கறுப்புப் பணம் ஒழிப்பில் மோடி மேஜிக்!
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பா.ஜ.க. ஜெயிக்க முக்கிய காரணம், கறுப்புப் பணம் பற்றி கொடுத்த வாக்குறுதிதான். தேர்தல் பிரசாரத்தில் நரேந்திர மோடி தனது கட்சி ஆட்சி அமைத்தால் கறுப்புப் பணம் குறித்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், வெளிநாட்டில் புதைந்து கிடக்கும் பல லட்சம் கோடி மதிப்பிலான இந்தியக் கறுப்புப் பணம் மீட்கப்படும் என்றும் சொன்னார். மக்களுக்கு இந்தப் பிரச்சாரம் மிகவும் பிடித்திருந்தது. அதனால்தான் மோடிக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தார்கள்.
‘‘தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பல முக்கிய நடவடிக்கைகளை மோடி அரசாங்கம் எடுத்தது. அதன் பயனாக இப்போது கறுப்புப் பணத்தின் புழக்கம் வெகுவாகக் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது’’ என்கிறார் ஆம்பிட் கேப்பிட்டல் நிறுவனத்தின் சி.இ.ஒ. (இன்ஸ்டிடியூசனல் ஈக்விட்டீஸ்) சௌராப் முகர்ஜி. இது தொடர் பாக ஆம்பிட் கேப்பிட்டல் நிறுவனத்தின் ஆய்வு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
கறுப்புப் பணம் என்பது இந்தியப் பொருளாதாரத்தில் பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்துவரும் ஒரு கொடிய நோய். தற்போதைய சூழலில் வெளிநாட்டில் புழங்கும் இந்திய கறுப்புப் பணம் சுமார் 450 பில்லியன் டாலர்கள் (இன்றைய இந்திய மதிப்பில் சுமார் ரூ.30,15,000 கோடி)என்று கணக்கிடப்பட்டு உள்ளது. அது நமது மொத்த பொருளாதார மதிப்பில் சுமார் 20% எனக் கொள்ளலாம். கறுப்புப் பணத்தின் தொகை நமது அந்நிய செலாவணிக் கையிருப்பைக் காட்டிலும் கூடுதல். இந்த அளவு கறுப்புப் பணம் என்பது பல நாடுகளின் மொத்த பொருளாதாரத்தைவிட மிகப் பெரியது.
இந்தியாவில் இருக்கும் கறுப்புப் பண அளவு நமது பொருளாதாரத்தைக் காட்டிலும் மதிப்பில் மிக அதிமாகவே உள்ளது. அதுமட்டுமல்லாது, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 3% – 4% அளவிலான மக்கள்தான் வரி செலுத்து கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நமது மக்கள் தொகையின் கணக்கை வைத்துப் பார்த்தால், நிச்சயமாக வரி ஏய்ப்பு என்பது பெரிய அளவில் இருப்பதாகவே கருதவேண்டும். மேலும், பல தரப்பினரையும் வருமான வரி வட்டத்துக்குள் கொண்டுவரும் முயற்சியில்தான் அரசும் செயல்பட்டு வருகிறது.
முதலில் கறுப்புப் பணம் என்பதற்கான வரையறை என்ன என்று பார்த்துவிடலாம். எளிதாக எல்லோருக்கும் புரியும்படியாகச் சொல்லவேண்டுமென்றால், இந்தியாவில் சம்பாதித்த பணத்தை பல்வேறு காரணங் களுக்காக கணக்கில் காட்டாமல் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல வழிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணம்தான் கறுப்புப் பணம்.
இது இரண்டு வகைகளில் உருவாகும். ஒன்று, தவறான வழிகளில் சம்பாதிக்கப்பட்டு அரசாங்கத்தின் பார்வைக்குத் தெரியாமல் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ மறைத்து வைக்கப்படுவது. இரண்டு, நல்வழியில் சம்பாதிக்கும் பணத்தை முறையான வரிக் கணக்கில் கொண்டு வராமல் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ மறைத்து வைப்பது.
பல வருடங்கள் முன்பு வரை சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் போன்ற வெகு சில நாடுகளே இது போன்ற கறுப்புப் பணம் பதுக்கலின் முன்னணியில் இருந்தன. சமீப காலமாக அந்தப் பட்டியல் நீளமாகி, கேமேன் ஐலண்ட்ஸ், பெர்முடா, மொரீஷியஸ், சைப்ரஸ் போன்ற நாடுகளும் இடம்பெற்றுள்ளன. அது போன்ற நாடுகள் டாக்ஸ் ஹேவென்ஸ் (Tax Havens) நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நாடுகளில் வைக்கப்படும் பணத்துக்கு வரி இல்லை. தவிர, பணத்தை வைப்பது யார், எவ்வளவு பணம் வைத்திருக்கிறார் என்கிற தகவல்கள் வெளியே தெரியாது.
