குஜராத் தேர்தல்: பாகிஸ்தானும் காங்கிரசும் கூட்டணியா? பிரதமர் ஆவேசம்
குஜராத் தேர்தலில் காங்கிரசும் பாகிஸ்தானும் கூட்டணி சேர்ந்து பாஜகவை வீழ்த்த நினைப்பதாக பிரதமர் மோடி ஆவேசமாக தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.
குஜராத் சட்டமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் அங்கு இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 14ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நேற்று பலன்பூரில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், பாகிஸ்தான் தூதர், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர், இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டதாக செய்திகள் கிடைத்துள்ளது.
இந்த கூட்டத்திற்கு மறுநாள் தான், மணிசங்கர் தன்னை இழிவானவர் என்று விமர்சித்தார். குஜராத் முதல்வராக காங்கிரசை சேர்ந்த அகமது படேல் போட்டியிடுவதற்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது என்பதும் உண்மை. எனவே பாகிஸ்தான் ஆதரவு அகமது படேலை முதல்வராக்க குஜராத் தேர்தலில் காங்கிரசும் பாகிஸ்தானும் சேர்ந்து பாஜகவை வீழ்த்த நினைக்கின்றது. ஆனால் அது ஒரு போதும் நடக்காது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.