கல் நந்தி புல் தின்ற அதிசயம்
கும்பகோணத்திற்குக் கிழக்கே 20 கிலோமீட்டர், மயிலாடுதுறைக்கு மேற்கே 20 கிலோமீட்டர் சென்றால் கல்லணை பூம்புகார் சாலையில் உள்ள திருத்தலம் தான் திருக்கஞ்சனூர். ஆடுதுறையில் இறங்கி தனி வாகனத்தில் சூரியனார் கோவில் சென்றால் அங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பசுமையான கிராமம். இங்கே காவிரி நதி தெற்கில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று உத்தரவாகினியாக இருப்பது சிறப்பு.
இங்கு நடந்த அதிசயத்தை பார்க்கலாம். தேவசம்பு என்ற முதியவர் தனது பசுவிற்காக மிகவும் கனமான புல்லுக்கட்டை தலையில் சுமந்தபடி சென்றார். அப்போது நிலைதடுமாறி புல்லுக்கட்டை தவறவிட்டார். அது அருகில் நின்ற கன்றின் மீது விழுந்து அழுத்த, அந்தக் கன்று உயிரிழந்தது. கன்றின் உயிரைப் பறித்ததால் ஏற்பட்ட பாவம் அகல வேண்டும் என்றால், முதியவர் காசிக்குப் போய் நீராட வேண்டும் என்று சில வேத விற்பன்னர்கள் கூறினர்.
ஆனால் ஹரதத்தரோ, ‘அவ்வாறு நெடுந்தூரம் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் சிவனையே சிந்திக்கும் பக்தியுடையவர். நடந்தது உங்களை அறியாமல் நடந்த பிழை. அது பாவத்தில் சேராது. வேண்டுமென்றால் அதை சோதித்து பார்த்து விடலாம். அக்னீஸ்வரர் கோவிலுக்குச் சென்று, அங்குள்ள கல் நந்திக்குப் புல் கொடுங்கள். அது புல்லை ஏற்றுக்கொண்டு தின்றால் உங்களுக்கு தோஷமில்லை’ கூறினார்.
இதையடுத்து கஞ்சனூரில் ஓடும் காவிரியில் மூழ்கிய முதியவர், இறைவனையும், இறைவியையும் வழிபட்டு விட்டு, அவர்களுக்கு எதிரே இருந்த கல் நந்திக்கு புல் கொடுத்தார். அது தலையைத் திரும்பி புல்லை வாங்கித் தின்றது. ஊர் மக்கள் அனைவரும் அதிசயித்துப்போனார்கள். இப்போது தலையைத் திருப்பிய நிலையில் அமர்ந்திருக்கும் நந்தியை இங்கு காணலாம்.