சமீப காலங்களில் கறுப்புப் பணப் பதுக்கல் முற்றிலும் நவீனமயமாகப்பட்டுவிட்டது. அதற்கு ஒரு உதாரணம், ரவுண்ட் ட்ரிப்பிங் (Round Tripping). இந்த முறையில் இந்திய நிதிச் சந்தைகளில் சமீப காலமாக அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. ரவுண்ட் ட்ரிப்பிங் என்பது இந்தியாவிலுள்ள கறுப்புப் பணம் பல வெளிநாடு களுக்குச் பலவிதமாகச் சென்று, அது வேறு வழியாக மீண்டும் இந்தியாவுக்கே வெள்ளைப் பணமாக வருவதாகும். இந்த வழிமுறை இந்தியப் பங்குச் சந்தைகளுக்கு மிகவும் பரிச்சியமான ஒன்று.
கடந்த காலங்களில் இந்தியா வின் பொருளாதார வளர்ச்சியை ஒட்டி அந்நிய முதலீடுகள் இந்தியப் பங்குச் சந்தைகளில் மிக அதிகமாகவே இருந்து வந்துள் ளது. அந்நிய முதலீடுகளில் பல பிரிவுகள் இருந்தாலும் பி நோட்ஸ் (P notes) என வழங்கப்படும் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக ஓர் அந்நிய முதலீட்டு வழிமுறையின் மூலம் இந்தியப் பங்குச் சந்தைகளில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் கடந்த ஆண்டுகளில் வந்துள்ளது. இன்னும் தொடர்ந்து இந்த வழிமுறை வழியாக வந்துகொண்டுதான் இருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி, பி நோட்ஸ் மூலம் இந்தியப் பங்குச் சந்தைகளில் வந்துள்ள பணம் சுமார் ரூ.2,50,000 கோடிக்கும் மேல். இந்த பி நோட்ஸ் மூலம் வரும் பணம் இன்னாருடையது என்பது தெரியாது. இந்த முறை மூலமாக பல இந்தியர்களின் கறுப்புப் பணம் ரவுண்ட் ட்ரிப்பிங் முறையில் வெளிநாடு களுக்குச் சென்று, மீண்டும் இந்தியப் பங்குச் சந்தைகளுக்கு வெள்ளையாக வந்துவிடுகிறது. கடந்த காலங்களில் இந்திய அரசு பங்குச் சந்தையில் புழக்கத்தில் இருக்கும் இந்த பி நோட்ஸ் முதலீட்டு வழிமுறைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முற்பட்ட போதெல்லாம் அந்நிய முதலீட்டாளர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
வெளிநாடுகளில் மட்டுமல்ல, நமது நாட்டுக்குள்ளேயும் கறுப்புப் பணம் என்பது கடந்த காலங்களில் அதிகமாக இருந்துள்ளது. நமது நாட்டில் ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் ஆகிய இரு முக்கியத் துறைகளில் தான் கறுப்புப் பண முதலீடு கடந்த காலங்களில் அதிகமாகவே இருந்து வந்துள்ளது.
அதிலும் குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறை என்பது கறுப்புப் பணத்தின் கூடாரம் என்று கூறுமளவுக்கு இந்தத் துறையில் அதிகப்படியாக கறுப்புப் பணம் புழங்கியது. இந்தத் துறையில் மொத்த முதலீடுகளின் மதிப்பில் சுமார் 30% – 40% அளவுக்கு கறுப்புப் பணப் புழக்கம் இருப்பதாகக் கணக்கிடப்பட் டுள்ளது. அதே போல், தங்க முதலீடுகளிலும் அதிகப்படியான கறுப்புப்பணம், கணக்கில் வராத பணம் என்று புழக்கம் எப்போதுமே சற்று அதிகமாகவே இருந்தது.
இந்தச் சூழலில் தற்போதைய அரசு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள கறுப்புப் பணத்துக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலாவதாக, 2015-ல் கொண்டு வரப்பட்ட கறுப்புப் பணச் சட்டம் (Black Money Act) வாயிலாக கறுப்புப் பணப் பதுக்கல் ஒரு கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு கடுமையான சிறை தண்டனையும் அபராதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பல பதுக்கல் நாடுகளுடனான இரு தரப்பு ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்து கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறது.
