காலத்தின் தேவை மாற்றுச் செங்கல்
கட்டிடக் கலையைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு விதமாக வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. அதனால் எவ்வளவு நன்மை இருக்கிறதோ அதே அளவு சில தீமைகளும் இருக்கின்றன. கட்டிடங்கள் கட்டுவதற்கான கட்டுமானப் பொருள்கள் முழுவதும் இயற்கையை அழித்துதான் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக ஆற்று மணல் கான்கிரீட் கலவையின் முக்கியமான பாகப் பொருள். மரம் கதவுகள் செய்யப்படுகிறது.
அதுபோல செங்கல் தயாரிப்புக்கான மண் பூமியிலிருந்துதான் தோண்டி எடுக்கப்படுகிறது. இதனால் மண் வளம் பாதிக்கப் படும். மேலும் செங்கலைச் சுட அதிக அளவு வெப்ப ஆற்றல் தேவைப்படும். விறகுகளை எரித்து அதன் மூலம் கிடைக்கும் வெப்ப ஆற்றலை இதற்காகப் பயன்படுத்துகிறார்கள். அதற்காக மரங்கள் பல முறிக்கப்படுகின்றன.
தொடக்கக் கட்டத்தில் செங்கல் பயன்படுத்துவது இந்த அளவுக்கு இல்லை. அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் மூலப் பொருள்களைக் கொண்டுதான் வீடு கட்டுவார்கள். ஆனால் இன்றைக்குப் பல கிலோ மீட்டர் தாண்டி இருக்கும் இடத்திற்கும் செங்கற்கள் கொண்டுசெல்லப்படுகின்றன. செங்கல்தான் கட்டிடங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என உறுதியான நம்பிக்கை நம்மிடையே நிலவுகிறது. இவற்றைத் தவிர்த்து சுற்றுச் சுழலுக்கு உகந்த பொருள்களைப் பயன்படுத்துவது காலத்தின் தேவை. இந்த மாற்றம் ஒரே நாளில் நிகழும் எனச் சொல்லிவிட முடியாது. ஆனால் இன்று நம்மிடம் மாற்றுச் செங்கல்லுடன் நாம் மாற்றத்தை முன்னெடுத்தால் செங்கற்களின் பயன்பாட்டைச் சிறிது சிறிதாகக் குறைக்க முடியும். செங்கல் உற்பத்தியாளர்களும் இம்மாதிரியான மாற்றுச் செங்கற்களைத் தயாரிக்க முன்வர வேண்டும்.
பல விதமான மாற்றுச் செங்கற்கள் இன்றைக்குச் சந்தையில் கிடைக்கின்றன. கான்கிரீட் சாலிட் ப்ளாக், கான்கிரீட் கேவிட்டி ப்ளாக், ப்ளை ஆஷ் செங்கல், சாய்ல் சிமெண்ட் ப்ளாக் ஆகியவை அவற்றுள் முக்கியமானவை. இம்மாதிரியான மாற்றுச் செங்கலை மிக எளிதாகத் தயாரிக்க முடியும். இதற்கான மூலப் பொருள்கள் மிக எளிதில் கிடைக்கின்றன.
அதாவது அனல் மின் நிலையக் கழிவுகளிலிருந்து இவற்றைத் தயாரிக்க முடியும். அங்கு கழிவாகும் பொருள்களை நாம் மீண்டும் பயன்படுத்துவதால் மறுசுழற்சி முறையில் இது சுற்றுச்சுழலுக்கு உகந்ததாகிறது. இதன் தயாரிப்புத் தொழில்நுட்பமும் மிக எளிதாகக் கிடைக்கிறது.
இது மட்டுமல்லாது இப்போது இரும்புக் கட்டுமானக் கற்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இரும்பு ஆலைகளில் இருந்து வெளிவரும் கழிவுகளில் இருந்து இவ்வகை செங்கல் தயாரிக்கப்படுகிறது. அங்கு இரும்பு ஆலைகளிலிருந்து வெளியேறும் பல லட்சம் டன் இரும்பை அப்புறப்படுத்த வேறு மாற்று வழியில்லாததால், அதை வேறு என்ன செய்யலாம் என யோசித்து, கட்டுமானப் பொருள்களாகப் பயன்படுத்தலாம் என ஆராய்ந்து முடிவெடுத்துவிட்டனர். இரும்பாக இருப் பதனால் அதன் உறுதிக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டியதில்லை.
மாற்றுச் செங்கல்லில் இத்தனை நன்மைகள் இருக்கின்றன. இருந்தும் மாற்றுச் செங்கற்கள் பரவலான பயன்பாட்டுக்கு ஏன் வரவில்லை என்றால் அதன் மீது நமக்கு இருக்கும் அவநம்பிக்கைதான். மாற்றுச் செங்கல் பயன்படுத்துவதால் கட்டிடத்திற்கு உறுதி கிடைக்காது, ஆரோக்கியத் திற்கும் நல்லதல்ல எனச் சில தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன. உண்மையில் செங்கல்லைக் காட்டிலும் மாற்றுச் செங்கல் ஆரோக்கியமானது; விலையும் குறைவு.