கலக்கும் லைவ் சானல்கள் ஆப்ஸ்!
ரிமோட்டுக்காக சண்டை போட்டதெல்லாம் அந்தக் காலம். மொபைலிலே நேரலையில் டிவி பார்க்கும் லைவ் வீடியோ ஸ்ட்ரீமிங் அப்ளிகேஷன்கள்தான் தற்போது ட்ரெண்ட். பயணத்தின் போதும், யாருக்கோ காத்திருக்கும்போதும் பொழுதுபோக்க வீடியோ ஸ்ட்ரீமிங் ஆப்கள்தான் பலருக்கும் உதவியாக இருக்கின்றன. சமூக வலைதளங்களையே ரெஸ்ட் எடுக்க வைக்கும் இந்த ஆப்ஸில் எவையெல்லாம் டாப் ட்ரெண்டிங் தெரியுமா?
டாட்டா ஸ்கை மொபைல் :
Tata Sky Mobile
டாட்டா ஸ்கை DTH கனெக்ஷன் பயன்படுத்துபவர்கள், இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் பண்ணுங்க பாஸ். DTH-ல் ஏற்கெனவே சப்ஸ்க்ரைப் செய்த சேனல்கள் அனைத்தையும், இந்த அப்ளிகேஷன் மூலம் இலவசமாக மொபைலிலேயே நேரலையில் பார்க்க முடியும். ரெக்கார்ட் செய்த நிகழ்ச்சிகள் கிளவுட் சர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும் என்பதால், அவற்றை மொபைலுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்து நினைத்த நேரத்தில் கண்டு ரசிக்க முடியும். இதில் உள்ள வைஃபை ரிமோட் இதன் மற்றொரு ப்ளஸ். இந்த ரிமோட்டைப் பயன்படுத்தி மொபைல் மூலமே செட்-டாப் பாக்ஸை கட்டுப்படுத்த முடியும். DTH அக்கவுன்ட்டை நிர்வகிப்பது, ரெக்கார்ட் செய்ய விரும்பும் நிகழ்ச்சிகளை மொபைலிலேயே ஷெட்யூல் செய்வது போன்ற அத்தனை விஷயங்களையும் இந்த அப்ளிகேஷன் மூலமாக மேற்கொள்ள முடியும். ஒரு அக்கவுன்ட்டில் இரண்டு டிவைஸ்களை மட்டுமே இந்த அப்ளிகேஷன் மூலம் இணைக்க முடியும் என்பது மட்டும்தான் சின்ன மைனஸ்.
யப் டிவி :
YuppTV
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வீடியோ சேவை நிறுவனங்களில் யப் டிவியும் ஒன்று. விருப்பமான மொழியை மட்டும் தேர்வு செய்துகொண்டால், அம்மொழியில் உள்ள நிகழ்ச்சிகள் மட்டும் தனியாகப் பட்டியலிடப்படுகிறது. தமிழைப் பொறுத்தவரை, சன் டிவி, ஸ்டார் விஜய், ஜெயா, கலைஞர், ராஜ், கே டிவி, சிரிப்பொலி, புதிய தலைமுறை, தந்தி, சித்திரம், கேப்டன் செய்திகள், ராஜ் செய்திகள் மற்றும் சன் மியூசிக் போன்ற சேனல்களை இந்த மொபைல் ஆப்பில் நேரலையில் காண முடியும். நிகழ்ச்சிகள் அனைத்தும் மொழி மற்றும் பிரிவு வாரியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எளிமையான வடிவமைப்பு இதன் பெரிய ப்ளஸ் என்றால், ஸ்கிப் செய்ய முடியாத விளம்பரங்கள் இதன் பெரிய மைனஸ். பிரீமியம் சேவையிலும் விளம்பரங்களை ஸ்கிப் செய்ய முடிவதில்லை என்பது நேயர்களின் குற்றச்சாட்டு.
