இன்று நாடு முழுவதும் 95 சதவீதத்திற்கும் அதிகமான தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்று வருவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு (கியூட்) நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, 2 கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதில் முதல் கட்ட தேர்வு கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடந்தது.
அதனைத்தொடர்ந்து 2-ம் கட்ட நுழைவுத்தேர்வு நேற்று தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் 2 ஷிப்டுகளில் தேர்வு நடக்கிறது. இந்த நிலையில் நேற்று, முதல் ‘ஷிப்ட்’டில் நடந்த தேர்வில், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் 17 மாநிலங்களில் உள்ள சில மையங்களில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாகவும், மேலும் பிற்பகலில் 2-வது ஷிப்ட்டில் (3 மணி முதல் 6 மணி வரை) நடைபெற இருந்த தேர்வு அனைத்து மையங்களிலும் ரத்து செய்யப்பட்டதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
இந்நிலையில், இன்று நாடு முழுவதும் உள்ள 95 சதவீதத்திற்கும் அதிகமான தேர்வு மையங்களில் இந்த பொது நுழைவுத்தேர்வு எவ்வித இடையூறுமின்றி நடைபெற்று வருவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
மேலும், இன்று தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட சிக்கலால், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மற்றும் ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் குறித்த முழு விவரம் இன்று அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது