கல்வி, சுகாதாரம் ஜிஎஸ்டி வரம்புக்குள் வராது: வருவாய்த்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தகவல்
கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவை சேவை வரி வரம்புக்குள் வராது. எனவே புதிதாக வரும் சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் இவை வராது என வருவாய்த் துறை செயலா ளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: தற்போதைய சேவை வரியிலும் இந்த சேவைகளுக்கு வரி கிடையாது என்பதால் ஜிஎஸ்டி யிலும் இவைகளுக்கு வரிவிதிக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை.
முதல் ஆண்டில் எந்தவிதமான அதிர்ச்சியும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். முதல் ஆண்டில் ஜிஎஸ்டியை பரிசீலனை செய்த பிறகு, வரி பட்டியலில் புதிய சேவை களைச் சேர்ப்பது அல்லது வரி விகி தத்தை மாற்றுவது ஆகியவற்றை முடிவு செய்யலாம். இப்போதைய திட்டம் சுமூகமான ஜிஎஸ்டியை அமல்படுத்துவதுதான். ஒரு சமயத் தில் பலவிதமான மாற்றங்களைக் கொண்டுவர முடியாது என்பதால் தற்போது எந்தெந்த சேவைகளுக்கு விலக்கு வழங்கப்பட்டிருக்கிறதோ அவற்றை தொடர்வதற்கு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்திருக்கிறோம். இந்த பரிந்துரை முதல் ஆண்டுக்கு மட்டுமே என்பதால் இந்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்னும் நம்பிக்கை இருக்கிறது என ஹஷ்முக் ஆதியா தெரிவித்தார்.
தற்போது 17 சேவைகளுக்கு சேவை வரி விதிக்கப்படவில்லை. மேலும் கல்வி, ஆன்மிக சுற்றுலா, மருத்துவம், திறன் மேம்பாடு, பத்திரிகை செயல்பாடுகள் உள்ளிட்ட 60 சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டியில் சேவைகளுக்கு 18% வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில சேவைகளுக்கு சலுகை கள் வழங்கப்பட வாய்ப்புகள் உள் ளது. தற்போதைய சேவை வரி 15 சதவீதமாக இருப்பதால் சில சேவை களின் கட்டணம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தற்போது கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், இயற்கை எரிவாயு ஆகியவை ஜிஎஸ்டி வரம்புக்குள் வராது. இதன் காரணமாக மாநிலங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் பெரிய பாதிப்பு இருக்கிறது. இவை மட்டுமே மாநிலங்களுக்கு 30 சதவீத வருமானத்தைக் கொடுக்கும். மீதம் இருக்கும் 70 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும். இந்த தொகை மாநிலங்களுக்குப் பிரித்து வழங்கப்படும்.
இதுகுறித்து ஆதியா மேலும் கூறும்போது, ஜிஎஸ்டி வரம்புக்குள் மாநிலங்களுக்கு எப்படி வருமானம் வரும் என்பது பரிசீலனை செய்யப் படும். ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு வரி வசூல் நன்றாக இருக்கும் பட்சத்தில் பெட்ரோலிய பொருட் களையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதைப் பற்றி பரிசீலனை செய்யலாம் என்றார்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், நகரில் வரும் மே மாதம் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் மாநிலங்கள் சார்பாக பிரதிநிதிகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு சரக்கு மற்றும் சேவைகளுக்குமான வரி விகிதம் நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது.