கலர் கலராய் கிடைக்கும் கிறிஸ்டல் வளையல்கள்.

”பெருசா எந்தப் படிப்பும் நான் படிச்சுடலங்க. வீட்டுல சும்மா இருக்கற நேரத்தை ஏதாச்சும் உபயோகமா மாத்தணும்னு யோசிச் சாலும், ’42 வயசாயிருச்சு… இதுக்கு மேல என்ன தொழில் பண்ணி குடும்பத்தை ஒசத்தப் போறோம்’னு தோணும். இப்படியே ஓடிட்டிருந்த நிலையில… என் உறவுக்காரப் பொண்ணு ஒருத்தி, டிரெஸ்ஸுக்கு மேட்ச்சிங்கா ‘மினுமினு’னு கிறிஸ் டல் வளையல் போட்டிருந்ததைப் பார்த்தேன். ரொம்ப அழகா இருந் துச்சு. வீட்டுக்கு வந்த பிறகும் கண்ணுக்குள்ளயே அந்த வளையல் நின்னுட்டு இருந்துச்சு. ‘இந்த வளை யல் பண்றதையே ஒரு பிசினஸா நாம ஏன் ஆரம்பிக்கக் கூடாது?’னு விளையாட்டா கால் வெச்சேன். இன்னிக்கு இது என்னை சொந்தக் கால்ல நிக்க வெச்சுருக்கு!”

– தான் பின்னும் கிறிஸ்டல் வளையல்களைப் போலவே கலகலவெனப் பேசுகிறார் மதுரை, சாந்தா.

”தொழிலை ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ரெண்டு வருஷமாயிடுச்சு. இன்னிவரைக்கும் மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு இருக்கு. குறிப்பா, கல்லூரி மாணவிகள் விரும்பி வாங்கறாங்க. இன்னொரு பக்கம், தங்கம் விக்குற விலைக்கு, இப்போ விசேஷங்களுக்கு எல்லாம் இந்த மாதிரியான கிறிஸ்டல் நகைகள் போட்டுட்டுப் போறதுதான் ஃபேஷனா இருக்கு. கண்ணாடி மாதிரி மின்னக் கூடிய இந்த கிறிஸ்டல் மணிகளை வெச்சு கம்மல், நெக்லஸ், ஒட்டியாணம், வளையல், கொலுசுனு எல்லா நகைகளுமே செய்யலாம். எனக்கு வளையல்கள் மேல தனிப்பட்ட ஆர்வம் இருந்ததால… வளையல் பண்றதுல மட்டும் தனி கவனம் செலுத்தினேன்.

 

காலேஜுக்குப் போற மாணவிகளுக்கு தினம் தினம் டிரெஸ்ஸுக்கு மேட்சிங்கா போடுற மாதிரி கலர் கலரா வளையல்கள் கிடைச்சா போதும்… அள்ளிட்டுப் போய்டுவாங்க. பெரும்பாலும் இந்த வளையல்கள் 100 ரூபாய்ல இருந்து கிடைக்கறதால தோழிகளுக்கு, விசேஷங்களுக்கு கிஃப்ட்டா கொடுக்கறதுக்கும் தாராளமா வாங்கிட்டுப் போறாங்க.

இதுக்கு லட்சக்கணக்குல முதல் போடணும்னு அவசியமில்ல… சில ஆயிரங்களே போதும். சொன்னா நம்பமாட்டீங்க… வெறும் 2 ஆயிரம் ரூபாய்தான் நான் முதல் போட்டேன். ஒரு ஜோடி வளையல் தயாரிக்க குறைஞ்சது 100 ரூபாய் செலவாச்சுனா… 200 ரூபாய்க்கு தாராளமா விக்கலாம்! ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் ஒதுக்கினா போதும், குறைஞ்சது 5 ஜோடி வளையல்கள் பின்னலாம். வீட்ல இருந்துட்டே தினம் 500 ரூபாய் சம்பாதிக்கலாம். நம்மோட திறமை, நாம ஒதுக்குற நேரம்… இதையெல்லாம் பொறுத்து வருமானம் பார்க்கலாம். இன்னும் சில பெண்களையும் சேத்துக்கிட்டு குழுவாவும் தொழிலைச் செய்ய லாம். பெரிய முதலீடோ, பெரிய அளவிலான இடமோ தேவையில்லைங்கறதால யார் வேணும் னாலும் தைரியமா தொழில் பண்ணலாம்” என்றவர், கிறிஸ்டல் வளையல் செய்வது குறித்தும் விளக்கினார்.

”கைவேலைப்பாடு பொருட்கள் விற்பனையாகற எல்லா கடைகள்லயுமே கிறிஸ்டல் மணிகள் கிடைக்கும். ஆனா… பச்சை, வெள்ளை, மஞ்சள், சிவப்புனு எல்லா நிறங்கள்ல கிடைச்சாலும், கோல்டன், சில்வர் கலர்கள் மட்டும் கிறிஸ்டலில் கிடைக்காது. அந்த கலர்களுக்கு நாம் மணிகளைப் பயன்படுத்திக்கலாம். முதலில் வளையல்களும், கிறிஸ்டல் மணிகள் கோக்கும் நைலான் ஒயரும் வாங்கும்போது தரமானதா கவனிச்சு வாங்கணும். நம் கற்பனைத் திறனுக்கு ஏற்ப பிடிச்ச டிசைன்கள்ல கோத்து, அதை வளையலோட அளவுக்கு தகுந்தவாறு இறுக்கி முடிச்சுப் போடணும். நடுவுல கோல்டன் மற்றும் சில்வர் நிறங்கள பயன்படுத்தியும் புதுப்புது மாடல்கள்ல வளையல் செய்து அசத்தலாம். கல்லூரி மாணவிகள், ஃபேன்ஸி ஸ்டோர்கள்னு கிறிஸ்டல் வளையல்களை கொண்டு போய் சேர்த்துட்டா போதும்… அதுக்கப்புறம் ஆர்டர்கள் நம்மள தேடி வரும்!”

– அசத்தும் ஐடியா கொடுத்துச் சிரிக்கிறார் சாந்தா.

Leave a Reply