கருவில் மரபணுவை மாற்றுவது சரியா?

மரபணுவில் உள்ள இழைமணியில் (மைட்டோகாண்ட்ரியா) கோளாறு இருந்தால் குழந்தை பாதிக்கப்படுகிறது. இப்படி பிறக்கும் குழந்தைகளின் வாழ்க்கை துயரம் நிரம்பியதாக இருக்கிறது. பல நேரம் இறந்தும் விடுகின்றன. எனவே, கருத்தரிக்கும்போதே இந்த மரபணு குறைபாட்டை தடுக்க ஆரோக்கியமான பெண்ணின் சினை முட்டையிலிருக்கும் கரு மையப் பகுதியை, குறைபாடுள்ள பெண்ணின் சினை முட்டையில் பொருத்தி கருவுறச் செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுசம்பந்தமாக விலங்குகளிடம் ஆய்வு நடத்தி, அதில் வெற்றிகரமான முடிவு கிடைத்திருக்கிறது. இப்படியெல்லாம் மனிதக் கருவில் விளையாட வேண்டுமா என்று பலர் எதிர்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்த மருத்துவ தொழில்நுட்பம் காரணமாக பிறக்கும் குழந்தையின் உடலில் 2 தாய், ஒரு தந்தையின் மரபணுக்கூறுகள் இடம்பெறும்.

பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், அதன் இழைமணியில் செய்யப்பட்ட திருத்தம், அதன் சந்ததிகளிடமும் தொடரும். மைட்டோகாண்ட்ரியா திருத்தம் ஒரு முறை நடந்துவிட்டால், அடுத்தடுத்து வழிவழியாக வந்துகொண்டே இருக்கும். எனவே இயற்கையின் படைப்பில் இப்படி விளையாடலாமா என்ற ஆட்சேபமும் உள்ளது. ஆனால், இந்த புதிய வகை ஆராய்ச்சி ஆரோக்கியமான குழந்தை பிறப்புக்கு வழி செய்துள்ளது, என்கிறார்கள் மருத்துவ துறையினர்.

மரபியல் ரீதியாக உள்ள குறைகளை நீக்கி ஆரோக்கியமான குழந்தை பெற்றுக்கொள்வதை இந்த முறை சாத்தியப்படுத்தும். ஆனால், இந்த தொழில்நுட்பத்தை அனுமதித்தால் தன்னுடைய மகன் அல்லது மகள் எப்படி இருக்க வேண்டும் என்று பெற்றோர் ஆர்டர் செய்து குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு, பிள்ளைப்பேறு மாறிவிடும் என்பதும் பலருடைய குற்றச்சாட்டு.

இந்த மருத்துவ தொழில்நுட்பத்தை அப்படியே வியாபாரமாக்கி எல்லா கருக்களிலும் மருத்துவர்கள் மாற்றங்களை செய்துகொண்டே இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அதனால் கருவில் மைட்ரோகாண்ட்ரியாக்களை மாற்றுவது, திரிப்பது, கூட்டுவது போன்றவற்றை எல்லாம் செய்யக்கூடாது என்று இன்னொரு வாதமும் வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.