சென்னை மாதிரியான பெரிய நகரங்களில் உங்களால் எதை வேண்டுமானாலும் கண்டு அடைய முடியும். கிடைக்காதது சுத்தமான பொது கழிப்பறைகள்தான். முட்டுசந்துகளையும் ட்ரான்ஸ்ஃபார்மர் மறைவுகளையும்தான் அவசர ஆத்திரத்துக்குத் தேடி அலைகிறோம்.
ஆண்களுக்கே இந்த நிலை என்றால் பெண்கள் நிலை பரிதாபம்தான். தினமும் பல லட்சம் பேர் நடமாடுகிற சென்னையின் அண்ணா சாலையில் இருப்பது ஜஸ்ட் ஒரே ஒரு கட்டணக் கழிப்பறைதான். அரசின் தரப்பில் கழிப்பிடங்கள் கட்டவே செய்கின்றன. ஆனால், அவை முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?
பெங்களூருவை சேர்ந்த, ‘ப்ருகத் பெங்களூரு மகாநகரா பலிகே’ (BBMP) என்கிற அரசு அமைப்பு இதற்காக தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒரு உபாயத்தைக் கண்டுபிடித்துள்ளது. ஒரு ஆன்ட்ராய்ட் செயலியின் உதவியோடு நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து மிக அருகில் இருக்கிற கழிப்பிடத்தை உங்களால் கண்டறிய முடியும்.
ஜி.பி.எஸ் உதவியோடு இயங்கும் இந்த செயலி, பெங்களூரு நகரின் அத்தனை ஈ-டாய்லெட்களையும் அங்குள்ள வசதிகள், அதன் சுத்தத்தின் தன்மை எனப் பல தகவல்களையும் அளிக்கும்.