கால்நடை உதவியாளர் நியமனம் ரத்து: மீண்டும் தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு

கால்நடை உதவியாளர் நியமனம் ரத்து: மீண்டும் தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் கால்நடை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கால்நடை உதவியாளர் பதவிக்கு காலியாக இருந்த 1,577 பணியிடங்களுக்கு தமிழக அரசு சார்பில் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், கால்நடை உதவியாளர் பணி நியமனத்தில் முறைகேடு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருத்திகா என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 1,577 கால்நடை உதவியாளர் பணிகளுக்கு மே 10ஆம் தேதி நேர்முகத் தேர்வு தொடங்கியதாகவும், ஆனால் இதுவரை யாரையும் நியமிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

பணி நியமனத்தில் முறைகேடுகளை தவிர்க்க, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அல்லது அவரைப் போன்ற அதிகாரி தலைமையில் தேர்வு குழு அமைத்து, பணி நியமனம் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கிருத்திகா தனது மனுவில் கோரியிருந்தார். இந்நிலையில்,இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கால்நடைத்துறை சார்பில் வழங்கப்பட்ட அறிக்கையை அரசு தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், கால்நடை உதவியாளர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் 857 பணியிடங்கள் உருவாக்கப்பட்டதாகவும், அது பின்னர் மாநில அளவிலான தேர்வாக மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு மற்றும் சுழற்சி முறையை பின்பற்றுவதில் சிக்கல் நீடிப்பதால், மாநில அளவிலான பணி நியமன நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

எனவே, மீண்டும் மாவட்ட அளவிலான பணி நியமன நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிக்கையில் கூறப்பட்டிருந்ததால், இவ்வழக்கை முடித்துவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply