காங்கிரஸ் கட்சியா? இஸ்லாமிய கட்சியா? ராகுல்காந்திக்கு நிர்மலா சீதாராமன் கேள்வி
காங்கிரஸ் கட்சி தலைவர் டெல்லியில் இஸ்லாமிய மத அறிஞர்கள் குழு ஒன்றை கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தித்து பேசினார்.. அப்போது அவர்களிடம், காங்கிரஸ் ஒரு இஸ்லாமிய கட்சி என்று கூறியதாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில் காங்கிரஸ் ஒரு இஸ்லாமிய கட்சியா என்பதை ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை காங்கிரஸ் மத ரீதியிலான பிளவுபடுத்தலுடன் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.
ராகுல் காந்தி உள்ளிட்ட சில தலைவர்களின் சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் பேச்சுக்கள் குறித்த செய்திகளை பார்க்கும் பொழுது, நாட்டின் பழைய கட்சியான காங்கிரஸ் மீண்டும் தனது பழைய கொள்கையான இந்தியாவை பிரித்தாளும் மனப்பான்மைக்கு சென்று விட்டதாக தோற்றம் உருவாகிறது
ராகுலின் இந்த பேச்சு காங்கிரசில் என்ன நடக்கிறது என்பது குறித்து அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். ஒரு கட்சிக்கு தலைவர் என்ற முறையில், ராகுல் தெளிவாக பேச வேண்டும். காங்கிரசை முஸ்லிம் கட்சி எனக்கூறியதன் அர்த்தம் என்ன என்பதற்கு அவர் விளக்கமளிக்க வேண்டும்.
மதத்தை வைத்து காங்கிரஸ் அபாயகரமான விளையாட்டை விளையாடுகிறது. 1947 பிரிவினைவாதம், மதக்கலவரம் எனக்கூறி அச்சுறுத்தி வருகிறது. 2019 தேர்தலுக்கு முன் சமுதாய ஒற்றுமைக்கு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு காங்கிரசே பொறுப்பு. லோக்சபா தேர்தலில் வெற்றி பெற ஆக்கப்பூர்வமான போட்டியே இருக்க வேண்டும்
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்