காகிதக் கட்டுமானக் கல் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
கட்டுமானப் பொருள்களுக்கு முன்பு எப்போதும் இல்லாததைவிட இப்போது தட்டுப்பாடு அதிகம். ஆற்று மணல், ஜல்லி என இயற்கையாகக் கிடைக்கும் கட்டுமானப் பொருள்கள் வருங்காலத்தில் அருகிவிடக் கூடும் எனச் சொல்லப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான் உலகம் முழுவதும் மாற்றுக் கட்டுமானப் பொருள்களுக்கான ஆராய்சிக்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களுள் ஒன்றுதான் காகிதக் கான்கிரீட்.
60 சதவீதம் காகிதம், 20 சதவீதம் சிமெண்ட், 20 சதவீதம் கட்டுமான மணல் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுவதுதான் காகிதக் கான்கிரீட். ஆங்கிலத்தில் இதை ‘Papercrete’ என அழைக்கிறார்கள். இதைத் தயாரிப்பது மிக எளிதானது. இதற்கு விசேஷமான கருவிகள் எதுவும் தேவையில்லை. கட்டுமானக் கல்லுக்கு மாற்றாக, காகிதக் கான்கிரீட் கல் வடிவில் தயாரிக்கப்படுகிறது. இதை சிமெண்ட் பூச்சுக் கலவைக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம்.
தயாரிக்கும் முறை
இதற்குப் பிரத்யேகமான காகிதங்கள் தேவை இல்லை. நாளிதழ்க் காகிதங்களே இதற்குப் போதுமானது. அவற்றைக்கொண்டே இதைத் தயாரித்துவிட முடியும். முதலில் காகிதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை ஒரு பிளாஸ்டிக் குடுவையில் தூள் தூளாகக் கிழித்துப் போட வேண்டும். காகிதம் நன்றாகக் கூழ்போல் ஆக வேண்டும். அந்தளவுக்கு தண்ணீர் ஊற்றி அதை நன்றாகக் கிண்ட வேண்டும். அதற்காக மிக அதிகமாகத் தண்ணீர் ஊற்ற வேண்டாம். முட்டையைக் கலக்கப் பயன்படுத்தும் கலவை போன்ற பெரிய கலவை இயந்திரம் சந்தையில் கிடைக்கிறது. அதை வேண்டுமானால் வாங்கிக் கொண்டு அதன் உதவியுடன் கலக்கலாம்.
காகிதம் நன்றாகக் கூழ் போல் ஆனதும். அதை எடுத்து அதிலுள்ள தண்ணீரை நன்றாக வடிகட்டிக்கொள்ள வேண்டும். ஒன்றுக்கு இரு முறை வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு சிமெண்டையும் மணலையும் சேர்க்க வேண்டும். இந்த இரண்டையும் நன்றாகக் கலந்த பிறகு காகிதக் கூழை இந்தக் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கிண்ட வேண்டும். இந்தக் கலவையுடன் தண்ணீர் சேர்க்க வேண்டும். போதுமான அளவுக்கு அதைத் தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும். இந்தக் கலவையைத் தேவையான மரச் சட்டகத்துக்குள் இட்டு நிரப்ப வேண்டும். சில நாட்கள் உலரவைத்து எடுத்து அதைக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தலாம்.
பயன்கள்
காகிதக் கான்கிரீட் தயாரிக்கத் தேவையான மூலப் பொருள்களின் விலை மிகக் குறைவானது. பழைய நாளிதழ்கள் மிகக் குறைவான விலையில் கிடைக்கும். மேலும் இன்று அதிக விலையில் விற்கப்படும் சிமெண்டும் மணலும் மிகக் குறைந்த அளவில்தான் இதற்குத் தேவைப்படும். மேலும் இந்தப் பொருள்கள் எல்லாம் எளிதாகக் கிடைக்கக்கூடியவை.
காகிதக் கான்கிரீட்டை யார் வேண்டுமானாலும் தயாரிக்க முடியும். அதற்கு பிரத்யேகமான கருவிகள் தேவைப்படுவதில்லை. பிளாஸ்டிக் குடுவை, கலக்குவதற்கான கோல், மரச்சட்டகம் இவை மட்டுமே போதுமானது. இது விலை குறைவானதும்கூட.
இந்த முறையில் தயாரிக்கப்படும் காகிதக் கான்கிரீட் உறுதியானதாகவும் இருக்கிறது. வழக்கமான கட்டிடங்களின் அதே அளவு தாங்கு திறன் காகிதக் கான்கிரீட் கற்களுக்கும் உண்டு.
காகிதக் கூழ் கான்கிரீட் கொண்டு கட்டப்படும் வீடுகள் வெப்பம் தாங்கக்கூடியவை. மேலும் ஒலியைத் தடுக்கக்கூடிய தன்மையும் அதற்குண்டு.
காகிதக் கான்கிரீட் கற்கள் எடை குறைந்தவை. அதனால் கட்டுமானப் பணிகளின்போது இதைக் கையாள்வது மிக எளிது.
காகிதக் கான்கிரீட்டைக் கற்களாக மட்டுமல்லாது மரச் சட்டகம் போல் தயாரித்துக்கொள்ளவும் முடியும். தேவையான அளவில், வடிவிலும் இதைத் தயாரித்துக்கொள்ளலாம்.
பயன்பாடு
இந்த வகையான கான்கிரீட் கற்கள் இன்னும் பரவலான பயன்பாட்டுக்கு வரவில்லை. குறைந்த விலை வீடுகள் உருவாக்கத்தில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்திப் பார்க்கப்பட்டுள்ளது. வெற்றிகரமாகச் சில நாடுகளில் இன்றும் புழக்கத்தில் இருந்துவருகிறது. இந்தியாவில் இந்தத் தொழில் நுட்பம் பரவலாகவில்லை.