காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர்
பீகாரை சேர்ந்த ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. இந்த கட்சியின் தலைவரான உபேந்திர குஷ்வாஹா மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரியாகவும் பொறுப்பேற்றார்.
கடந்த சில நாட்களாக பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வந்த அவர், சமீபத்தில் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிய அவர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படியே நேற்று அவர் தன்னை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைத்துக்கொண்டார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ், சரத் யாதவ் உள்ளிட்டோர் இருந்தனர். ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்ததன் மூலம் பீகாரில் காங்கிரஸ் கூட்டணி பலம் பெற்றுள்ளது. அதேநேரம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.