கர்ப்பிணிகள் அடிக்கடி ஸ்கேன் எடுப்பது சரியா?
கர்ப்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் எல்லா குறைபாடுகளையும் ஒரே நேரத்தில் கண்டுபிடிப்பது கடினம். இதனால் அடிக்கடி ஸ்கேன் எடுக்கலாமா என்று பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் அடிக்கடி ஸ்கேன் எடுக்கலாமா?
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணும் இல்லற வாழ்வில் எதிர்நோக்கும் அற்புதத் தருணம். ‘கருவுறுதல்’ தாய்மைக்குப் பாதை அமைக்கிறது. தன் உடலுக்குள்ளேயே ஓர் உயிர் மொட்டு விடுவதை உணர்கின்ற பெண்ணின் உடலியல் அதிசயம்தான் கருவுறுதல்.
நவீன தொழில்நுட்ப வசதிகளும் பரிசோதனை முறைகளும் புதிய உயரத்தை எட்டியிருக்கும் இன்றைய நிலையில், கரு உருவானதில் இருந்து பிரசவம் ஆகும்வரை உள்ள கர்ப்ப காலத்தைத் தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பானதாக ஆக்க முடிகிறது.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் எல்லா குறைபாடுகளையும் ஒரே நேரத்தில் கண்டுபிடிப்பது கடினம். உதாரணத்துக்கு, குழந்தையின் மூளையில் திரவம் சேரும் நிலை (Hydrocephalus) முதலில் எடுக்கப்படும் ஸ்கேனில் தெரியாமல் போகலாம். அந்தக் கோளாறு கர்ப்பத்தின் பிற்பகுதிக் காலத்தில் தெரிய வரலாம். இப்படிச் சந்தேகம் உள்ளவர்களுக்கு இடைப்பட்ட காலத்திலும் ஒரு ஸ்கேன் எடுக்கப்படுவதுண்டு.
கருப்பையில் குழந்தை படுத்திருக்கும் நிலையைப் பொறுத்தும் சில கோளாறுகளை வழக்கமான ஸ்கேனில் பார்க்க முடியாமல் போகும். அப்போது சில நாட்கள் கழித்து வரச்சொல்லி, மறுபடியும் ஸ்கேன் எடுப்பார்கள். இந்த இடைப்பட்ட நாட்களில் குழந்தை சற்றே நகர்ந்திருக்கும். அதனால் சில பாகங்கள் சரியாகத் தெரியும். ஒல்லியான உடல்வாகு உள்ளவர்களுக்கு குழந்தையின் குறைபாடுகளை எளிதாகக் காண முடியும். ஆனால், உடற்பருமன் உள்ளவர்களுக்கு அவ்வளவு எளிதாகப் பார்க்க முடியாது. அப்போது கூடுதலாக சில முறை ஸ்கேன் எடுக்கப்படுவதுண்டு.