கார்ட்லெஸ் கடன் என்றால் என்ன தெரியுமா?
ஒருபக்கம் கடன் கிடைக்காமல் பலர் அலைந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கடன் வேண்டுமா? என கார்ப்பரேட் நிறுவனங்களும் வங்கிகளும் தினமும் போன் மூலம் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் கார்ட்லெஸ் கடன் என்ற கார்டு இல்லாமலேயே கடன் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இல்லை என்றால் இதோ தெரிந்து கொள்ளுங்கள்
அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எந்த டெபிட், கிரெடிட் கார்டும் இல்லாமல் கடனுக்குப் பொருள்களை வழங்கத் தயாராக உள்ளன.
இதை முதலில் அமேசான் தான் அறிமுகப்படுத்தியது. அடுத்தநாளே பிளிப்கார்ட்டும் அறிவித்தது. இந்தத் திட்டத்தில் ரூ. 60 ஆயிரம் வரைக்கும் கடனில் பொருள்களை வாங்க முடியும் என்று அறிவித்துள்ளது.
இதனை அறிமுகப்படுத்திய பிளிப்கார்ட் ஃபின்டெக் பிரிவின் தலைவர் ரவி கரிகிபதி பிளிப்கார்ட்டின் வாடிக்கையாளர்களில் 4.5 கோடி பேர் கடன் பெறுவதற்கான நிலையில் இல்லை என்கிறார். அதாவது அவர்களிடம் கிரெடிட் கார்டு இல்லாமல் இருக்கலாம், அல்லது அப்போதைக்கு பொருள்களை வாங்கும் திறன் இருக்காது. ஆனால், அவர்களால் பின்னாளில் அந்தப் பொருளை வாங்க முடியும்.
இந்த இடைவெளியை நாங்கள் சரிசெய்ய விரும்புகிறோம். அதற்காகவே இந்த கார்டு இல்லாமல் கடன் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறோம். இதன் மூலம் கடனில் பொருள்களை வாங்குவதை மேலும் எளிதாக்குகிறோம் என்கிறார் அவர்.
சரி எப்படி இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்வது, எல்லோருக்கும் இந்த வசதி கிடைக்குமா என்பதைப் பார்க்கலாம். இதுபோன்ற வசதிகளில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றவும் செய்யலாம் என்பதால் ரொம்பவே இந்தத் திட்டத்தைப் பாதுகாப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். கடன் பெறுவதற்கு தகுதியுள்ளவரா என்ற சோதனையில் தேர்வானால் மட்டுமே கடன் கிடைக்கும்.
இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள ஆதார் எண் சரிபார்த்தல் அவசியம். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்களுடைய மொபைல் எண்ணுக்கு ஒன் டைம் பாஸ்வோர்டு அனுப்பப்படும் அதையெல்லாம் கொடுத்தால் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
2000க்கும் குறைவான மதிப்புள்ள பொருள்களை வாங்குவதற்கு ஓன் டைம் பாஸ்வேர்டு சரிபார்த்தல் அவசியமில்லை. வாடிக்கையாளர்கள் இதற்கு முன் பொருள்கள் வாங்கியிருப்பதைப் பொறுத்து நமக்கான கடன் தொகையை நிர்ணயிக்கின்றனர்.
இந்த வசதி ஒரு இ-வாலட் போல செயல்படும். நம்முடைய தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு நமக்கான கடன் தொகையை பிளிப்கார்ட் செயலியில் வரவு வைக்கும். இந்தத் தொகை 60 நொடிகளில் நமக்கு வந்துவிடும். அந்தத் தொகையை வைத்து நாம் நமக்கான பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.
இந்தக் கடனை அடுத்த மாதத்தில் மொத்தமாகவோ, அல்லது எளிய தவணை முறையில் 3-12 மாதங்களிலோ செலுத்திக்கொள்ளலாம். இ-காமர்ஸ் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு எதுவுமே தேவையில்லை கடன் வழங்குகிறோம் என்கிற அளவுக்கு வந்துவிட்டார்கள். வாடிக்கையாளர்கள் உஷாராக தேவைப்படும் பொருள்களை மட்டுமே வாங்க வேண்டும். தேவையற்ற பொருள்களைக் கடனில் வாங்கிவிட்டு பின்னர் தேவையான பொருள்களை விற்று கடனை அடைக்கும் நிலைக்குப் போய்விடக்கூடாது.