்சிகள் மற்றும் வன்முறைக் காட்சிகள் நீக்கப்படுவதைப் போல புரட்சிகரமான கருத்துக்களை உடைய காட்சிகளும் தணிக்கைக் குழுவினரால் நிராகரிக்கப்படுகின்றன.

100 வருட இந்திய சினிமாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்:

சத்திய ஜித் ரே போன்ற இயக்குனர்களை முன்னோடிகளாகக் கொண்ட இந்திய சினிமாத் துறையில் அவ்வப்போது சில படங்கள் வெளியாகி நமது திறமையினைப் பறைசாற்றி வருகின்றன. வீழ்ச்சி என்று பார்க்கையில் ‘நாயக பிம்பம்’ எனும் படிமம் அதிகரித்து, எதார்த்த சினிமாக்கள் குறைந்து முழுக்க முழுக்க கதாநாயகனைத் தூக்கி நிறுத்தும் படங்கள் வரத்துவங்கியுள்ளன”, மேலும் கூறிய அவர், “குடிப்பழக்கத்தின் காரணமாக கலாசாரம் எனும் முதுகெலும்பு உடைக்கப்பட்ட சமூகம் அநீதியை எதிர்க்கும் திராணியற்றிருக்கிறது. எனவே தான் எனது படங்களில் குடிநோய்க்கு எதிரான காட்சிகளை அமைக்கிறேன்” என்றார்.

துவக்க விழா நிகழ்ச்சிக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர்.முனைவர்.ஜான் டி பிரிட்டோ துவக்கவுரை வழங்க, தொடர்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர்.பெ.கோவிந்தராஜு அவர்கள் தலைமையுரை ஆற்றினார். நிகழ்ச்சியை தொடர்பியல் துறை மாணவர் கு.நாகரத்தினம் வரவேற்றுப் பேச, தொடர்பியல் துறை மாணவர் பி.ஹாட்லின் ஜெனித்த ரால்ப் மூன்று நாள் நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் தொடர்பியல் துறை மாணவி செல்வி.வெ.அபிநயா நன்றியுரை கூறினார்.

நிகழ்ச்சியில் தொடர்பியல் துறை இணைப்பேராசிரியர் பால சுப்ரமணிய ராஜா, சுந்தர ராமன், ராதா பத்ரன், கோபிநாத், மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மற்ற துறைகளை சார்ந்த பேராசிரியர்களும் மாணவர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

மதிய நேர நிகழ்வில் போட்டியாளர்கள் அனுப்பிய குறும்படங்கள் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. அதற்கு நடுவராக ‘தமிழ் ஸ்டூடியோ’ அமைப்பின் நிறுவனர் திரு.மோ.அருண் அவர்கள் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் மாணவர்களோடு கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து ஓவியப்போட்டி, கொலாஜ், சிறந்த பத்திரிகையாளர், சிறந்த வானொலி அறிவிப்பாளர்களுக்கான போட்டி ஆகியவைகள் நடைபெற்றன.

Leave a Reply