குடுவைக்குள் ஒரு காடு

குடுவைக்குள் ஒரு காடு

1.5நகரங்களில்அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகியவுடனே தோட்டங்கள் காணாமல் போய்விட்டன. தோட்டம் வைக்க ஆர்வமிருந்தும் இடப்பற்றாக்குறையால் தவிக்கும் தோட்டப்பிரியர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது ‘டெர்ரரியம்’(terrarium). கண்ணாடிக் குடுவைகளில் செடிகள் வளர்க்கும் இந்த முறை முதன்முதலில் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் தொடங்கியது. அதற்குப் பிறகு, இப்போது உலகம் முழுவதும் இந்த ‘டெர்ரரியம்’முறை பிரபலமடைந்துவருகிறது.

சென்னைவாசிகளும் இப்போது ‘கண்ணாடிக் குடுவை’ தோட்டங்களை அதிகளவில் விரும்பத் தொடங்கியிருக்கின்றனர் என்கிறார் ‘சோல் பவ்ல்ஸ்’ (Soul Bowls) நிறுவனர் நதாஷா ராஜ் வர்கீஸ். தோட்டக்கலையில் இருந்த ஆர்வத்தால், இவர் பொழுதுபோக்காக ‘டெர்ரரியம்’ உருவாக்கி நண்பர்களுக்குப் பரிசளிக்கத் தொடங்கியிருக்கிறார். அதற்கு நண்பர்களிடம் கிடைத்த வரவேற்பு இவரைத் தனியாக ‘சோல் பவ்ல்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்க வைத்திருக்கிறது. “பள்ளியில் படிக்கும்போதே எனக்குத் தோட்டக்கலையில் ஆர்வம் அதிகம். அதுதான் என்னை, நான் செய்துகொண்டிருந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறை வேலையை விட்டுவிட்டு இப்படி முழுநேரமாகத் தோட்டங்களை உருவாக்கவைத்திருக்கிறது” என்கிறார் நதாஷா.

கடந்த ஒரேயாண்டில் இவர் இருநூறு ‘டெர்ரரியங்களை’ உருவாக்கியிருக்கிறார். அத்துடன் மூன்று கண்காட்சிகளையும் நடத்தியிருக்கிறார். வீடுகள், அலுவலகங்கள், கடைகள் போன்றவற்றுக்கு உட்புறத் தோட்டங்களை அமைப்பதற்கான வடிவமைப்பாளராகவும் செயல்பட்டுவருகிறார். கண்ணாடிக் குடுவைகள், தேநீர்க் கோப்பைகள், பொம்மைகள், மீன் தொட்டிகள் எனப் பல புதுமையான வடிவங்களில் இவர் தோட்டங்களை உருவாக்குகிறார். “இப்போது மக்கள் கான்கிரீட் கட்டிடக் காடுகளுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருப்பதால் எப்படியாவது ஒருவிதத்தில் பசுமையை வீட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்று விரும்புகின்றனர்.

அதுதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த ஒரு வழக்கம் இப்போது மீண்டும் டிரண்டாக ஆகியிருக்கிறது. அத்துடன், இந்தக் குடுவைத் தோட்டங்களைப் பராமரிப்பது மிகவும் எளிது. மக்கள் இவற்றை விரும்புவதற்கு அது ஒரு முக்கியக் காரணம்” என்கிறார் இவர்.

இந்தக் குடுவைத் தோட்டங்களை உருவாக்க நீர்ச் செடிகள் , கள்ளிச் செடிகள் (Cactus), சிலந்திச் செடிகள்(spider plants), பெரணிச் செடிகள்(ferns) போன்றவற்றைப் பயன்படுத்துகிறார் நதாஷா. “இந்த குடுவைகளைப் பரிசளிக்கும் டிரண்டும் இப்போது சென்னையில் வேகமாக வளர்ந்து வருகிறது. சிறிய இடத்தில் வளர்க்கலாம். இவற்றைப் பராமரிக்கத் தண்ணீர் சில சொட்டுகளில் இருந்து சில ஸ்பூன்கள் வரைதான் தேவைப்படும். 500 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரையிலான விலையில் இவை கிடைக்கின்றன” என்று சொல்கிறார் இவர்.

வீட்டுக்குள் தோட்டம் அமைக்க சில யோசனைகள்

இடம்

உட்புறத் தோட்டம் அமைக்க உங்களுடைய வீட்டில் சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். இந்த இடம் போதுமான சூரிய வெளிச்சம் கிடைக்கும்படி அமைந்திருக்க வேண்டும். செடிகளுக்கு வசதியான சூழல் உருவாகும்வரை, இரண்டு மூன்று தடவை இடத்தை மாற்றிப் பார்ப்பதில் தவறில்லை.