அதுமட்டுமல்லாது, டாக்ஸ் ஹேவென் நாடுகளுடனான இரு தரப்பு ஒப்பந்தங்களையும் மறு ஒப்பந்தம் செய்து வருகிறது. சமீபத்தில் மொரிஷியஸ் நாட்டுடனான ஒப்பந்தம் மறு கையெழுத்திடப்பட்டது. பினாமி சட்டமும் புதிய விதிமுறை களுடன் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும், 2015-ல் கொண்டு வரப்பட்ட விதியின்படி ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட ரொக்க பரிவர்த்தனை இருக்கும்பட்சத்தில், கட்டாயம் பான் கார்டு அவசியமாகிறது. மேலும், பங்குச் சந்தையை வழிநடத்தும் செபி, கறுப்புப் பணத்தை பங்கு வர்த்தகத்தில் உலவவிட்டு, வெள்ளையாக மாற்றும் பல மோசடி நிறுவனங் களுக்கு தடை விதித்துள்ளது.
கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்த தற்போதைய அரசு மேற்கொண்டு வரும் இது போன்ற கிடுக்கிபிடி நடவடிக்கை களால், உள்நாட்டில் கறுப்புப் பணம் பதுக்கலின் முக்கிய உறைவிடமாக இருக்கும் ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் ஆகிய இரண்டிலும் அதன் தாக்கம் தெரிய ஆரம்பித்துள்ளது. முக்கியமாக, ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்தவும் வழிநடத்தவும் தற்போதைய அரசு ரியல் எஸ்டேட் சட்டமும் கொண்டுவந்திருப்பது முக்கியமான வளர்ச்சியாகும்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் தங்கத்தின் மீது 1% கலால் வரியை மத்திய அரசு விதித்தது. இந்த வரியை மத்திய அரசு கொண்டு வந்ததன் முக்கிய நோக்கமே தங்க வர்த்தகத்தில் இருக்கும் வரி ஏய்ப்புகளையும் கறுப்புப் பணப் புழக்கத்தையும் கட்டுப்படுத் துவதே. பொதுவாகவே, தங்க வர்த்தகத்தில், தங்கம் கை இருப்புக்கும் விற்பனை அளவுக்கும் பல முரண்பாடுகள் இருந்து வந்துள்ளன. மேலும், தங்கம் விற்பனையிலும் வாங்கலிலும் பல முரண்பாடுகள் இருக்கிறது. அதன் காரணமாக நாட்டில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு மிகத் துல்லியமாகத் கணக்கிட முடியாமல் போகிறது.
மேலும், ரியல் எஸ்டேட் துறைக்கு சரிநிகர் சமமாக தங்க வர்த்தகத்திலும் காலம் காலமாக வரி ஏய்ப்புகளும் கறுப்புப் பணப் புழக்கமும் இருந்து வந்துள்ளன. இவை எல்லாவற்றையும் கட்டுப் படுத்தும் நோக்குடன்தான் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக, இறக்குமதி வரியைக் குறைக்காமல் இருப்பது. தங்கத்தில் (தங்க நாணயங்கள், தங்க கட்டிகள்) ரூ. 2 லட்சத்துக்கு மேல், தங்க நகைக்கு ரூ.5 லட்சத் துக்கு மேலான பரிவர்த்தனை களுக்கு பான் கார்டு போன்ற விஷயங்களால் இந்தத் துறையில் கட்டுப்பாடுகள் இருந்தாலும் மேலும் பல முயற்சிகள் தேவைப்படுகிறது. மேலும் தங்கத்தின் மீது மக்களிடம் உள்ள மோகத்தைக் குறைக்க தங்க முதலீட்டுத் திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அரசு நமது நாட்டின் பெருவாரியான மக்களை நிதி சேமிப்புக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்து வருவது நல்ல பலன்களை தந்து வருகிறது. அதன் காரணமாகத்தான் இந்திய ரிசர்வ் வங்கி பல சிறிய மற்றும் கட்டண வங்கிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகளால் நமது நாட்டில் வங்கிச் சேவை பன்மடங்காக விரிவடையும். மேலும், நமது பரிவர்த்தனைகளை கூடுமான வரையில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலகமாகச் செய்ய வேண்டும் என்றும் அரசு வலியுறுத்துகிறது. இதனால் கறுப்புப் பணப் புழக்கம் சற்று கடினமாகி இருக்கிறது.
உதாரணமாக, வங்கிகள் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதியில் (Fixed Deposit) கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வங்கி எஃப்.டி. வளர்ச்சி குறைந்திருக்கிறது. ஒரு காலத்தில் 26 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருந்த வங்கி எஃப்டி வளர்ச்சி இப்போது சுமார் 9 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. குறைந்த வட்டி இதற்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்தாலும், இதர கெடுபிடி களால் கறுப்புப் பணம் இது போன்ற வழிகளில் வருவது குறைந்திருக்கிறது.
முதலீட்டாளர்கள் ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் போன்ற துறைகளில் சற்றே கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும். இது போன்ற நடவடிக்கைகளால், குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறை மேலும் பலவீனமடைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, இவற்றில் அளவுக்கு அதிகமாக முதலீடு செய்வதைவிட, நீண்ட காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டி அதிக வருமானம் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்!