காங்கிரிட் கம்பிகளுக்கு பதில் மூங்கில்கள்

காங்கிரிட் கம்பிகளுக்கு பதில் மூங்கில்கள்

அதிக அளவில் கார்பன் டை ஆக்ஸைடை உமிழும் தொழிற்சாலைகளில் முதன்மையாக இருப்பவை இரும்பு உற்பத்தி ஆலைகள். கட்டுமானத்துக்கான இரும்புக் கம்பி உற்பத்தியின்போது ஆண்டு ஒன்றுக்கு 250 கோடி டன் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றப்படுகிறது. அமெரிக்கா, சீனா, தென் கொரியா, மெக்சிக்கோ போன்ற நாடுகளுடன் இரும்புக் கம்பிகள் தயாரிப்பில் இந்தியாவும் உலகளவில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்று.

சமீபத்தில் வெளியான உலக சுகாதார அமைப்பின் அறிக்கை, இந்திய நகரங்களின் மாசுபாட்டைச் சுட்டிக் காட்டியுள்ளது. இந்தப் பின்னணியில் சிமெண்டுக்கான மாற்று எவ்வளவு அவசியமோ அதே அளவு இரும்புக் கம்பிகளுக்கும் மாற்று அவசியம்.

கடந்த 2017-ம் ஆண்டு மட்டும் 160 கோடி மெட்ரிக் டன் இரும்புக் கம்பிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது 2000-ம் ஆண்டில் 85 கோடி மெட்ரிக் டன்னாக இருந்தது. இரு மடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டு 10 கோடி மெட்ரிக் டன் இரும்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுவும் 2000-ல் 2.6 கோடி மெட்ரிக் டன்னாக இருந்தது. இரும்புக் கம்பிகளுக்கு மாற்றாக இப்போது மூங்கில் கழிகள் முன்மொழியப்படுகின்றன. இயற்கையாகக் கிடைக்கும் இந்தக் கழிகளைப் பயன்படுத்துவதன் மூலம் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

மூங்கில் கழிகளை அப்படியே கட்டுமானத்துக்குப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் மூங்கில் கழிகள் இயற்கையாக வளர்பவை. அதனால் அது எளிதில் பூச்சிகள் தாக்குதலுக்கு ஆளாகக் கூடும். இதைத் தடுக்கச் சில பதப்படுத்தும் முறைகள் கையாளப்படுகின்றன. மூங்கில் கழிகளை அறுவடைசெய்து அதைச் செங்குத்தாகத் துளையிட வேண்டும். இப்படித் துளையிடப்பட்ட கழிகளைப் பதப்படுத்த வேண்டும். தண்ணீரில் போராக் ஆக்சைடு, போரிக் ஆக்சைடு ஆகிவற்றைக் கலக்க வேண்டும். இந்தக் கலவையில் மூங்கில் கழிகளை அமிழ்த்த வேண்டும்.

போராக் ஆக்சைடு, போரிக் ஆக்சைடு ஆகியவற்றைக் கலக்க வேண்டிய விகிதம், 45 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ பொராக் ஆக்ஸைடு, 2 கிலோ பொரிக் ஆக்ஸைடு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். இந்தக் கலவைக்குள் மூங்கில் கழிகள் 48 மணி நேரம் அமிழ்ந்திருக்க வேண்டும். அதன் பிறகு அதை எடுத்து இயற்கை ஒளியில் உலர்த்த வேண்டும்.

இந்த போராக் ஆக்சைடு, போரிக் ஆக்சைடு ஆகியவற்றின் தன்மையால், மூங்கில் கழிகள் பூச்சிகளின் தாக்குதல்களுக்கு ஆளாகாது. மூங்கில் கழிகளுக்கு மிகப் பெரிய ஆபத்து இந்தப் பூச்சிகள்தாம். அதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மூங்கில் கழிகளை மிகப் பயனுள்ள மாற்றுப் பொருளாக மாற்ற முடியும்.

மூங்கில் கழிகளை, எல்லாவிதமான கட்டுமானத்துக்குப் பயன்படுத்தலாம். கட்டுமானக் கம்பிக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம். வெளிப்புறத் தூணாகவும் பயன்படுத்தலாம். அறைக்கலன் செய்யவும் பயன்படும். சுவரில் மரச் சட்டகம் அமைக்கவும் பயன்படும்.

மூங்கில் கழிகள் எடை குறைவானது. அதனால் கையாள்வது எளிது. மூங்கில் கழிகளை இடத்துக்குத் தகுந்தாற்போல் அறுத்துப் பயன்படுத்துவது எளிது. இதற்குத் தனியான கருவில் தேவையில்லை. இரும்புக் கம்பிகளை வெட்டத் தனியான கருவிகள் தேவை. மூங்கில் கழிகளின் வெட்டப்பட்ட துண்டுகள் சுகாதாரக் கேடற்றவை. அவற்றை உரமகாப் பயன்படுத்தலாம். கரி தயாரிக்கப் பயன்படுத்தலாம்.

மூங்கில் கழிகள் இரும்பைப் போல அரிக்கும் தன்மையற்றவை. உப்புக் காற்றும் வீசும் பகுதிகளில் பயன்படுத்தத் தகுதியானவை.

Leave a Reply