காந்தாரா பட பாடல் திருட்டு விவகாரம்- இசையமைப்பாளர் விளக்கம்

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா என்ற கன்னட திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து வெளியிட்டும் வரவேற்பை பெற்றது. ரூ.17 கோடி செலவில் தயாரான இந்த படம் இந்தியா முழுவதும் இதுவரை ரூ.170 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. கே.ஜி.எப் படத்துக்கு பிறகு இந்திய அளவில் அதிகம் பேசப்படும் கன்னட படமாக காந்தாரா மாறி உள்ளது. இப்படத்தை ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.

இப்படத்தில் இடம்பெறும் ‘வராஹ ரூபம்’ பாடல் தங்களின் ‘நவரசம்’ ஆல்பமில் இருந்து திருடப்பட்டுள்ளதாக தைக்குடம் இசைக்குழுவினரின் சமூக வலைதள பக்கத்தில் குற்றம் சாட்டியது. மேலும் இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டிற்கு காந்தாரா படத்தின் இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் “இரண்டு பாடல்களும் ஒரே ராகத்தில் இசையமைக்கப்பட்டுள்ளதால் ஒன்று போல் தோன்றலாம்” என மறுப்பு தெரிவித்துள்ளார்.