கருவிலேயே குழந்தையை ஊட்டமாக வளர்க்க…

கருவிலேயே குழந்தையை ஊட்டமாக வளர்க்க…

4பிரசவ வலி உண்டாகும்போது, கரடுமுரடான பாதையில் மாட்டு வண்டியில் பயணம் செய்தும், வண்டி வசதிகள் இல்லாதபோது கணவர்களால் சுமந்து செல்லப்பட்டும் குழந்தையைப் பிரசவித்த பெண்கள் முந்தைய தலைமுறையில் அதிகம். அதற்குக் காரணம், கருப்பைக்கு நம் முன்னோர்கள் கொடுத்த முக்கியத்துவம். ஆனால் இன்றோ பல பெண்களுக்கு சிறிது தூரப் பயணம்கூட கர்ப்பத்தை கலைக்கும் அளவுக்குக் கொண்டு சென்றுவிடுகிறது. நீர்க்கட்டி தொடங்கி புற்றுநோய்வரை கருப்பையில் தஞ்சம் அடையும் நிலை கடந்த பத்தாண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. வாழ்க்கைமுறை மாற்றங்கள் காரணமாக, முறையற்ற மாதவிடாய் உண்டாகும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

உறுதியான கருப்பைக்கு…

உளுத்தங் களியையும், பனைவெல்லத்தையும் சாப்பிட்டு, கருப்பையை வலிமையாக வைத்திருந்தனர் நம் முன்னோர். ஆனால் இன்று, உளுத்துப்போன துரித உணவு ரகங்களையும் சத்தில்லா உணவையும் அதிகம் தேர்ந்தெடுப்பதால் வலிமையற்றுக் கிடக்கின்றன பலருடைய கருப்பைகள். வலிமையான கருப்பையை உருவாக்க நம் முன்னோர்கள் பின்பற்றிய உணவு மற்றும் வாழ்க்கைமுறைகள் ஏராளம்.

சிறு வயது முதலே கருப்பையை பலமாக்கும் உணவையும் செயல்பாடுகளையும் மேற்கொண்டால், கருப்பை நிச்சயம் வலுவாக மாறும்.

உரமாக்கும் உளுந்து

உளுத்தங் களி, பனை வெல்லம், நல்லெண்ணெய், வாழைப்பழம், கோழி முட்டை போன்றவை பூப்பெய்திய பெண்களுக்குப் பாரம்பரியமாக வழங்கப்படும் உணவாக இருந்தன. `இடுப்புக்கடு பலமாம்’ என்கின்ற சித்தர் பாடல், உளுந்தால் செய்த உணவுகள் பெண்களின் இடுப்புக்கு வலிமை கொடுக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. அளவாக உண்டால் உடலுக்கு வலிமையையும் அழகையும் உளுந்து கொடுக்கிறது. உளுந்து சேர்த்து சமைத்த சாதம் பண்டைய தமிழர்களின் திருமண நிகழ்வுகளில் இடம்பெற்றிருப்பதை அகநானூறு படம்பிடித்துக் காட்டுகிறது. விலங்கின மருத்துவத்தில் விலங்குகளின் மகப்பேறு காலத்தில், கருப்பை தசைகளை வலுப்படுத்த உளுந்து வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

உளுத்தங் களியில் நல்லெண்ணெய் கலந்து, “இதைக் கண்டிப்பா சாப்பிடணும், இல்லனா வயிறு வலிச்சிக்கிட்டே இருக்கும்” என்று பூப்பெய்திய இளம் பெண்களை, அக்கால வீட்டு மருத்துவர்கள் பயமுறுத்தி சாப்பிட வைத்துள்ளனர். இதன் காரணமாகத்தானோ என்னவோ அன்று, `சிசேரியன் மகப்பேறு’ என்பது கேள்விப்படாத சொல்லாக இருந்தது. புரதம், இரும்புச் சத்து, கால்சியம், தயமின், ரிபோஃப்ளாவின், நியாசின் போன்ற வைட்டமின்கள் உளுந்தில் அதிக அளவில் இருக்கின்றன. இனிப்புச் சுவை கொண்ட உளுந்து, மாதவிடாயின்போது உண்டாகும் பித்தத்தைக் குறைத்து உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது. மாதவிடாய் முடிந்து 6 14 நாட்களில் உளுந்து வகை உணவை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

பனைவெல்லம்

கருப்பையை வலுப்படுத்த சதகுப்பை, கருஞ்சீரக சூரணத்தைப் பனைவெல்லத்தில் வைத்துப் பெண்களைச் சாப்பிட வைப்பது கிராமத்து வழக்கம். பருவமடைந்த பெண்களுக்குப் பனைவெல்லம் சேர்ந்த உணவை வழங்குவதால் எலும்புகள் பலம்பெற்று, பிற்காலத்தில் எலும்பு அடர்த்தி குறைவு நோய் (Osteoporosis) உண்டாவதற்கான வாய்ப்புகள் குறையும். இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு, வலிகளைக் குறைக்கும் என்பது நம் மூதாதையர்களின் அறிவியல் கலந்த அனுபவக் குறிப்பு. மாதவிடாய்க் காலத்தில் உண்டாகும் அதிக ரத்த இழப்பை, இதில் உள்ள இரும்புச் சத்து ஈடுகட்டும் என்பதால்தான் இளம்பெண்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பனைவெல்லம் சேர்க்க வலியுறுத்தப்பட்டது.