செடிகள் தேர்வு

உங்கள் வீட்டின் உட்புறத் தோட்டத்துக்குத் தேவைப்படும் சூரியவெளிச்சம், நிழல் பற்றி தெரிந்துகொண்ட பிறகு, செடிகளைத் தேர்வுசெய்யுங்கள். செடிகளை எங்கே வாங்குவது என்று குழம்பத் தேவையில்லை. உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் நர்சரியிலேயே வாங்கலாம். அங்கேயிருக்கும் தோட்டக் கலைஞர்களைக் கலந்து ஆலோசித்து உங்களுக்கு வீட்டின் இடத்துக்குப் பொருந்தக்கூடிய செடிகளை வாங்குங்கள்.

நதாஷா ராஜ் வர்கீஸ்

சரியான தொட்டிக்கலவை

நீங்கள் வாங்கும் செடிகளுக்கு ஏற்ற தொட்டிக்கலவையை வாங்குவது மிகவும் முக்கியம். நர்சரிகளில் மண், களிமண், உரம் போன்ற பாரம்பரியமான கலவைகளோடு இப்போது பல புதுமையான தொட்டிக் கலவைகளும் கிடைக்கின்றன. ஆனால், உங்களுக்கு ஆர்வமிருந்தால் நீங்கள் இந்தக் கலவைகளை வீட்டில் தயாரிக்கலாம். மட்கிய மரப்பட்டைகள், தேங்காய் நார்கள், மரக்கரி, பளிங்குக்கற்கள் (perlite), வெர்மிகுலைட் போன்ற பொருட்களை வைத்து தொட்டிக் கலவையை நீங்களே உருவாக்கலாம்.

அதிக தண்ணீர் ஆபத்து

உங்கள் செடிகளின் கலவையை முதலில் தொட்டுப் பாருங்கள். அது காய்ந்துபோயிருந்தால் மட்டும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுங்கள். ஏனென்றால், உட்புறச் செடிகள் சீக்கிரம் இறந்துபோவதற்கு முதல் காரணம் அதிகமாகத் தண்ணீர் ஊற்றுவதுதான்.

அதிகமாகத் தண்ணீர் ஊற்றுவதற்கான அறிகுறிகள்

தண்டிலிருந்து இருந்து இலைகள் வரை வாடிப்போயிருத்தல், கீழேயிருக்கும் இலைகள், உதிர்ந்துபோதல், நிறம் மாறுதல், செடி வளர்ச்சி நின்றுபோதல், செடியின் பசுமை குறைதல் போன்றவை.

குறைவாகத் தண்ணீர் ஊற்றுவதற்கான அறிகுறிகள்

இலைகளின் நுனிப்பகுதிகள் வாடிப்போதல், மண் காய்ந்துபோதல், இலைகளின் விளிம்புகள் பழுப்புநிறமாக மாறுதல், இலைகளோ, மலர்களோ முதிர்ச்சியடையாமல் உதிர்தல், இலைகள் தழைக்காமல் போதல் ஆகிய குறைபாடுகள் தண்ணீர் குறைவாக ஊற்றுவதால் ஏற்படக்கூடியவை.

புதுமையான தொட்டிகள்

உங்கள் வீட்டின் உட்புற அலங்காரத்தோடு ஒத்துப்போகும் தொட்டிகளைத் தேர்ந்தெடுங்கள். இந்த மாதிரியான அலங்காரத் தொட்டிகள் இப்போது கடைகளிலும், ஆன்லைன் தளங்களிலும் கிடைக்கின்றன. இது தவிர, உங்களுடைய பழைய தேநீர் கோப்பைகள், தேநீர் சாடிகள், கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டில்கள், பீங்கான் பாத்திரங்கள் போன்றவற்றையும் தொட்டிகளாகப் பயன்படுத்தலாம்.

அழகும் அலங்காரமும்

பாறைகள், கூழாங்கற்கள், நீரூற்றுகள், சிற்றுருவ சிற்பங்கள் போன்றவற்றை உங்கள் உட்புறத் தோட்டத்தை அமைக்கப் பயன்படுத்தலாம். அத்துடன், செடிகளை அழகாக வைத்திருக்கத் தேவையில்லாத கிளைகளைக் குறிப்பிட்ட இடைவெளியில் நறுக்க வேண்டும். அவை எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

மேலும் விவரங்களுக்கு: https://www.facebook.com/soulbowlsindia/

Leave a Reply