கருணாநிதி பக்கம் சாய்கிறாரா திருமாவளவன்?
கச்சத்தீவு யாரால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவை மீட்க யார் நடவடிக்கை எடுத்தது என்பது குறித்த விவாதங்கள் கடந்த இரண்டு நாட்களாக சட்டமன்றத்தில் அனல்பறக்க நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கச்சத்தீவை மீட்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: திமுக. ஆட்சியில் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்று ஆளும் கட்சியினர் சட்டமன்றத்தில் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.
கச்சத்தீவு விவகாரத்தில் இரண்டு கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டை வைக்கிறார்கள். கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு. அதனால், மத்திய அரசுதான் கச்சத்தீவை மீட்டு தர வேண்டும்.
மேலும், சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும். திமுக. தலைவரின் பெயரை செம்மலை உள்ளிட்டவர்கள் அடிக்கடி குறிப்பிட்டு வருகின்றனர். செம்மலையைவிட மூத்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரை பெயர் சொல்லி பேசுவது தவறானது. அதிமுக பொதுச் செயலாளர் அவர்களை சரியாக வழிநடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவுக்கு ஆதரவாகவும், கருணாநிதியின் பெயரை சொல்லி அழைப்பது தவறு என்று பேசுவதில் இருந்து திருமாவளவன் திமுகவை நோக்கி மெள்ள மெள்ள சாய்வதாக டுவிட்டரில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.