காஞ்சிபுரம் இட்லி
என்னென்ன தேவை?
பச்சரிசி – அரை கப்
உளுந்து – கால் கப்
வெந்தயம் – 4 டீஸ்பூன்
மிளகு – அரை டீஸ்பூன்
சீரகம் – முக்கால் டீஸ்பூன்
சுக்குப் பொடி – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
உளுந்து, வெந்தயம் இரண்டையும் சுத்தம் செய்து ஊறவையுங்கள். அரிசியைத் தனியாக ஊறவையுங்கள். அரிசியைக் கொரகொரப்பாக அரைத்தெடுங்கள். உளுந்தை நன்றாக அரைத்து, அரிசி மாவுடன் கலந்து, உப்பு போட்டுக் கலந்துவையுங்கள். இந்த மாவை எட்டு முதல் பத்து மணி நேரம்வரை புளிக்கவையுங்கள். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துக்கொள்ளுங்கள். கரண்டியில் நெய்விட்டு சூடாக்கி, உடைத்த சீரகம், மிளகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வறுத்து மாவில் கலக்குங்கள். பிறகு சுக்குப் பொடி சேர்த்து நன்றாகக் கலக்குங்கள்.
ஒரு தட்டில் நெய் தடவி, பாதியளவுக்கு மாவை ஊற்றுங்கள். இந்தத் தட்டை ஆவியில் வேகவையுங்கள். ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறுங்கள்.