காதலர்களின் பிரேக் அப் எதனால் வருகிறது?
காதலர்களின் பிரேக் அப் எப்போதுமே துயரமானதுதான். அந்தக் காதல் ‘பிரேக் அப்’பை நோக்கி செல்கிறது என்பதை முன்கூட்டியே சிலரால் கணிக்கவும் முடியும். அதை சிலர் சரி செய்துகொண்டு காதலை சுமூகமாக தொடரவும் செய்வார்கள். சிலரோ காதல் உறவில் ‘பிரேக் அப்’ அறிகுறிகள் தெரியாமலே முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்கள். பிரேக் அப் அறிகுறிகளை எப்படிக் கண்டுபிடிப்பது?
தவிர்த்தல்
ஆரோக்கியமான உறவில் தகவல் பரிமாற்றத்துக்கு முக்கிய பங்கு உண்டு. ஒருவேளை, உங்கள் காதலர் உங்களிடம் பேசுவதை காரணமின்றித் தொடர்ந்து தவிர்த்தால், காதல் உறவு சிக்கலை நோக்கி செல்கிறது என்று அர்த்தம். நண்பர்கள், பணியிடம் என இயல்பாகப் பேசி, உங்களிடம் மட்டும் பேசுவதைத் தவிர்த்தால் அது நிச்சயம் பிரேக் அப் நோக்கி போகிறது என்று நீங்கள் புரிந்துகொள்ளலாம். பேசுவதில் வரும் சிக்கல்தான் ‘பிரேக் அப்’புக்கான முதல் அறிகுறி.
பொய்
காதலர் பல விஷயங்களிலும் பொய் சொன்னால், அதுவும் பிரேக் அப்புக்கான பிரச்சினையாகலாம். காதலர்கள் பொய் பேசினால் நம்பகத்தன்மை போய்விடும். உங்கள் காதலர் உங்களுடைய உறவை மதிக்கவில்லை என்பதுதான் இதன் அர்த்தம். போன் அழைப்புகளை அலட்சியப்படுத்துவது, அதற்காகப் பொய் சொல்வது தொடர்ந்தால், அது பிரிவுக்கான அறிகுறிதான்.
சண்டை
உங்கள் காதலர் தொடர்ந்து உங்களிடம் சண்டை போடுகிறார் என்றால், அதைக் கவனமாகவே பார்க்க வேண்டும். காதலிக்கும்போதே சண்டை என்றால், திருமண வாழ்க்கை என்னவாகும் என்ற கேள்வி உங்கள் காதலர் மனதுக்குள் தோன்றினால், அது பிரேக் அப்புக்கான வாசலைத் திறந்துவிட்டுவிடும். தொடர்ச்சியான சண்டையும் வாக்குவாதங்களும் ஆரோக்கியமான காதல் உறவில் நல்ல அம்சங்கள் கிடையாது.
கட்டளை
காதல் உறவில் கட்டளைகளுக்கு இடமில்லை. உங்கள் காதலர் தொடர்ந்து கட்டளைகளைப் பிறப்பித்தால், அது தவறானது. உங்களின் விருப்பத்தைக் கேட்டே எந்த முடிவையும் எடுக்க வேண்டும். உங்கள் காதலர் முடிவெடுக்க நீங்கள் உதவலாம். ஆனால், அது கட்டளையாக இருக்கக் கூடாது. ஆனால், கட்டளை தொடர்ந்தால், அதுவும் காதல் உறவில் ஆபத்தானதுதான்.
சுயநலம்
உங்கள் காதலர் எப்போதும் தன் நலனைப் பற்றி மட்டும் சிந்தித்து முடிவு எடுத்தால், அது சுயநலம். காதல் உறவில் எடுக்கும் முடிவுகள் இருவருக்கும் நன்மைத் தருவதாக இருக்க வேண்டும். ஒரு வேளை, தன் நலனை மட்டுமே முன்வைத்து உங்களிடம் பேசினால், காதல் உறவைத் தொடர்வது பற்றி பரிசீலிக்கும் நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள்.