கீரையின் முழு சத்துக்களை பெற என்ன செய்ய வேண்டும் என்பது தெரியுமா?
கீரைகள் சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் கீரை வாங்கி சமைத்து சாப்பிட்டால் மட்டும் நமக்கு முழு பலன் கிடைத்துவிடாது. கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அரைக் கீரை, பாலக் கீரை, தண்டுக் கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக் கீரை, முருங்கைக் கீரை மற்றும் புதினா ஆகியவை அதிக மக்களின் விருப்பப்பட்டியலில் இடம் பிடித்தவை..
கீரையில் அப்படி என்ன இருக்கிறது…
* கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம்.
* கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் `சி’ போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.
* இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் ஏ, குறைபாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் என்னும் பொருளானது உடலில் வைட்டமின் `ஏ’ ஆக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.
* கீரைகள் `பி காம்ப்ளக்ஸ்’ வைட்டமின்களையும் கொண்டுள்ளது.
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கீரையை மனிதர்கள் தினமும் உட்கொள்வது நல்லது. ஒவ்வொருவரும் தினமும் சாப்பிட வேண்டிய கீரையின் பரிந்துரைக்கப்பட்ட அளவு இதுதான்…
* பெண்களுக்கு 100 கிராம், ஆண்களுக்கு 40 கிராம்.
* பள்ளி செல்லும் (4-6 வயது) சிறுவர்களுக்கு 50 கிராம்.
* 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம்.
* கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
* பாக்டீரியா கிருமிகள், சிறு பூச்சிகள் மற்றும் மாசுப்பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலம் கீரைகள் மாசுபட வாய்ப்பிருக்கிறது. எனவே நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் கீரையை உபயோகிக்கக் கூடாது. இல்லாவிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் வரலாம்.
* கீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரையிலுள்ள முக்கிய சத்துப்பொருளான கரோட்டின் சிதைந்து விடும். கரோட்டின் பார்வைத்திறனுக்கு உதவும் சத்துப்பொருளாகும்.
* கீரைகளை சமைக்க பயன்படுத்தும் தண்ணீரை கொட்டிவிடக் கூடாது. கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடி வைக்க வேண்டும்.
* கீரைகளை வெயிலில் உலர்த்தக் கூடாது. அப்படி செய்தால் அவற்றிலுள்ள கரோட்டீன்கள் வீணாகி விடும்.
* கீரைகளை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
* கோடையில் குளிர்ச்சி தரும் கீரைகளை சமைத்துச் சாப்பிடுங்கள்.
* நாள்தோறும் நம் உடலுக்கு அவசியமான சத்தாக சேர்க்கப்பட வேண்டிய கீரையை நாமும் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தால் நலமே!