காசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? அ முதல் ஃ வரை உங்களுக்காக…
காசோலை என்பது, வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ ஒரு நிறுவனத்திற்கோ ரொக்கப் பணத்தைச் செலுத்துவதற்கு, கணக்கு வைத்திருப்பவர் மூலம் வழங்கப்படும் ஒரு கட்டண கருவியாகும். தவிர, காசோலை மூலம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்க்கிக்கு பணத்தைப் பரிமாற்றம் செய்யலாம். நம் அன்றாட செலவுகளைப் பணத்திற்குப் பதிலாக காசோலை மூலம் செய்து கொள்ளலாம். காசோலை என்பது ஒரு முக்கியமான செலாவணி. காசோலையின் மூலம், அதிகளவு தொ
கையை எளிமையாகக் கையாளலாம்.
ஒரு காசோலையில் இடம்பெற வேண்டிய முக்கியமான தகவல்கள்:
1. ஒரு காசோலை குறிப்பிட்ட வங்கி மீது மட்டுமே வரையப்பட வேண்டும். (Drawee)
2. காசோலையில் கொடுப்பவர் அதாவது விநியோகிப்பவரின் கையெழுத்து நிச்சயமாக இடம்பெற வேண்டும். (Drawer)
3. காசோலையில் பணம் பெறுபவரின் பெயர் இடம்பெற வேண்டும். (Payee)
4. காசோலையில் எவ்வளவு பணம் என்பதை வார்த்தைகளில் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்
5. காசோலையில் கண்டிப்பாக தேதி குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.
காசோலைகளின் வகைப்பாடு:
பணம் செலுத்த மிகவும் பாதுகாப்பான முறைகளில் ஒன்றுதான், காசோலை. காரணம், ஒவ்வொரு காசோலை பரிமாற்றமும் வங்கிகளில் பதிவு செய்யப்படுகிறது. நமக்குத் தேவைப்பட்டால் காசோலை விவரங்களை எப்போது வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம்.
இடத்தை மையப்படுத்தி காசோலைகள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன.
1. உள்ளூர் காசோலை (Local cheque):
பணம் பெறுபவர் வசிக்கும் அதே ஊரிலுள்ள வங்கியில் காசோலை வழங்கப்பட்டால், அது உள்ளூர் காசோலை எனப்படும்.
2. வெளியூர் காசோலை (Outstation cheque):
ஒரு குறிப்பிட்ட நகரின் உள்ளூர் காசோலை, பிற இடங்களில் வழங்கப்படுகிறது என்றால் அது வெளியூர் காசோலை எனப்படும். இந்த காசோலைகளைப் பயன்படுத்துவது மூலம், வங்கிகள் நம்மிடம் இருந்து நிலையான கட்டணங்களை வசூலிக்கலாம்.
3. சம காசோலை (At Par cheque):
இது நாடு முழுவதும் ஒரு வங்கியின் அனைத்து கிளைகளிலும் இணையாக ஏற்கப்படுகின்ற ஒரு காசோலை. உள்ளூர் காசோலை போல கூடுதல் வங்கிக் கட்டணங்களை ஈர்க்காமல் நாடு முழுவதும் இந்த காசோலை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
மதிப்பின் அடிப்படையில் காசோலைகளின் வகைப்பாடு.
1. சாதாரண மதிப்புடைய காசோலைகள் (Normal Value Cheque):
ரூ. 1 லட்சத்திற்கும் கீழ் மதிப்புடைய காசோலைகள் சாதாரண மதிப்புடைய காசோலை எனப்படும்.
2. உயர் மதிப்புடைய காசோலைகள் (High value cheque):
ரூ. 1 லட்சத்தை விட அதிகளவு மதிப்புடைய காசோலைகள் உயர் மதிப்பு காசோலைகள் எனப்படும்.
3. பரிசு காசோலைகள் (Gift Cheque):
அன்பிற்குரியவர்களுக்கு பரிசாகக் கொடுக்கும் காசோலைகள் பரிசு காசோலைகள் எனப்படும்.
