காமன்வெல்த் தொடரில் இந்தியாவுக்கு 5-வது தங்கம்: பட்டத்தை தக்கவைத்தது ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி

நடப்பு காமன்வெல்த் தொடரில் இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இது இந்தியாவுக்கு கிடைக்கும் ஐந்தாவது தங்கமாகும். இந்த வெற்றியின் மூலம் காமன்வெல்த் அரங்கில் சாம்பியன் அந்தஸ்தை தக்க வைத்துள்ளது ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி.

சிங்கப்பூர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 3-1 என வாகை சூடியது இந்திய அணி. இந்திய அணியில் சரத் கமல், சத்யன் ஞானசேகரன், ஹர்மித் தேசாய் மற்றும் சனில் ஷெட்டி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இறுதிப் போட்டியில் மொத்தம் நான்கு ஆட்டங்கள் நடைபெற்றது. இரட்டையர் ஆட்டத்தில் சத்யன் ஞானசேகரன் மற்றும் ஹர்மித் தேசாய் இணையர் 3-0 என ஆட்டத்தை வென்றனர். தொடர்ந்து ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சரத்கமல் 1-3 என ஆட்டத்தை இழந்தார்.

பின்னர் சத்யன் ஞானசேகரன் தனது சிங்கிள்ஸ் ஆட்டத்தில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். ஹர்மித் தேசாய் இறுதி ஆட்டத்தை 3-0 என நேர் செட் கணக்கில் வென்றார். அதோடு இந்தியா தங்கம் வெல்வதையும் அவரது வெற்றி உறுதி செய்தது. கடந்த 2018-இல் நடைபெற்ற காமன்வெல்த் தொடரிலும் இதே மூவர் கூட்டணி தான் ஆடவர் அணியில் தங்கம் வென்றிருந்தது.