சன் நெக்ஸ்ட் :
Sun Next – லைவ் வீடியோ ஸ்ட்ரீமிங் ஆப்
சன் குழுமத்தில் இருக்கும் அத்தனை சானல்களுடன், தந்தி மற்றும் நியூஸ் 7 தொலைக்காட்சிகளையும் சன் நெக்ஸ்ட் அப்ளிகேஷன் மூலம் கண்டு ரசிக்க முடியும். விளம்பர இடைவேளையின்றி புதிய திரைப்படங்களையும் ஹெச்.டி தரத்தில் காண முடியும். இந்த அப்ளிகேஷனில் வீடியோவின் தரத்தை நாமே தேர்ந்தெடுக்க முடிகிறது. எளிமையான வடிவமைப்பு மற்றும் ஹேங் ஆகாமல் இயங்குவது இதன் சிறப்புகள். ஒரு அக்கவுன்ட்டில் அதிகபட்சமாக மூன்று லாகின்கள் செய்ய முடியும். முதல் மாதம் இலவசம் என்றாலும், இரண்டாம் மாதத்திற்கான பணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும். பணம் செலுத்தினால் மட்டுமே கன்டென்ட் முழுவதையும் அக்சஸ் செய்ய முடியும். ஆட்டோ ரென்யூவல் மோடில் இயங்குவதால் அடுத்த மாதத்திற்கான சந்தா தொகை தானாகவே கார்டில் இருந்து எடுக்கப்பட்டுவிடும். மேலும், தனியாகப் பணம் செலுத்தினால் மட்டுமே பிரீமியம் கன்டென்ட்களை அக்சஸ் செய்ய முடிகிறது. ஒரு மாதத்துக்கு 50 ரூபாயும், 90 நாள்களுக்கு 130 ரூபாயும், ஒரு வருடத்துக்கு 480 ரூபாயும் சந்தா கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹாட்ஸ்டார் :
HotStar
ஸ்டார் குழுமத்தின் சேனல்கள் அனைத்தையும் இலவசமாக இந்த அப்ளிகேஷன் மூலம் கண்டு ரசிக்க முடிகிறது. சாதாரண லாகின் மூலம் நேரலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை ஐந்து நிமிடங்கள் தாமதமாகவே ஸ்ட்ரீம் செய்ய முடியும். பிரீமியம் அக்கவுன்ட் இருந்தால் மட்டுமே நிகழ்ச்சிகளை நேரலையிலும், சில பிரீமியம் கன்டென்ட்களை அக்சஸ் செய்யவும் முடியும். ரூ.199 செலுத்தி பிரீமியம் பிரீமியம் கணக்கைத் தொடங்கினால் முதல் மாத சந்தா இலவசம். எப்போது வேண்டுமானாலும் பிரீமியம் சேவையை ரத்து செய்துகொள்ள முடியும். பயனாளர்களின் வசதிக்காகத் திரைப்படங்களும் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் இந்த அப்ளிகேஷனில் எளிதாகத் தேடல் மேற்கொள்ள முடிகிறது. ஐ.பி.எல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் இதில் உள்ளன. தமிழைப் பொறுத்தவரை ஸ்டார் விஜய் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல்கள் மட்டுமே இந்த அப்ளிகேஷனில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், கேம் ஆஃப் த்ரோன்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆங்கில சீரியல்கள் மட்டுமில்லாமல், பிரத்யேகமாக சில சீரியல்களைத் தயாரிக்கவும் தொடங்கியிருக்கிறது ஹாட்ஸ்டார் நிறுவனம்.
ஜியோ டிவி :
Jio TV
ஜியோ நெட்வொர்க் அக்கவுன்ட் மூலம், ஜியோ டிவி அப்ளிகேஷனில் லாகின் செய்துகொள்ளலாம். 60+ ஹெச்.டி சேனல்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட சேனல்களை இந்த மொபைல் ஆப் மூலமாகக் காண முடியும். இவை அனைத்தையும் நேரலை ஒளிபரப்பில் காண்பதோடு, விருப்பப்பட்ட நிகழ்ச்சிகளை ஒருவார காலத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் கண்டுகளிக்க முடியும். ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் மெனுக்களைத் தேர்வு செய்துகொள்ளும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேரலை ஒளிபரப்பைக்கூட பாஸ் செய்யவோ, ரீவைண்ட் செய்யவோ முடியும். நெட்வொர்க் வேகத்தைப் பொறுத்து வீடியோ தரத்தை இந்த ஆப்பில் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிவது இதன் மிகப்பெரிய ப்ளஸ். மினி வியூவில் வீடியோ ப்ளே ஆகும்போதே மற்ற கன்டென்ட்களை பிரவுஸ் செய்ய முடியும்.