காசோலைகள் பொதுவாக நான்கு வகைப்படும்.
1. கீறாக் காசோலை (Open cheque):
வங்க்கியில் கவுண்டரிலேயே ஒரு காசோலையைக் கொடுத்து பணத்தைப் பெற முடிந்தால், அது கீறாக்காசோலை எனப்படும். ஒருவர் தனது சொந்தக் கணக்கில் இருந்து தானே பணத்தைப் பெறலாம். இல்லையெனில், வேறு யாரிடமாவது கையெழுத்திட்டு கொடுத்து பணத்தைப் பெற சொல்லலாம்.
2. கொணர்பவர் காசோலை (Bearer cheque):
கொணர்பவர் காசோலை மூலம் ஒரு வங்கியில் காசோலை கொடுப்பவர் யாராயினும் பணத்தைப் பெற முடியும். இந்த காசோலையை ஒப்புதல் இல்லாமல் யார் வேண்டுமானாலும் வேறொருவருக்குக் கொடுக்கலாம்.
3. ஆணைக் காசோலை (Order cheque):
இது ஒரு குறிப்பிட்ட நபருக்கு அளிக்கப்படும் காசோலையாகும். இத்தகைய காசோலையில் “bearer” என்ற வார்த்தை அடிக்கப்பட்டு “order” என எழுதப்படலாம். பணம் பெறுபவர் (Payee), காசோலைக்குப் பின்புறத்தில் கையெழுத்திட்டு வேறொருவருக்கு அதே காசோலையை மாற்றிவிடலாம்.
4. கோடிட்ட காசோலை (crossed cheque):
கோடிட்ட காசோலையை கவுண்டரில் கொடுத்து பணத்தை பெற முடியாது. இத்தகைய காசோலை மூலம் வங்கி, பணம் பெறுபவர் கணக்கில் மட்டுமே பணத்தை வரவாக வைக்கும். ஒரு காசோலையின் மேல் இடப்பக்கத்தில் 2 கோடுகள் வரையப்பட்டாலோ, “account payee” என எழுதப் பட்டாலோ அது கோடிட்ட காசோலையாகக் கருதப்படும்.
இதுதவிர, பண உத்திரவாதம் அளிக்கும் பல காசோலைகளை வங்கிகள் வழங்க்குகின்றன.
சுய காசோலை (Self cheque):
சுய காசோலை என்பது, வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் தனக்குத் தானே வரைந்து கொள்ளும் காசோலையாகும். இவர் கணக்கு வைத்திருக்கும் கிளையில் தானே சென்று பணத்தைப் பெற்றுக் கொள்வார். இதற்கு மாற்றாக ஏடிஎம் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பின் தேதியிட்ட காசோலை (Post dated cheque):
இந்த காசோலை, எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, பின் தேதியிட்டு அளிக்கப்படும். காசோலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியில் இருந்து 3 மாதங்கள் வரை இது செல்லுபடியாகும்.
வங்கியாளரின் காசோலை (Banker’s cheque):
வங்கியாளரின் காசோலை மூலம் கணக்கை வைத்திருப்பவரிடம் இருந்து பணததைப் பெறாமல், தனது சொந்த நிதியில் இருந்து வங்கி பனத்தை எடுத்துக் கொள்ளும். சாதாரன காசோலையைப் போல வங்கியாளரின் காசோலையை நிராகரித்து விட முடியாது.
பயணியின் காசோலை (Traveller’s cheque):
ஒரு பயணி, வெளிநாட்டுப் பயணாத்தின்போது பணத்திற்குப் பதிலாகக் கொண்டு செல்லக் கூடிய காசோலை. பயணியின் காசோலை ஒரு திறந்த வகை காசோலை. ,வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகக் கூடியது. பயணியின் காசோலை உணவகங்களிலும், அனைத்து இடங்க்களிலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு பயணத்தின் போது, பயன்படுத்தாத காசோலைகளை மறு பயணத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.