சில பகுதிகளில் பூப்பெய்திய பெண்களுக்குக் கொடுக்கப்படும் இஞ்சி சேர்ந்த பனைவெல்லம் நல்ல செரிமானத்தைத் தந்து, தேவையான சத்துகளை உடல் எளிதாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் சோர்வைக் குறைத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலைப் பனைவெல்லம் கொடுக்கிறது.

வாழைப்பழம்

பூப்பெய்தியவுடன் கொடுக்கப்படும் மிக முக்கியமான மற்றொரு உணவு, முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம். இதிலுள்ள ‘Tyrptophan’, மாதவிடாய்க் காலத்தில் உண்டாகும் மனச்சோர்வை அகற்றி உற்சாகத்தைத் தரக்கூடியது. வாழையில் உள்ள ஊட்டச்சத்துகள், அயர்ந்துபோன உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. விளையாட்டுத் துறையில் கொடுக்கப்படும் உற்சாகமூட்டும் உணவில் வாழைப்பழத்துக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுவதை இங்கே கவனிக்க வேண்டும்.

கற்றாழை

புற்றுநோய் செல்களை எதிர்த்துச் செயல்படும் திறன் கற்றாழைக்கு உண்டு என்று ‘International Immunopharmacology’ ஆய்விதழில் வெளியான அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கற்றாழையை அடிக்கடி பயன்படுத்திவந்த அக்காலப் பெண்கள், புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படவில்லை என்பதில் வியப்பேதுமில்லை. கருப்பை சார்ந்த தொந்தரவுகளுக்கு, வெகுகாலமாகப் பயன்பட்டுவரும் முக்கிய மூலிகை கற்றாழை. கற்றாழை சோற்றை மோரிலே கலந்து குடித்துவர, கருப்பை தொந்தரவுகள் மறையும். குளிர்ச்சித் தன்மையைக் கொடுத்து, உடல் சூட்டைக் குறைக்கக்கூடியது கற்றாழை. கருப்பை தொந்தரவுகளுக்கு கற்றாழை சேர்த்துச் செய்யப்படும் மருந்துகள், சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் ஏராளம் உண்டு.

அரச மரம்

அரச மரங்கள் சூழ்ந்த இடங்களில் வசித்து வந்த நம் முன்னோர்களின் கருப்பைகளில் நீர்க்கட்டிகளோ புற்றுகளோ பட்டா போட்டு இடம் பிடித்ததில்லை. ‘அரச மரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாள்’ என்ற சொலவடை அரச மரத்தின் இலை, பட்டை, வேர், விதை போன்ற அனைத்து உறுப்புகளும் கருப்பையில் உண்டாகும் நோய்களைப் போக்கி சூல் அமைய உதவக்கூடியவை என்பதை உணர்த்துகிறது. அரச மரப் பட்டையின் சூரணத்தைப் பாலில் கலந்து அருந்திவர, கருப்பை சார்ந்த நோய்கள் குணமாகும். மகத்துவம் நிறைந்த இந்த அரச மரங்களை இன்றைக்கு வெகுசில இடங்களில் மட்டுமே காண முடிகிறது.

ஆரோக்கியமான கருப்பைக்கு…

குறிப்பிட்ட நாளில் வரவிருக்கும் மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்கும், முன்னமே வரவைப்பதற்கும் மாத்திரைகளை எடுத்துக்கொண்டு, உடலின் இயற்கையான செயல்பாடுகளை மாற்றுவதால் ஹார்மோன் சமநிலை பெரிதும் பாதிக்கப்படும். தகுந்த வயதில் திருமணம், குழந்தைப் பேறு பெண்களின் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்காது. உடல் உழைப்பின்மை காரணமாகவும், துரித உணவுகளின் தாக்கத்தாலும் புதிது புதிதாகக் கருப்பை நோய்கள் உருவெடுத்துக்கொண்டே இருக்கின்றன. நம் எதிர்காலக் கருவைச் சுமக்கும் கருப்பையைத் தகுந்த வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மூலமாக உறுதிப்படுத்தலாம். சிறுவயது முதலே பாரம்பரிய உணவு வகைகளை எடுத்துக்கொள்வது, தேவையான அளவு உடற்பயிற்சி செய்வது, நம் முன்னோர்களின் பழக்கவழக்கங்களில் உள்ள அறிவியலைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது, இயற்கையோடு இயைந்து வாழ்வது போன்றவற்றால் ஆரோக்கியமான கருப்பை நிச்சயம் சாத்தியமாகும்.

சில சிறப்பு உணவுகள்:

பருவமடைந்த பெண்களுக்கு வாரம் இருமுறை விளக்கெண்ணெய் வழங்கும் வைத்தியம், சில மலைக் கிராமங்களில் இன்றளவும் தொடர்கிறது.

மாதவிடாய்க் காலங்களில் வெல்லம் சேர்த்துப் பிடித்த எள்ளுருண்டையை இளம்பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.

துவர்ப்புச் சுவையுடைய வாழைப்பூ, சீரான பூப்பு சுழற்சிக்கு வழிவகுக்கும்.

கல்யாண முருங்கை இலைச் சாறு கருப்பை நீர்க்கட்டிகளை வெளியேற்றும் என்பதை ஓர் ஆய்வு நிரூபிக்கிறது.

வெந்தயக் களி, வெந்தயக் கஞ்சி ஆகியவற்றையும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

கருப்பை சார்ந்த நோய்களைத் தகர்ப்பதில் அசோக மரத்துக்குப் (நெட்டிலிங்கம் அல்ல) பெரும் பங்கு உண்டு.

Leave a Reply